பீர் நன்மை Vs தீமை
2/07/2014 07:54:00 PMபீ ர் என்பது பழமையான மது பானங்களில் ஒன்றாகும். சுமார் 7000 ஆண்டுகளாக உபயோகத்தில் இருக்கும் உலகின் மிகப் பழமையான மது பானம். 4000 ஆண்டுகள் கிறிஸ்துவிற்கு முன்பாகவே பீர் வழக்கத்தில் இருந்துள்ளதாக அக்காலக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அக்கால எகிப்தியர்கள் தான் முதலில் மாவுச்சத்துள்ள பொருட்கள் கெட்டுப் போவதால் (புளித்துப் போவதால்) ஒரு விதமான புளித்த பொருளாக மாறி பருகும் பொழுது போதை தருகின்றது எனக் கண்டுபிடித்தவர்கள். அதே சமயத்தில் உலகின் பல்வேறு நாட்டினராலும் பல விதமான பொருட்கள் கெட்டுப் போவதால் பல விதமான போதைப் பொருட்கள் கிடைக்கின்றது என கண்டறியப்பட்டது. அதன் பின்னர் சுமார் 4000 ஆண்டுகள் பீர் மற்றும் பிற மது பானங்கள் வீட்டிலேயே தயார் செய்யப்பட்டு தனி மனிதர்களின் தேவைக்கு மட்டுமே உபயோகிக்கப்பட்டு வந்தது. பின்னர் கி.பி. 700 ல் ஏற்பட்ட தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டன. ஐரோப்பாவிலும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலும் தான் முதன் முதலாக தொழிற்சாலைகளில் மது வகைகள் தயாரிக்கப்பட்டன. பின்னர் அது 19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட விஞ்ஞான வளர்ச்சியால் விரிவாகவும் திறம்படவும் செய்யப்பட்டது. விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாகத் தரமான வகைகளும் அதிகமான உற்பத்தியும் செய்யப்பட்டு அனைத்து உலக நாடுகளுக்கும் பரவி உள்ளது.
பொதுவாக பீர் முளைகட்டிய பார்லி அரிசியை அரைத்து புளிக்க வைக்கும் பொழுது கிடைக்கின்றது. இது பார்லி அல்லாத பிற மாவுச்சத்து மற்றும் சர்க்கரைச் சத்து மிகுந்த பொருட்களை ஈஸ்ட் (Yeast) எனும் நுண்கிருமியைக் கொண்டு புளிக்க வைக்கும் பொழுது கிடைக்கின்றது. ஒவ்வொரு நாட்டிலும் அவரவர்கள் பழக்கத்திற்கு ஏற்ப பார்லி அல்லாமல் பிற பொருட்களாலும் தயாரிக்கப்படுகின்றது. பார்லி அல்லாமல் வெள்ளைச் சோளம், தினை அரிசி, போன்றவற்றிலும் தயாரிக்கப்படுகின்றது. ஆப்ரிக்காவில் அதிகமாகக் கிடைக்கும்'கசாவா' (Casava) எனும் கிழங்கிலிருந்தும் பிரேஸில் நாட்டில் உருளைக்கிழங்கிலிருந்தும் வட அமெரிக்க நாடுகளில் ஒரு வகை சோற்றுக் கற்றாழை களிலிருந்தும் கூட பீர் தயாரிக்கப்படுகின்றது. அதிக மாவுச் சத்து நிறைந்த எளிதாகக் கிடைக்கக் கூடிய எவ்வகை பொருளிலும் பீர் தயாரிக்கலாம்.
மாவுச் சத்து நிறைந்த பொருட்களை தண்ணீரில் சில விதமான என்சைம்களுடன் சேர்த்து ஊற வைக்கப்படுகின்றது. அதன் பின் அதனுடன் அவரவர்களின் தயாரிப்பு உக்திக்கேற்ப சில பொருட்கள், மூலிகைகள், பழங்கள், பழ ரசங்கள் கலக்கப்படுகின்றது. அதன் பின்னர் அந்த திரவத்துடன் ஈஸ்ட் எனும் பூஞ்சாள கிருமி சேர்க்கப்படுகின்றது. இது சில நாட்களில் புளித்து விடுகின்றது. இது மேலும் கெடாமல் இருக்க சில வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றது. அதனை வடிகட்டி எடுத்து கசப்பு சுவையூட்டுவதற்காக ஹாப்ஸ் எனும் அதிக கசப்புள்ள மூலிகை சேர்க்கப்படுகின்றது. இது சுவையை நிர்ணயிக்க உதவுகின்றது. இந்த ஹாப்ஸ் தான் பீரில் கசப்பு கலந்த இனிப்பு சுவைக்கு காரணம்.
பிற மது பானங்களும் இதே முறையில் தான் செய்யப்படுகின்றது. ஆனால் அவை திராட்சை (ஒயின்), தேன் (நீட்), முந்திரிப்பழம் (ஃபென்னி), பழக்கலவை (விஸ்கி, பிராந்தி) போன்ற மாவுச்சத்து அதிகமில்லாத பிற பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. அவை முடிவில் காய்ச்சி வடிக்கும் Distillation Method முறை மூலமாக அவற்றின் ஆல்கஹால் மட்டும் பிரித்தெடுக்கப்பட்டு பின்னர் சுவையூட்டப்பட்டு அவரவர்களின் தரத்திற்கு ஏற்ப கலவையாக விற்பனை செய்யப்படுகின்றது.
உலகின் பல நாடுகளிலும் பீர் உபயோகத்தில் இருந்தாலும் அதிக பீர் குடிக்கும் மக்களைக் கொண்ட நாடு அமெரிக்கா தான் அங்கு ஆண்டொன்றிற்கு சராசரியாக ஒரு மனிதன் 100 லிட்டர் பீர் குடிக்கின்றான்.
பீரில் இருக்கக் கூடிய அடிப்படைப் பொருட்கள், தண்ணீர், மாவுச்சத்து, ஈஸ்ட் போன்றவை தான். இவை புளிப்பதால் ஆல்கஹால் உற்பத்தி ஆகின்றது. சுவை சேர்ப்பதற்காக சில மூலிகைகளும் ஹாப்சும் சேர்க்கப்படுகின்றன.
உலககெங்கும் பீர் பல சுவைகளிலும் பல ரகங்களிலும் கிடைக்கின்றது. ஆப்பிள், பைனாப்பிள் போன்ற சுவைகளில் ஆரம்பித்து வண்ண வண்ணமாக பல விதங்களில் கிடைக்கின்றன. பீர் பொதுவாக தயாரிப்பின் போது பயன்படுத்தக் கூடியது. ஈஸ்ட்டின் குணங்களைக் கொண்டே தரம் பிரிக்கப் படுகின்றது. ஈஸ்ட்டின் குணம் தரத்தினை நிர்ணயிக்கின்றது.
மேலோட்டமாகச் சொல்ல வேண்டுமா னால் இனிப்பு சுவை கொண்ட பீர்கள் 'ஏல்' - கிலிணி எனவும் கசப்பு சுவையுள்ள பீர்கள் 'லேகர்' - லிகிநிணிஸி எனவும் கூறப்படுகின்றன. புளிக்க வைக்கும் போது அப்பாத்திரத்தின் மேல் பரப்பிலிருந்து எடுக்கப்படும் பீர் இனிப்பு சுவை கொண்ட ஏல் வகையாகவும் அடிப்பகுதியிலிருந்து எடுக்கப்படும் பீர் ஸ்ட்ராங்கான சுவை கொண்ட லேகர் ரகமாகவும் இருக்கும்.
ஆல்கஹால் அளவு
பொதுவாக பீரில் 3% முதல் 30% வரை ஆல்கஹால் அளவு இருக்கும். இது நாட்டுக்கு நாடு தயாரிப்பாளருக்கு தயாரிப்பாளர் தரத்திற்குத் தரம் மாறுபடக் கூடியது. மேலை நாடுகளில் பீர் 1% - 4% வரை ஆல்கஹால் அளவைக் கொண்டதாகவே இருப்பதால் அவர்கள் பல சமயங்களில் தண்ணீர் மாற்றாக பயன்படுத்துகின்றனர். வீடுகளில் குளிர்சாதனப் பெட்டிகளில் வாங்கி வைத்துப் பருகுகின்றனர். ஆனால் இந்தியாவில் கிடைக்கும் பீரில் 6% - 30% வரை ஆல்கஹால் அளவு உள்ளது.
தன்மை
ஈஸ்ட் நுண்கிருமியில் அதிகமாக வைட்டமின் பி சத்துக்கள் உள்ளதால் அவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பீர்களிலும் நல்ல சத்துக்கள் பல அடங்கியுள்ளது.
ஆனால் ஆல்கஹாலுடன் சேர்த்து சத்துக்கள் இருப்பதால் ஆல்கஹாலின் தீய குணங்களும் பருகுபவருக்குக் கிடைக்கும்.
குறைவான அளவு பீர் பருகும் பொழுது மனம் உற்சாகமடைகின்றது. மனத்தொய்வு விலகுகின்றது. புத்துணர்ச்சி பீரிட்டு எழுகின்றது.
ஆனால் அதுவே அளவிற்கு அதிகமாகும் பொழுது இதயத் தாக்கு, பக்கவாதம், இரத்த அழுத்தம் போன்ற பிற பிரச்சனைகளை ஆரம்பித்து விடுகின்றது. போதையை நாடுபவர்கள் குறைவான போதையே கிடைப்பதால் அதிகம் பருக வேண்டுயுள்ளது. அதனால் அவர்களுக்கு தொந்தி விழுகின்றது.
மது பானங்கள் ஜீரணசக்தியை ஊக்கப்படுத்தி அமில சுரப்பை அதிகரிப்பதால் அதிகமாக பசிக்கின்றது எனவே அதிகமாக தேவையற்ற அளவிற்கு மீறிய உணவு வகைகளை உண்ண நேரிடுகின்றது. இதனால் உடல் எடை அதிகரிக்கின்றது. காற்றடைக்கப்பட்டு மட்டுமே பீர் விற்பனை செய்யப்படுவதால் வயிற்றினுள் கார்பானிக் அமிலம் அதிகம் சேர வாய்ப்புள்ளது.
கார்பானிக் அமிலம் அஜீரணத்தை, வாய்வுத் தொல்லையை, நெஞ்செரிச்சலை, மலச்சிக்கலை, உண்டாக்கக் கூடியது.
கசப்புத் தன்மைக்காக சேர்க்கப்படும் ஹாப்ஸ் ஒரு வகை போதைப் பொருளானதால் கல்லீரல் அதிக வேலை செய்து அதன் நச்சுத்தன்மையை சமன் செய்ய வேண்டியுள்ளது. பசியால், அதிகம் சாப்பிடுவதால் தேவையற்ற கொழுப்புச் சத்து உடலின் உள் புகுகின்றது. இதனால் கொலெஸ்ட்ரால் அளவு பாதிக்கப் படுகின்றது.
அடிக்கடி பீர் குடிக்கும் பழக்கம் உடையவர்களது கல்லீரல் அதிக வேலைப்பளுவால் பாதிக்கப்படும். எனவே அதனால் நச்சுக்களை வெளியேற்றி சமன் செய்ய இயலாது அதுவே நாளடைவில் கல்லீரல் கோளாறுகளுக்கு வழிவகுத்திடும். சிறுநீரகக் கற்கள், பித்தப்பைக்கற்கள் போன்றவை கூட ஏற்படலாம்.
பீர் குடித்து இத்தனை பிரச்சனைகளையும் விலைக்கு வாங்குவதை விட பீர் குடிக்காமல் இருப்பதே நல்லது தானே.
Thanks
Ayurveda today - Monthly Magazine
0 comments