படித்தது பி.பி.ஏ.,; பார்ப்பது இயற்கை விவசாயம்

9/07/2011 02:25:00 PM


சென்னை:வணிக நிர்வாகப் படிப்பில் தேறி, லட்சக்கணக்கில் சம்பளம் பெற கிடைத்த வாய்ப்பை உதறி விட்டு, இயற்கை விவசாயத்திற்கு திரும்பியிருக்கிறார், ஏங்கல்ஸ்ராஜா என்ற இளைஞர்.

"இயற்கை விவசாயம் குறைந்து வருவதால் தான், புதிதாக பல நோய்கள் பரவி வருகின்றன; மனித உடலில், இயற்கையான சக்தி குறைந்து வருகிறது. இந்த நோய்களைப் போக்குவதற்கு ஆங்கில மருந்தை இறக்குமதி செய்து, தங்களின் வியாபாரத்தை உலகம் முழுக்க பரப்ப வேண்டும் என்பது, மருந்தின் மூலம் பிழைக்கும் பல வல்லாதிக்க நாடுகளின் எண்ணம். இதனால், மருந்தை முன்வைத்து, சர்வதேச பொருளாதார சதியும் இருக்கிறது' என்பது இயற்கை ஆர்வலர்களின் குற்றச்சாட்டு.இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கும் வேலையை, இயற்கை ஆர்வலர்கள் துவக்கினர்.

அவர்களால் ஈர்க்கப்பட்ட பட்டுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர், லட்சக்கணக்கில் சம்பளம் வரும் வேலைகளை உதறி விட்டு, இயற்கை விவசாயம் மற்றும் மருத்துவத்தில் ஈடுபட்டு வருகிறார்.வீட்டில் இயற்கை முறையிலும், வயல்காட்டில் செயற்கை முறையிலும், விவசாயம் பார்த்த குடும்பத்திலிருந்து வந்த ஏங்கல்ஸ்ராஜாவுக்கு, சிறுவயதில் இருந்தே விவசாயத்தின் மீது ஆர்வம். பெற்றோரின் வற்புறுத்தலுக்காக, கல்லூரி படிப்பில் சேர்ந்தார். விவசாயம் மீது இருந்த அளவு கடந்த ஈடுபாட்டால் ராஜாவுக்கு, இளங்கலை வணிக நிர்வாகம் ஒத்து வரவில்லை.

"" எங்கள் கல்லூரியில் வணிக நிர்வாகம் தொடர்பாக கருத்தரங்கம் வைத்திருந்தனர். பன்னாட்டு கம்பெனியைச் சேர்ந்தவர்கள் அதில் கலந்து கொண்டு, மாணவர்களைப் பார்த்து, "நீங்கள் என்ன வேலை செய்யப் போகிறீர்கள்' என்றனர். நான் எழுந்து, "எங்கள் நிலத்தில் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வைத்து, கால்நடை விவசாயம் செய்யப் போகிறேன்' என்றதும், எல்லோரும் சிரித்து விட்டனர்; ஆனால், எங்கள் துறைத் தலைவர், "ஏன் சிரிக்கிறீர்கள், நீங்கள் வேலையாளாக நினைக்கிறீர்கள். ஏங்கல்ஸ் முதலாளியாக நினைக்கிறார்' என்று, என்னை உற்சாகப்படுத்தினார்'' என்று, கல்லூரி கால நினைவுகளை குறிப்பிடுகிறார் ஏங்கல்ஸ்ராஜா.

இவர் படித்து முடித்தவுடன், மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளத்தில், பன்னாட்டு கம்பெனியில் வேலை கிடைத்திருக்கிறது. அதை புறக்கணித்து விட்டு, இயற்கை விவசாயத்தில் இறங்கி இருக்கிறார். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின்,"தாய் மண்ணே வணக்கம்' புத்தகம் தான், ஏங்கல்ஸ்ராஜாவுக்கு ஊக்கமாக இருந்திருக்கிறது.சுனாமி தாக்கியதால் சேதமான, 3,500 ஏக்கர் விவசாய நிலத்தை, இயற்கை விவசாயம் மூலம் மீட்டெடுக்கும் வேலையில், நம்மாழ்வார் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவருக்குத் துணையாக, ஏங்கல்ஸ் ராஜா சென்றிருக்கிறார்.

"" வேளாண்மை பல்கலைக் கழகம், வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை கல்லூரி ஆகிய மூன்றும், சேதமான விவசாய நிலத்தை பல மாதங்களாக சோதனை செய்து விட்டு, "இனி ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தான், இந்த மண்ணை பயன்படுத்த முடியும்' என்றனர்.அவர்கள் சொல்லிவிட்டுப் போன பிறகு, தக்கைப் பூண்டு செடியின் மூலம், மூன்று மாதங்களில், அந்த மண்ணை மீட்டெடுத்து, பின்னர் அறுவடையும் செய்தார். அங்கு விளைந்த அரிசியை சாப்பிட்டுப் பார்த்த மூத்த குடிமக்கள், "ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சுவை அப்படியே இருக்கிறது' என்றனர்.

நான் இயற்கை விவசாயத்தைக் கண்டு பிரமித்த தருணம் அது'' கண்களில் ஆச்சர்யம் கலையாமல் சொல்கிறார்.அதன் பிறகு, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ஏங்கல்ஸ்ராஜா தலைமையில் நடந்த இயற்கை விவசாயத்தில், நல்ல விளைச்சல் பயனாக கிடைத்திருக்கிறது. இணையம் வழியாக, இதை அறிந்த குஜராத், பங்களாதேஸ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள்,"கியூபாவுக்குப் பிறகு கழிவுகளை உணவாக்கும் வித்தை, இங்கு தான் நிகழ்ந்திருக்கிறது' என்று பாராட்டி இருக்கின்றனர். தற்போது, இயற்கை விவசாயத்தோடு, தொடுசிகிச்சையும் செய்து வருகிற ஏங்கல்ஸ் ராஜா. வாரத்திற்கு நூறு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கிறார்.

""நமது கல்வி அமைப்பு, "ஒயிட் காலர்' வேலைகளுக்குத் தான் பழக்கி இருக்கிறது; இது, தவறானது. பன்னாட்டு கம்பெனிகளில் அடிமையாக வேலை பார்ப்பதை விட, உள்நாட்டிற்குள் முதலாளியைப் போல், விவசாயம் பார்ப்பது சிறப்பானது. இந்த மண்ணும், மக்களும் தானே நமது முகவரி'' என்று பெருமிதப்படும் ஏங்கல்ஸ்ராஜாவின் வார்த்தைகளில் சாதித்த பெருமை வழிகிறது.பன்னாட்டு கம்பெனியைச் சேர்ந்தவர்கள், அதில் கலந்து கொண்டு மாணவர்களைப் பார்த்து, "நீங்கள் என்ன வேலை செய்யப் போகிறீர்கள்' என்றனர். நான் எழுந்து, "எங்கள் நிலத்தில் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வைத்து, கால்நடை விவசாயம் செய்யப் போகிறேன்' என்றதும், எல்லோரும் சிரித்து விட்டனர்-அ.ப.இராசா -
Courtesy : Dinamalar
Thanks
Thamilselvan Subramaniam

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook