தபாலில் தவறிய கடிதங்கள்
7/28/2012 09:04:00 PMஅன்புள்ள சக இந்தியனுக்கு,
என்னடா இது அவரைக் காய்ந்து, இவர் மேல் பாய்ந்து இறுதியில் நம்மிடமே ஓலையை நீட்டி விட்டானே இளந்தமிழன் எனத் திடுக்கிட வேண்டாம். இது பிழைகளைச் சுட்டி எழுதப்பட்டதல்ல... பிரமிப்பில் எழுதப்பட்ட கடிதம்.
என்னடா இது அவரைக் காய்ந்து, இவர் மேல் பாய்ந்து இறுதியில் நம்மிடமே ஓலையை நீட்டி விட்டானே இளந்தமிழன் எனத் திடுக்கிட வேண்டாம். இது பிழைகளைச் சுட்டி எழுதப்பட்டதல்ல... பிரமிப்பில் எழுதப்பட்ட கடிதம்.
ஆமாம் தோழா, உனக்கு ஒரு வணக்கம் போடத் தோன்றியது. வணக்கம் என்றால் சாதாரண வணக்கமல்ல, பெருங் கும்பிடு. இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி கடவுளைப் பார்த்துப் போடுகிற கும்பிடைப் போல ஒரு பெரிய வணக்கம்.
எதற்கு என்றா கேட்கிறாய்? சொல்கிறேன். சொல்கிறேன். அதற்கு முன்னால் ஒரு கதை. உனக்குத்தான் சின்னஞ்ச் சிறிய கதை பேசுவதிலும் கேட்பதிலும் விருப்பமுண்டே!
தினந்தோறும் யாராவது ஒருவருக்கு உணவு அளித்துவிட்டு உண்பதை ஒரு கொள்கையாகவே கொண்டிருந்தார் ஒரு துறவி. ஒருநாள் விருந்தினர் யாருமே வரவில்லை. துறவி நெடு நேரம் காத்திருந்து பார்த்தார். பின் பொறுமையிழந்து தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். சற்றுத் தொலைவு போனதும் எதிரே ஒரு வெளியூர்க்காரர் வருவதைப் பார்த்து அவரைச் சாப்பிட அழைத்து வந்தார். துறவி தனது உணவை உண்பதற்கு முன் பிரார்த்தனை செய்தார். வந்தவர் ஏதும் செய்யாமல் சும்மா இருப்பதைப் பார்த்து, "சாப்பிடும் முன் இறைவனை வணங்குவது கிடையாதா?" என்று கேட்டார். "எனக்கு இந்த முட்டாள்தனங்களில் நம்பிக்கை இல்லை" என்றார் விருந்தினர். "இது முட்டாள்தனமா?" என்றார். "என் அபிப்ராயத்தில் இறைவனை வணங்குவதே முட்டாள்தனம்தான்" என்றார் அந்த நாத்திகர். துறவிக்குக் கோபம் வந்து விட்டது. அந்த விருந்தினரை அடித்துத் துரத்திவிட்டார். மனச் சோர்வுடன் படுத்தார் துறவி. கண்ணயர்ந்து விட்டார். அப்போது அவர் கனவில் கடவுள் தோன்றினார். "அவன் என்னை நம்பவில்லை என்றாலும் நான் அறுபது வருடமாக அவனுக்கு உணவளித்து வந்தேன். இன்று ஒரே ஒரு நாள், ஒரு வேளை உணவு அளிப்பதற்காக உன்னை நம்பி உன்னிடம் அனுப்பினேன். ஆனால் இப்படி அவனைச் சோறு போடாமல் அடித்து விரட்டி விட்டாயே?" என்று துறவியைக் கேட்டார் கடவுள். துறவி அலறி அடித்துக்கொண்டு அந்த விருந்தினரைத் தேடி ஓடினார். அவரை உண்ண அழைத்தார். "நீங்கள் அழைத்துத்தான் வந்தேன். விரட்டி விட்டீர்கள், மீண்டும் விரட்ட மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?" என்றார் நாத்திகர்.
துறவி சொன்னார்: "நாங்கள் ஆத்திகர்கள். நாங்கள் செய்யும் எல்லாவற்றின் பின்னாலும் சர்வ சக்தி கொண்ட கடவுள் இருக்கிறார் என்பது எங்கள் நம்பிக்கை. எனவே கடவுள் உண்டு எனச் சொல்லத் தனியாக தைரியம் வேண்டியதில்லை. ஆனால் நீங்கள் எந்தச் சக்தியும் பின் பலமும் இன்றி அந்தக் கடவுளையே இல்லை என்கிறீர்கள். அதற்கு மிகுந்த மனோ தைரியமும் மன உறுதியும் வேண்டும். அதனால் நீங்கள் பயப்பட வேண்டாம்" என்றாராம் துறவி.
இந்தக் கதையைப் படித்தபோது எனக்கு உன் ஞாபகம் வந்தது. எந்தவித அதிகார பலமும் இல்லாமல், பொருளாதாரப் பின்புலமும் இல்லாமல் எப்படி இத்தனை சோதனைகளைத் தாங்குகிறாய் நீ? நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாய் இருந்தது. போடு வணக்கம் என்று போட்டு விட்டேன்.
அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை உயர்வு, தட்டுப்பாடு, மின் வெட்டு, லஞ்சம், டெங்குக் கொசு, ஆஸ்பத்திரிகளில் காட்டப்படும் அலட்சியம், ஊரெங்கும் குவிந்து கிடக்கும் குப்பைகள், போக்குவரத்து நெரிசல், கல்விக்கூடங்களின் கெடுபிடி, சுயநல அரசியல்வாதிகள், அவர்கள் போடும் இரட்டை வேடங்கள், அவர்களது ஏட்டிக்குப் போட்டி பங்காளிக் காய்ச்சல், கேலிக் கூத்தாகிவிட்ட தொலைக்காட்சித் தொடர்கள், சாரமற்ற சினிமாக்கள், மனதில் நிற்காத சிறுகதைகள்... எப்படீங்கண்ணா இத்தனையும் தாங்கிக்கிட்டு, இது ஏதும் உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயம் போல போய்க்கிட்டே இருக்கீங்க. மன உறுதியா? இல்லை அலட்சியமா?
உங்களைப் புரிஞ்சிக்கவே முடியலையே என்று அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள் அடிக்கடி சொல்வது வழக்கம்.
உண்மைதானோ?
அடங்காத ஆச்சரியங்களுடன்,
இளந்தமிழன்
நன்றி புதிய தலைமுறை வார இதழ்
0 comments