தற்போது நடைமுறையில் உள்ள மோட்டார் வாகனச் சட்டத்தை, முழுக்க முழுக்க காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மட்டுமே அமல்படுத்தும் அதிகாரம் பெற்றிருக்கிறார்கள். ஆனால், இதில் சாலைகள், சாலை மேம்பாடுகள் பற்றி எதுவும் கிடையாது. ஆனால், புதிய வரைவு மசோதாவின் தலைப்பே, 'சாலைப் போக்குவரத்து பாதுகாப்புச் சட்டம் - 2014’ என்பது தான். இது, மொத்தம் 15 பகுதிகள், 340 செக்ஷன்கள், 4 ஷெட்யூல்கள் கொண்டுள்ளது.
எந்த ஒரு சட்டமும் அமல்படுத்துவதற்கு முன்பு, ஒரு வரைவாகத் தயாரிக்கப்பட்டு, அது பொதுமக்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், சட்டக் குழுக்கள் ஆகியோரின் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதன் பின்பு தேவைப்படும் திருத்தங்கள் செய்து, நாடாளுமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டு நிறைவேறிய பிறகுதான் சட்டமாகும்.
புதிய மோட்டார் வாகனச் சட்ட வரைவில் இடம்பெற்றுள்ள மாறுதல்கள் அனைத்தும், இந்தக் காலகட்டத்துக்கு ஏற்றதுபோல, அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது.
இந்தப் புதிய சட்ட வரைவின்படி, தேசிய அளவிலான வாகன ஒழுங்குபடுத்துதல் மற்றும் சாலைப் பாதுகாப்பு அதிகாரம் கொண்ட ஒரு தேசிய கமிட்டிதான், இந்தியா முழுவதும் சாலைப் பாதுகாப்பு மற்றும் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியைச் செய்யும்.
இந்தக் கமிட்டி பயணிகள் பயணம் செய்யும் பஸ், வேன் போன்ற வாகனங்களின் அமைப்பு, இருக்கைகளின் அமைப்பு, பாதுகாப்பு போன்ற பல அம்சங்களை நெறிப்படுத்தும். நெறிமுறைகளுக்குக் கட்டுப்படாத வாகனங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் அதிகாரம், இந்த தேசிய கமிட்டிக்கு உண்டு.
ஹெல்மெட் கட்டாயம்...
இந்தியா முழுவதும் இரண்டு சக்கர வாகன ஓட்டுநர் மற்றும் பயணி இருவருமே, ஹெல்மெட் அணிவது கட்டாயம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காரில் குழந்தையை முன் சீட்டில் உட்காரவைத்தால்...
எட்டு வயதுக்குக் குறைவான குழந்தையை காரின் முன் சீட்டில் உட்காரவைத்துக்கொண்டு செல்லக் கூடாது. எட்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தை முன் சீட்டில் உட்காரலாம். ஆனால், கட்டாயம் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். சீட் பெல்ட் அணியாமல் குழந்தைகளை அழைத்துச் சென்றால், அந்த வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் பொறுப்பானவர், இந்தப் புதிய வரைவின்படி குற்றம் செய்தவர் ஆகிறார்.
போதையில் வண்டி ஓட்டினால்...
மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு, 25,000 ரூபாய் அபராதம் அல்லது மூன்று மாதங்களுக்குக் குறையாமல் சிறைத் தண்டனையுடன், ஆறு மாதங்களுக்கு அவரது ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்படும். இதே நபர் மூன்று ஆண்டுகளுக்குள் மீண்டும் இதே தவறைச் செய்தால், 50,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் முதல் ஓர் ஆண்டு வரை ஜெயில் தண்டனையுடன், ஓர் ஆண்டுக்கு ஓட்டுநர் உரிமமும் சஸ்பெண்ட் செய்யப்படும். மீண்டும் இதே தவறைச் செய்தால், அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படு்வதுடன், அவருடைய வாகனத்தை 30 நாட்கள் பறிமுதல் செய்யவும் இந்த வரைவு வழி வகுக்கிறது.
செல்போன் பேசியபடி வண்டி ஓட்டினால்...
செல்போன் அல்லது வேறு ஏதாவது தகவல் பரிமாறும் உபகரணத்தைப் பயன்படுத்தியவாறு வாகனம் ஓட்டினால், முதல்முறை 4,000 ரூபாய் அபராதமும், இரண்டாவது முறை 6,000 ரூபாயும், மூன்றாவது முறை 10,000 ரூபாயும் அபராதத்துடன் ஒரு மாதம் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்ய்யப்படும். அது மட்டுமின்றி, அவர் கட்டாய சிறப்புப் பயிற்சி பெற்றுத்தான் மீண்டும் லைசென்ஸ் பெற முடியும்.
விபத்து ஏற்படுத்தினால்...
ஒருவர் வாகன விபத்தை ஏற்படுத்தி, அதில் யாரேனும் இறந்துவிட்டால், 1,00,000 ரூபாய் அபராதம். மேலும், 4 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனையும் கிடைக்கும். அதுவே, விபத்தில் ஒரு குழந்தை இறந்துவிட்டால், 3,00,000 ரூபாய் அபராதமும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் கிடைக்கும்.
புள்ளிகள் ஜாக்கிரதை....
ஒருவர் விதிகளை மீறும்போதும் அல்லது தவறு செய்யும்போதும், அந்தக் குற்றத்துக்கு அபராதம் மற்றும் ஜெயில் தண்டனை மட்டுமல்லாமல், ஒவ்வொரு குற்றத்துக்கும் குறிப்பிட்ட புள்ளிகள் தரப்படும். ஒரு குற்றத்துக்கு இரண்டு, மூன்று என இந்தப் புள்ளிகள் இருக்கும். 12 புள்ளிகள் சேர்ந்துவிட்டால், ஓட்டுநர் உரிமம் ஓர் ஆண்டுக்குத் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.
ஒருவருக்கு வழங்கப்படும் தண்டனைப் புள்ளிகள் மூன்று ஆண்டுகள் வரை அவருடைய பெயரில் இருக்கும். அதன் பிறகு, அந்தத் தண்டனைப் புள்ளிகள் தானாக நீக்கப்படும்.
சான்றிதழ் அவசியம்...
இரண்டு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் அல்லது பஸ், லாரி, மினி லாரி, டிரெய்லர் என எந்த வாகனமாக இருந்தாலும், குறிப்பிட்ட மாடல் தயாரிக்கப்பட்டு, அதனை தேசிய கமிட்டி ஆராய்ந்து, பாதுகாப்பானது என்று உறுதி செய்துகொண்டு சான்றிதழ் வழங்கும். சான்றிதழ் பெற்ற வாகனத்தில் சிறு மாற்றங்கள் செய்தாலும், மீண்டும் தேசிய கமிட்டியிடம் சான்றிதழ் பெற்ற பின்புதான் விற்பனைக்கு அனுமதிக்கப்படும்.
தேசிய கமிட்டியின் சான்றிதழ் பெறாமல் ஷோரூமில் நிறுத்திவைப்பதுகூட குற்றம். சான்றிதழ் பெறாத வாகனத்தை விளம்பரத்தில்கூடக் காட்டக் கூடாது. அப்படிச் செய்தால், அவர்களுக்குத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
வாகனத்தில் குறையிருந்தால்...
தேசிய கமிட்டியின் சான்றிதழ் பெற்ற வாகனத்தை, பயன்படுத்துபவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில், குறிப்பிட்ட மாடலில் குறைபாடுகள் உள்ளதாகத் தெரிந்தால், உற்பத்தியாளரே உடனடியாக அந்தக் குறைபாட்டை தேசிய கமிட்டியின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும். குறைபாடுகள் உள்ள வாகனங்களை உற்பத்தியாளரே திரும்பப் பெற்று, நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட மாடல் வாகனத்தில் குறிப்பிட்ட குறைபாடு இருக்கிறது என்றால், அதே மாடலை வாங்கிய பலருக்கும் இதே பிரச்னை ஏற்படும்போது, அதேபோல 100க்கும் மேற்பட்ட புகார்கள் தேசிய கமிட்டிக்கு வந்தால், தேசிய கமிட்டி உடனே சம்பந்தப்பட்ட உற்பத்தியாளருக்கு நோட்டீஸ் கொடுத்து, அந்த மாடலின் உற்பத்தியை நிறுத்த உத்தரவிடும் அதிகாரம் உண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குறைபாடுகொண்ட வாகனத்தை வாங்கியவர்களிடம் இருந்து திரும்பப் பெற்று, அந்தக் குறைபாடுகளை பணம் பெறாமல் சரிசெய்து கொடுக்க வேண்டும்.
ஒன்றிணைந்த ஓட்டுநர் உரிமம்
புதிய சட்ட மசோதாவின் முக்கிய அம்சங்களில் ஒன்று, நாடு முழுவதும் ஒரே சீரான ஒன்றிணைந்த ஓட்டுநர் உரிமம் வழங்குவது. ஒரு நபர் இந்தியாவின் எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் ஓட்டுநர் உரிமம் பெற மனு செய்யலாம். ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதைக்கூட இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். 18 வயதுக்கு மேலானவர்கள்தான் உரிமம் பெற முடியும் என்பதில் மாற்றம் இல்லை. அதேபோல், ஓட்டுநர் உரிமம் பெற குறைந்தபட்சப் படிப்பு எதையும் புதிய வரைவில் குறிப்பிடவில்லை.
பதிவு செய்யாமல் எந்த வாகனத்தையும் சாலையில் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால், முதல்முறை 25,000 ரூபாய். அடுத்த முறை 50,000 ரூபாய் அபராதம். பதிவு செய்யாமல் வாகனத்தை டெலிவரி கொடுத்த விற்பனையாளருக்கு, (டீலர்) 1,00,000 ரூபாய் அபராதம் உண்டு. டீலரின் விற்பனை உரிமத்தை ரத்து செய்யவும் முடியும்.
ஹாரன் அலறினால்...
வாகனங்களில் அதிக சப்தம் எழுப்பும் ஹாரன்களைப் பயன்படுத்தக் கூடாது. தேசிய கமிட்டி அதிகபட்சமாக எவ்வளவு டெஸிபல் சப்தம் அனுமதிக்கிறதோ, அதற்கு மேல் பயன்படுத்தினால் அது குற்றம்.
ஒரு வாகனத்தின் பதிவு எண்ணை, இந்தியா முழுக்க ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டரில் உள்ளிட்டாலே, அனைத்து விபரங்களையும் அதிகாரிகள் உடனடியாகப் பார்த்து விடலாம். மேலும், திருடப்பட்ட வாகனமா என்பதுகூட உடனே தெரிந்துவிடும். இந்த நடைமுறை மோட்டார் வாகனப் பயன்பாடு மற்றும் போக்குவரத்துத் துறையில் ஒரு முக்கிய மைல் கல்.
சாலைகள், பாலங்கள்
சாலைகளில் வாகனங்களுக்குத் தேவைப்படும் கட்டுமானங்களைப் பற்றி ஆராய்ந்து, பஸ், லாரி போக்குவரத்து டெர்மினல்கள் அமைப்பது, ஓட்டுநர்கள் ஓய்வு எடுக்கும் இடங்கள் அமைப்பது, சாலைகளைத் தரம் உயர்த்துவது, பாலங்கள் அமைப்பது போன்ற விஷயங்களை தேசிய கமிட்டி கவனிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், ஆங்காங்கே சரக்குகளை ஸ்டாக் வைத்து அனுப்புவதற்கு, லாரி உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுத்து, அதற்குத் தேவையான வாடகை பெற்றுக்கொள்வது; சாலைகள் மேம்பாடு பற்றி தேசிய நெடுஞ்சாலைத் துறையுடன் சேர்ந்து திட்டமிட்டுச் செயல்படுவது என்று பல பணிகள் இந்த கமிட்டிக்குக் குறிப்பிடப்பட்டுள்ளன.
பாதசாரிகளுக்கு தனிப் பாதை...
இந்தப் புதிய சட்ட வரைவில் மற்றொரு முக்கிய அம்சம், சாலையைப் பயன்படுத்துவோர் பற்றியும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, பாதசாரிகளுக்கு என்று தனிப் பாதை அமைக்கப்பட வேண்டும்; சைக்கிள், தள்ளுவண்டி மற்றும் சைக்கிள் ரிக்ஷா போன்றவற்றைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பும் கருத்தில்கொள்ள வேண்டும் எனச் சொல்லப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படை...
தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் மற்றும் பாதுகாப்புப் படை என்ற ஒரு தனி அமைப்பை உருவாக்க, புதிய வரைவில் தேசிய கமிட்டிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பாதுகாப்புப் படை, தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை ஆகியவற்றில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் விதிகளை மீறுபவர் மீது நடவடிக்கை எடுக்கும்.
புதிய சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு மசோதா 2014ன் வரைவில், மேலை நாடுகளுக்குச் சமமாக புதிய பிரிவுகளும் புதிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வரைவின் மூலம் விபத்துகளைத் தவிர்ப்பது மட்டுமின்றி, நமது போக்குவரத்துத் துறையில் பெரும் மாற்றத்தையும் உருவாக்க முடியும். ஆனால், இதில் உள்ள முக்கியமான பிரச்னை, இந்தச் சட்ட வரைவு அப்படியே நிறைவேறுமா என்பதுதான். காரணம், இந்தப் புதிய சட்டப்படி தேசிய கமிட்டி அமைக்கப்பட்டால், மாநிலங்களுக்கான அதிகாரம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. எனவே, இந்தச் சட்டம் நிறைவேற வேண்டும் என்றால், அனைத்து மாநில அரசுகளும் ஒப்புக்கொள்ள வேண்டும்.