, ,

வேம்பு மருத்துவ பயன்கள்

5/05/2013 01:38:00 PM

மூலிகையின் பெயர் -: வேம்பு.

தாவரப்பெயர் -: AZADIRACHTA INDICA.

தாவரக்குடும்பம் -: MELIACEAE.

வேறு பெயர்கள் -: பராசக்தி மூலிகை, அரிட்டம், துத்தை, நிம்பம். பாரிபத்திரம், பிதமந்தம், மேலும் வாதாளி ஆகியன.

பயன்தரும் பாகங்கள் -: இலை,பூ, பழம், விதை, பட்டை மற்றும் எண்ணெய் முதலியன.

வேதியல் சத்துக்கள் -: NIMBDIN, AZADIRACHTINE.

வளரியல்பு -: வேம்பு என்பது வேப்ப மரம் தான். இதற்கு பராசக்தி மூலிகை என்ற சிறப்புப் பெயர் உண்டு. மூலிகைகளில் பெரும் சக்தி படைத்ததாக சிறந்து விளங்குகிறது. வேம்பின் பூர்விகம் இந்தியாவும் பாக்கீஸ்தானும் தான். பின் உலகம் முழுதும் பரவிற்று. காப்புரிமை இந்தியா வாதாடிப் பெற்றது. ஆலமரத்தைப் போலவும், அரசமரத்தைப் போலவும் அனேக ஆண்டுகள் வளரக்கூடிய மரம் இந்த வேப்ப மரமாகும். இது சாதாரணமாக 30 அடிமுதல் 40 அடிவரை உயரம் வளரக்கூடியது. நல்ல வளமான களிமண்ணில் 50 அடி முதல் 65 அடிவரையிலும் கூட வளரும். இது எப்போழுதும் பசுமையாக இருக்கும். கிழைகள் அகலமாக அடர்த்தியாக வளர்ந்து நல்ல நிழல் தரும் மரம். பொதுவாக வேப்ப மரத்தைப் பார்ப்பதாலும் , அதனடியில் அமர்வதாலும், அதன் காற்றைச் சுவாசிப்பதாலும் நல்ல மன அமைதியை மக்கள் பெறுவார்கள். வேம்பு அனைத்து மண்ணிலும் வளரக்கூடியது. ஆனால் அதிக குளிர் பிரதேசத்தில் வளராது. மிதமான சீதோசனம் தேவை. இதன் இலைகள் கசப்புத்தன்மையுடையது. கூர் நுனிப் பற்களுள்ள சிறகுக் கூட்டிலைகளையும், வெண்ணிற மணமுள்ள சிறு சிறு பூக்களையும், முட்டை வடிவச் சதைகளையும், எண்ணெய் சத்துள்ள விதைகளையும் உடைய பெரிய மரம். இதன் பசுமையான நிழல் கருதி சாலையோரங்களிலும் அழகுக்காகவும் நிழலுக்காகவும் வளர்க்கப்படுகிறது. இதன் எண்ணெயில் சோப்பு, மகளிர் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் இதன் புண்ணாக்கு உரமாகவும் பூச்சி கொல்லியாகவும் பயன் படுத்துவர். விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள் -: வேம்பு கோழையகற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை, காச்சல், சுவையின்மை, பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன் படுகிறது.

வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சமன் சேர்த்து நீர் விட்டு அரைத்துப் பட்டாணி அளவாய் மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி நாள் தோறும் 3 வேளை ஓரிரு மாத்திரை கொடுத்து வர அம்மை நோய் தணியும்.

வேம்பு இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் தீரும்.

வேப்பங்கொழுந்து 20 கிராம், ஈர்க்கு 10, 4 கடுக்காய் தோல், பிரண்டைச் சாறு விட்டரைத்து அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கக் குடல் பூச்சி வெளியாகும்.

வேம்பின் பஞ்சாங்கச் சூரணம் 10 அரிசி எடை நெய், தேன், வெண்ணெய், பாலில் 2 மண்டலம் கொடுக்க எந்த மருந்துலும் கட்டுப் படாத நோய்கள் மதுமேகம், என்புருக்கி, இளைப்பு, காசம் ஆகியவை தீரும். உடம்பு கெட்டி படும், நரை திரை மாறும்.

வேம்பு இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்துத் தடவி வரப் பொன்னுக்கு வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி, பருவு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும்.

உந்தாமணி இலையை வேப்பெண்ணையில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, கரப்பான், கிரந்து, சிரங்கு, சுரம், சன்னிகளில் வரும் இசிவு, கண்ட மாலை கீல் வாதம் தீரும்.

5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும். கல்லீரலை நன்கு இயக்குவிக்கும்.

3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் தீரும்.

50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும்.

வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.

வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் மறைந்து விடும்.

வேப்ப மரத்திலிருந்து உதிர்ந்த பூக்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு ஒரு வருடம் கழித்து இந்தப் பூவைக் கொண்டு ரசம் வைப்பார்கள். இந்த வேப்பம் பூ ரசம் பித்த சம்பத்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

வேப்பம்பழ சர்பத் கொடுத்து வர சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும்.

வேப்பம்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்துப் புரையோடிய புண்கள் மீது பூசி வரக் குணம் கிடைக்கும். குஷ்ட நோயாளிகளின் புண்களையும் குணப்படுத்தும்.

