பித்தம் ஏற்படுத்தும் காமாலை

2/07/2014 07:51:00 PM

கல்லீரல் கோளாறுகளால் உருவாகும் மஞ்சள் காமாலை பரவலாக உள்ள ஒரு நோய். ஆயுர்வேதம் இதை "காமாலா" என்கிறது. பிறந்த குழந்தைக்கு கூட ஏற்படும். மஞ்சள் காமாலை ஒரு வேதனையான நோய்.

பெயருக்கேற்றபடி, சரீரம், கண்களில் வெள்ளைப்பகுதி இவை மஞ்சள் நிறமாக மாறும். இரத்தத்தில் அதிகமாக பித்த நீர் தேங்குவதால் இந்த நிலை ஏற்படும்.

உடலின் பெரிய அவயமான கல்லீரல் பல முக்கிய வேலைகளை செய்யும். அதில் ஒன்று பித்த நீரை சுரப்பது. இந்த நீர் ஜீரணத்திற்கு தேவை
மண்ணீரல், ரத்தத்திலிருந்து பழைய, சிதைந்து போன சிவப்பணுக்களை வெளியேற்றும் வேலையை தொடர்ச்சியாக செய்து கொண்டுவரும். இந்த நிகழ்வின் போது, ஹீமோகுளோபின் (ரத்த ஆக்சிஜனை உட்கொண்டிருக்கும்) சிதைந்து, கரும்பச்சை - மஞ்சள் நிறமான, வர்ணம் கொடுக்கும் பொருளான பிலிரூபின் (Bilirubin) ஆக மாறும். இந்த பிலிரூபின் ரத்தம் வழியாக கல்லீரலை சென்றடையும். இங்கு 'பிலிரூபின்', பித்த நீரின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டு, பித்த நீருடன் சிறுகுடலுக்கு போகும். இந்த பிலிரூபின் பித்த நீரை சேர முடியாமல் போனால், ரத்தத்திலேயே தங்கிவிடுகிறது. அதிக பிலிரூபின் தோலில் படிந்து மஞ்சள் நிறத்தை கொடுத்து, காமாலையை தோற்றுவிக்கிறது.

காரணங்கள்

கல்லீரலின் உள்ளேயோ, வெளியிலேயோ ஏற்படும் கோளாறுகளால் தான் பிலிரூபின் ரத்தத்தில் தேங்கிவிடுகிறது. கல்லீரல் சுழற்சி கல்லீரலின் செயல்பாடுகளை முடக்கும். பிலிரூபினை பித்த நீருடன் சேர்க்க விடாமல் செய்யும். இந்த காரணம் தவிர பித்த நீர்ப்பையில் "கற்கள்" இருந்தாலும், பித்த நீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு விடும். வீக்கம், கட்டி இவைகளாலும் அடைப்பு ஏற்படலாம்.

தவிர அதிக அளவில் ஹீமோ குளோபின் சிதைந்து போனால், மிக அதிக அளவில் பிலிரூபின் சுரந்து கல்லீரலால் சமாளிக்க முடியாமல் போகும். குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை வருவதின் காரணம் இது.

பித்த நீர் நாளங்கள் அடைபடுவதற்கு கல்லீரல் வீக்கமும் (Hepatitis) வைரஸ் கிருமிகளும் காரணமாகலாம். சோகை, டைபாய்டு, மலேரியா, ஷயரோகம் இவைகளும் மஞ்சள் காமாலைக்கு காரணமாகலாம். ரத்தம் ஏற்றும் போதும், காமாலை கிருமிகள் நுழைந்து விடலாம்.

3 வித மஞ்சள் காமாலை உண்டு அவை

கல்லீரலிருந்து பித்த நீர் (பிலிரூபின் சேர்ந்தது) சிறுகுடலை சேரமுடியாமல் போவது - காரணம் பித்த நீர் பாதை 'கற்களால்' தடுப்பு ஏற்படுவது, அல்லது சில மருந்துகளால் ஏற்படும் கல்லீரல் நோய். இதை தடைப்பட்ட மஞ்சள் காமாலை Obstructic Jaundice என்பார்கள். சிறுநீர் கரும்மஞ்சள் சிறுநீர். பிறப்புறுப்பில் அரிப்பு இவை ஏற்படும். மலம் வெள்ளைநிறமாக இருக்கும்.

கல்லீரல் செல் காமாலை:- (Hepato cellular Jaundice) கல்லீரலின் செல்கள், ரணம், வீக்கம் உண்டாக்கும் ஹெபாடைடீஸ் (Hepetitis) வியாதிகளால் பாதிக்கப்பட்டால், கல்லீரலுக்கு பிலிரூபினை பயன்படுத்தும் திறமை போய்விடுகிறது. எனவே பிலிரூபின் ரத்தத்திலேயே தங்கிவிடுகிறது. சிறுநீர் கருமஞ்சளாகவும், மலம் சாதாரண நிறத்திலும் இருக்கும்.

ஹிமோலிடிக் காமாலை:- அதிகப்படியாக இரத்த சிவப்பு அணுக்கள் (Haemolytic Jaundice) அழிக்கப்பட்டால் உண்டாவது. சிறுநீரும் மலமும் சாதாரண நிறத்தில் இருக்கும்.

அறிகுறிகள்

முதல் அறிகுறி தோல் மற்றும் கண்களின் வெள்ளைப் பகுதிகள் மஞ்சளாக காணப்படும்.

சிறுநீர் கருமஞ்சள் நிறத்துடனும், மலம் வெள்ளையாகவும் காணப்படும்.

தோலில் அரிப்பு

பசியின்மை, ஜுரம், வாந்தி, பலவீனம், களைப்பு

கல்லீரல் பகுதியில் இலேசான வலி

வாய் துர்நாற்றம்

நோயின் காரணம் பித்த தோஷத்தை உண்டாக்கும் உணவினால் காமாலை ஏற்படும். நோயாளியின் கண்கள், சருமம், நகங்கள் மற்றும் முகம் மஞ்சள் நிறமாகும். மலம், சிறுநீர் இவை சிவப்பு - மஞ்சள் நிறமாக இருக்கும். அஜீரணம், பலவீனம், பசியின்மை ஏற்படும். மலம் வெள்ளை நிறமாக இருந்தால், பித்த நீர் கபத்தால் தடைப்பட்டது என்று அறியலாம். கனமான, இனிப்பான உணவு, அதீத உடலுழைப்பு, இயற்கை கடன்களை அடக்குவது போன்ற செயல்களால், வாதம் பாதிக்கப்பட்டு, கபத்துடன் சேர்ந்து, பித்தநீர் பாதையை அடைக்கும் இதனால் மஞ்சள் நிற அறிகுறிகள் தென்படுகின்றன.

ஜுரம், பலவீனம், அஜீரணம் போன்றவை ஏற்படுகின்றன. காமாலை நோயாளிகள் தானியங்கள், சூடான, உப்புடைய 'சூப்' கள். பறவை மாமிசம், கொள்ளு, தேன் சேர்த்த நாரத்தை பழச்சாறு (Citrus Medica) திப்பிலி, மிளகு, இஞ்சி போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். மஞ்சள் நிறம் மறையும் வரை இந்த உணவுகளையும், மருத்துவத்தையும் கடைப்பிடிக்கவேண்டும். பழங்காலத்திலிருந்து இன்று வரை மஞ்சள் காமாலை நோய்க்கு ஆயுர்வேத மருந்துகளே பயன்பட்டு வருகின்றன.

பித்தம் குணமாக


ஆயுர்வேதத்தில் முதலில் உடலின் விஷங்களை போக்க மல அத்தி சிகிச்சை கையாளப்படும். பேதிமருந்துகள் கொடுக்கப்படும். இதனால் கல்லீரலின் 'பாரம்' குறையும். தொன்றுதொட்டு மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்தாக பிரசித்தி பெற்றது கீழா நெல்லி (Phyllanthus Niruri) கீழா நெல்லியின் முழுச் செடியையும் எடுத்து அரைத்து காலை வெறும் வயிற்றில், 10 கிராம் அளவில் சாப்பிட்டுவரலாம். கீழா நெல்லி மாத்திரைகளே தற்போது கிடைக்கின்றன. 

சிவதை (Operculina tupethum) மற்றும் கடுகரோகிணி (Picrorhiza kurroa) இவற்றின் பொடிகள் அல்லது கஷாயங்களுடன், மஞ்சள் காமாலைக்கான ஆயுர்வேத சிகிச்சை தொடங்குகிறது. பேய் புடலையும், நிலவாகையும் கூட பயன்படுத்தப்படுகின்றன. இவை மலத்தை வெளியேற்றுவதால், உடலின் நச்சுப் பொருட்கள் நீக்கப்படுகின்றன.

ஆயுர்வேதத்தில் தற்போது முன்னேற்றமடைந்த சிறந்த மருந்துகள் மஞ்சள் காமாலைக்கென தயாரிக்கப்படுகின்றன. இவை மஞ்சள் காமாலையால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பையும் தவிர்க்கின்றன. 

நோயாளிக்கு முழு ஓய்வு தேவை

பத்திய உணவு

மஞ்சள் காமாலைக்கு பத்திய உணவு மிக அவசியம்.

எல்லா வித கொழுப்புள்ள உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். மசாலா, கொழுப்பு, எண்ணை பதார்த்தங்களை சாப்பிடக் கூடாது. எளிதில் ஜீரணமாகும்,. புதிதாக சமைத்த, சூடான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
சட்னி, ஊறுகாய், எண்ணையில் பொறித்த உணவுகள், கூடாது.

நிறைய பழச்சாறு, கரும்புச் சாறு கொடுக்கலாம். மோர் மிக நல்லது. எளிதாக ஜீரணமாகாத பருப்பு போன்றவற்றை தவிர்க்கவும். உலர்ந்த திராட்சை, பேரிச்சைப்பழம், பாதாம் இவைகளை சிறிய அளவில் கொடுக்கலாம். மஞ்சள் காமாலையை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அறிகுறிகளை கண்ட உடனேயே மருத்துவரிடம் செல்லவும்.

Thanks
Ayurveda today - Monthly Magazine

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook