பத்மநாபசுவாமி கோவிலில் பிரமிக்க வைக்கும் தங்க புதையல்:தேடல் தொடர்கிறது ...
7/06/2011 01:29:00 PMகேரள மாநிலம், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில், ரகசிய அறைகளில் இருந்து விலைமதிப்பற்ற தங்கம், அணிகலன்கள் உள்ளிட்ட பொருட்களை வெளியில் எடுக்கும் பணி தொடர்கிறது. இங்கு சுரங்க அறைகளில் இருந்து இதுவரை கிடைத்த பொருட்கள் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும். இதையடுத்து, தற்போது கோவில் பகுதிகளில் கேரள அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது. திருவாங்கூர் அரச குடும்பத்தினரின் நிர்வாகத்தில் உள்ள திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள நான்கு ரகசிய அறைகளை திறக்க கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ரகசிய அறைகளை திறப்பதற்கு முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழுவை நியமித்து உத்தரவிட்டதோடு, பத்மநாப சுவாமி கோவிலை மாநில அரசு எடுத்து கொள்வதற்கு தடையும் விதித்தது. சுப்ரீம் கோர்ட் நியமித்த இக்குழு, கடந்த ஜூன் 27ம் தேதி அறைகளை திறக்க துவங்கியது. மூன்று அறைகளில் இருந்த பொருட்கள் பட்டியலிடப்பட்ட நிலையில், நான்காவது அறை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. அதில் பிரமிக்கத்தக்க அளவில், விலைமதிப்பில்லாத வைர, வைடூரிய, தங்க, வெள்ளி பொருட்கள் இருந்தன.இவைகளைக் கண்டெடுத்து தூசி நீக்கி அதன் பின் மதிப்பீடு செய்வது என்பதால் பணியில் தாமதம் உள்ளது. இந்த அறை, கடந்த 130 ஆண்டுகளாக பூட்டிக் கிடந்தது. இதில், தங்க நகைகள், ஆபரணங்கள், கற்கள் பதித்த கிரீடங்கள், தங்க பாத்திரங்கள், தங்க தாம்பாளங்கள், விளக்குகள், தங்கத்தாலான வழிபாட்டுப் பொருட்கள் மற்றும் பல்வேறு பாரம்பரிய கலைநயம் மிக்க பொருட்கள் இருந்தன. இன்றைய நிலையில், இவற்றின் மதிப்பை கணக்கிடுவது மிகச்சிரமம் என்றே நிபுணர்கள் கருதுகின்றனர். இருப்பினும் இவை அனைத்தும் இன்றைய பண மதிப்பில், 10 ஆயிரம் கோடியை ரூபாயை தாண்டினாலும் வியப்பில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், இந்த நான்காவது அறையில் உள்ள பொருட்களின் பட்டியலையும், அவற்றின் மதிப்பையும் தயாரிக்க சில நாட்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், "அவற்றை அவ்வளவு எளிதில் கையில் எடுத்து வேறொரு இடத்திற்கு மாற்ற முடியாது. முதலில் அவற்றை தூய்மை செய்து, பாதுகாப்பான இடத்தில் வைத்த பின்னர் தான் மதிப்பிட வேண்டியுள்ளது. அதனால், அதற்கு சில நாட்கள் ஆகும். இது குறித்த முழு அறிக்கையும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்றார். மதிப்பிட முடியாத பொருட்களை கணக்கிடும் பணி மேலும் சில நாட்கள் தொடரும் என்பதால், கோவிலுக்கான பாதுகாப்பை மேலும் அதிகரிக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், இது குறித்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் உம்மன் சாண்டி, "கோவில் பாதுகாப்பு ஏற்கனவே உறுதியாக உள்ளது. எனினும் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
ஆபரணங்கள் மதிப்பீடு எவ்வளவு காலமாகும்? திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி புராதனமான பெருமை மிக்க கோவில். தமிழகம், கேரளாவில் உள்ள பல கோவில்கள் முன் அன்னிய படையெடுப்பு காலங்களில், மன்னர்களும் மக்களும் கொடுத்த விலை மதிப்பற்ற பொருட்களை பாதுகாப்பாக வைக்க ரகசிய அறை அமைத்தது உண்டு. ஆனால், இதுவரை ரகசிய அறையில் இருந்து இந்த அளவு விலை மதிப்பற்ற பொருட்கள் வேறெங்கும் கிடைத்ததாக தெரியவில்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி இதை கண்டுபிடித்து கணக்கிடும் பணி என்பதால், சுரங்க அறைக்குள் செல்வோர், அங்குள்ள நச்சு ஏதாவது பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் ஆக்சிஜன் கவசம் அணிந்து பாதுகாப்பாக தேடியுள்ளனர். கடவுளுக்கு அணிவிக்கப்படும் தங்க, கல் பதித்த ஆபரணங்கள் ஆயிரக்கணக்கில் கண்டுபிடித்துள்ளனர். இம்மாதிரி ஆபரணம் ஒன்று 18 அடி நீளம் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து தொல்பொருள் துறையினர் மற்றும் அத்துறையில் நிபுணர்கள் மதிப்பீடு செய்ய காலதாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது. தவிரவும் இந்த அறைகள் எப்போது உருவாக்கப்பட்டன. கோவில் வரலாறு கூறும் மற்ற தகவல்கள் கிடைக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.
Courtesy Dinamalar
Thanks
Thamilselvan Subramaniam
0 comments