நரம்புகளாலுண்டாகும் இழப்பு, சீதளம் இவைகளைப் போக்க உந்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுத்து வேப்பெண்ணெயை வலி மற்றும் ரணங்களுக்குத் தடவி வரக் குணம் கிடைக்கும்.

வேப்பம்பட்டை நாவல்மரப்பட்டை வகைக்கு 150 கிராம் எடுத்து இதனுடன் 50 கிராம் மிளகு 50 கிராம் சீமைக்காசிக்கட்டி இவற்றை நன்றாக உலர்த்தி இடித்து வைத்துக் கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தூளைப்போட்டுக் காய்ச்சி எடுத்த கசாயத்தைத் தினம் இரு வேளை கொடுத்து வந்தால் நாட்பட்ட பேதி, கிராணி, சீதபேதி இவை குணமாகும்.

வேப்பம்பட்டை 5 பலம், கஸ்தூரி மஞ்சள், பூண்டு, மிளகு, சீரகம் இவை வகைக்கு50 கிராம் எடுத்து இவற்றை இடித்துத் தூளாக்கி, ஒரே மாட்டின் பசும்பால் ஒரு படி நல்லெ ண்ணெய் ஒன்றரைப்படி எடுத்து இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து காச்ச வேண்டும். உரிய பதம் வந்த தும் இறக்கி ஆறியவுடன் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் மண்டையிடி பீனிசம், வாதரோகங்கள், பாரிச வாயு, சீதளரோகம் சம்பந்தமுடையவர்கள், தோல் சம்பந்தப்பட்ட நோயுடையவர்கள் விரைவில் குணம் பெறுவார்கள்.

வேப்பிலைக் கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும். தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் மலேரியாக் காய்ச்சல் குணமாகும். நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வர மாத்திரை எதுவும் இன்றிக் குணமாகும்.

வேப்பங்காய் இரத்த மூலத்தையும், குடற் பூச்சிகளையும் சிறுநீரகத் தொல்லைகளையும் போக்கும்.

எல்லாப் பிணிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது வேம்பு வேப்பிலை உருண்டையைத் தேய்த்துக் குளித்தால் புண்கள் குணமாகும்.
வேப்பம் குச்சியால் தொடர்ந்து பல துலக்கி வந்தால் வாய் துர் நாற்றம் போகும், பற்கள் உறுதியாகும்.

நூறு ஆண்டு வேப்ப மரத்தின் இலை, பூ, பட்டை, வேர்ப்பட்டை, காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து உலர்த்து பொடி சூரணம் 2-5 கிராம் அளவு தேனில் காலை சாப்பிட்டு வந்தால் உடல் வலியும் வனப்பும் பெறும். காயகல்பமாகும். உடலில் எந்த நோயும் போகும். நீரிழிவு, சர்கரை குட்டம் முதலான எல்லா வகைத் தோல் நோயும் குணமாகும். புகையிலை, புளி, போகம் நீக்கினால் நூறாண்டு வாழலாம்.

காய சித்தியாகும் கடி யசிலேஷ்ம்மாறும்
தூயவிந்து நாதமிவை சுத்தியுமாம் – தூயவருக்கு
எத்திக்கும் கிட்டும் இலையருந்தில் வாயெல்லாம்
தித்தக்கும் வேம்பதற்கு தேர்.
-------------------------------------------------------------- அகத்தியர்.

குட்டநோய் பதினெட்டும் தீர்வதற்கு………

தானவனாம் வேம்பினுட கற்பந்தன்னைத்
தாரணியில் சித்தர்களே சாற்றக்கேளு
ஏனமுதற் ஜலமிக்க கொழுந்தைக் கிள்ளி
இன்பமுடன் தின்று வாயிருபத்தேழ்நாள்
ஆனதொரு சர்பங்கள் தீண்டினாலும்
அதுபட்டுப் போகும்ப்பா அறிந்து கொள்ளே
கொள்ளப்பா மாதமொன்று கொண்டாயாகில்
குட்டமென்ற பதினெட்டு வகையுந் தீரும்.

கார்த்திகை மாதம் விடுகின்ற கொழுந்தை இருபத்தேழு நாள் சாப்பிட பாம்பு விடம் நீங்கும். பாம்பு கடித்தாலும் விடம் ஏறாது. ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் பதினெட்டு வகையான குட்டமும் குணமாகும். நூற்றாண்டு வேம்பின் பூ, தளிர், பட்டை, வேர், காய் உலர்த்திய சூரணத்தை ஆறு மாதம் சாப்பிட்டு வந்தால் நிச்சையம் குட்டம் முதலான தோல் நோய் அனைத்தும் குணமாகும். புளி நீக்கி பத்தியம் இருத்தல் வேண்டும்.

வேப்பிலை, எலுமிச்சம் பழச் சாற்றில் அரைத்துத் தலைக்குத் தேய்க்க, பித்த மயக்கம், குடிவேறி குணமாகும்.

வேப்பிலை+ மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூச பித்த வெடிப்பு கால் பாத எரிச்சல் குணமாகும். நகச்சுத்திக்கு பற்றிட குணமாகும்.

வேப்பம் பூவில் துவையல், ரசம் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த குன்மம் தீரும்.
காயை உலர்த்திய பொடி வெந்நீரில் கொடுக்க மலேரியாக் காச்சல், மண்டையிடி குணமாகும்.

தகவல்: மூலிகை வளம்

*** அறிவோம் ஆயிரம் ***

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook