விடியல் தேடும் நொய்யல்

12/11/2010 12:34:00 PM

விடியல் தேடும் நொய்யல்:- உயிருக்கு போராடுகிறது ஒரு ஜீவ நதி!


மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி,


   - கோவை
   - திருப்பூர்
   - ஈரோடு
   - கரூர்
   - திருச்சி


என ஐந்து மாவட்டங்களை கடந்து காவிரியில் கலக்கிறது காஞ்சி மாநதி.


சென்ற இடமெல்லாம் செழிப்பாக்கிய காஞ்சி நதி, காவிரியுடன் சங்கமிக்கும் இடத்தால்
"நொய்யல்" எனப்பெயர் கொண்டது.


"நொய்" என்ற சொல்லுக்கு


   - நுண்மை
   - மென்மை


என்பது பொருள்.


தன் நுண்ணிய மணல் பரப்பினால் இப்பெயர் பெற்றது என்ற கருத்தும் உண்டு.
காலப்போக்கில் காஞ்சி நதி என்ற பெயர் வழக்கொழிந்து போனது போலவே, நொய்யலும்
வளமிழந்து போனது. மேற்குத்தொடர்ச்சி மலையின் வெள்ளியங்கிரியில் உற்பத்தியாகி,
கிழக்கு நோக்கி பாய்கிறது நொய்யல்.


இதன் கரையில்
 பல முக்கிய நகரங்கள் உள்ளன.


வழியில் 32 குளங்கள், 23 தடுப்பணைகளை நிரப்பி, காவிரியில் இணையும் நொய்யல்
படுகை 180 கி.மீ. நீளம்  கொண்டது. திருப்பூரில்
இருந்து 16கி.மீ. தூரத்தில் ஒரத்துப்பாளையம் அணை உள்ளது.


காவிரியுடன் சங்கமிக்கும் இடத்தில் இருந்த நொய்யல் குடியிருப்பு
சேரநாட்டுக்கும், கருரூக்கும் இடையே முக்கிய இணைப்பாக இருந்ததாக சங்க
குறிப்புகள் தெரிவிக்கின்றன. இங்கு, சங்ககால மக்கள் 35 ஏக்கர் பரப்பளவில்
வசித்து வந்ததற்கான அடையாளங்களை தொல்லியல் துறை கண்டறிந்துள்ளது.


ஈரோட்டில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் அமைந்த கொடுமணல் கொங்குப்பகுதி
நாகரிகத்துக்கான சான்று.


நூற்றுக்கணக்கான


   - முதுமக்கள் தாழி
   - கல்வெட்டுகள்
   - மண்பாண்டங்கள்


புதைபொருட்கள் கொடுமணல் நாகரிகம் தொன்மையானது என்பதை இன்றும் பறைசாற்றி நிற்கின்றன.


நொய்யல் படுகையால் 3,500 சதுர கி.மீ., பரப்பு பயனடைகிறது; 1,800 ச.கி.மீ.,
பரப்பு பாசனவசதி பெறுகிறது.


கரையோர பகுதிகளில் உள்ள கிராமங்களில் மக்கள் அடர்த்தி சதுர கி.மீ.,க்கு
120பேர்; நகரப்பகுதியில்
1,000 பேர்.


நொய்யல் ஒரு போதும் கரை மீறியதாக சரித்திரம் இல்லை.


காரணம், ஒவ்வொரு 12 கி.மீ. தூரத்திலும் சில அடி தூரம் ஆழமாகிக் கொண்டே செல்லும்
தன்மையால், சரிவான சிற்றாறாக உருக்கொண்டு அதிவேகமாக காவிரியில் கலக்கிறது.
இதனால், ஆறு நிறைய தண்ணீர் செல்வதற்கு வழியில்லை; பெரிய அளவிலான தேக்கங்களும்
இல்லை.


மற்ற சிற்றாறுகளை போல குளிக்கவும், குடிக்கவும் பயன்பட்டு வந்த இந்நதி, கடந்த
தலைமுறையில் சிற்றாறு என்ற நிலையில் இருந்து கழிவுக்கால்வாயாக
சுருங்கிக்கொண்டது.


*மாசடைந்த நொய்யல்*:- இன்றைய தலைமுறையினர் காணும் நொய்யல், நதி என்ற தகுதியை
இழந்தது 1985ம் ஆண்டுக்கு பிறகுதான். தொழில் வளர்ச்சி என்ற பெயரில், திருப்பூர் நகரம் அரசின் எந்த உதவியும், கட்டுப்பாடுகளும் இன்றி வளர்ந்த காலகட்டம், அது.வெளிநாடுகளுக்கு பனியனை ஏற்றுமதி செய்ய வாய்ப்பு கிடைத்ததால், தொழில்முனைவோர் பலரும், போட்டி போட்டு உற்பத்தி செய்தனர்.


தொழில் வளர்ச்சியில் மட்டுமே அக்கறை கொண்டிருந்த உற்பத்தியாளர்களும், அன்னிய  செலாவணியை நல்வாய்ப்பாக கருதிய அரசும், அதன் மோசமான மறுபக்கத்தை கவனிக்கத்  தவறிவிட்டன. ஏற்கனவே, கோவை மாநகரின் கழிவுகள் நொய்யலில் கலந்து, அதை மாசுபடுத்திக் கொண்டிருந்தன.


வெள்ளை நிற ஆடைகளை விட, வண்ணமேற்றிய ஆடைகளுக்கு வரவேற்பு என்பதை அறிந்த,  தொழிலதிபர்கள், சாயசலவை ஆலைகளை அதிகளவில் அமைத்தனர். கழிவை சுத்திகரித்து  வெளியில் விட வேண்டிய அவசியம் குறித்து, தொழில்முனைவோர் அறிந்திருக்கவில்லை. சாயக்கழிவை சுத்திகரிக்கும் பொறுப்பு, அசட்டுத்தனமாக விடப்பட்டு விட்டது.
விழிப்புணர்வும், தொழில்நுட்ப வசதிகளும் பெருகிவிட்ட இக்காலத்திலேயே இன்னும் தீர்வு காணப்படவில்லை.


விவசாயிகளுக்காக கட்டப்பட்ட ஒரத்துப்பாளையம் அணையில் சாயக்கழிவுகள் தேங்கி நின்றன.  அணையை சுற்றிலும் இருந்த விவசாய  நிலங்களில் களை கூட முளைக்கவில்லை. தென்னை மரத்தின் இளநீரிலும் இரசாயனத்தின் காரத்தன்மை கலந்தது. குடிநீர் இன்றி, மக்கள் பரிதவித்தனர். தோல் நோய் மருத்துவமனைகளும், செயற்கை கருத்தரிப்பு
மையங்களும் அதிகளவில் ஈரோடு சுற்றுப்பகுதியில் அமைந்தன.


பிரச்னையின் தீவிரத்தை தாமதமாக உணர்ந்த, விவசாய சங்கங்கள் எதிர்ப்பு
குரல்கொடுக்க துவங்கின.  சமூக அக்கறையுள்ள அமைப்புகள், நொய்யலை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோஷத்தை வலியுறுத்தின. பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப்பின், கோர்ட் தலையீடு காரணமாக, நச்சுத்தன்மை வாய்ந்த கழிவு நீர் வெளியேற்றத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.


கோர்ட் உத்தரவு காரணமாக, அனைத்து சாய ஆலை உரிமையாளர்களும் 800 கோடி ரூபாய் மதிப்பில் 20 இடங்களில் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்துள்ளனர்; சிலர் சொந்தமாகவும் அமைத்துள்ளனர். பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தடையில்லாச் சான்று வழங்க வேண்டிய மாசுக்கட்டுப்பாடு வாரியம், வழக்கம்போல் நத்தை வேகத்தில் செயல்படுகிறது. வழக்கு நிலுவையில் இருப்பதால், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சான்று வழங்க முடியாத நிலை உள்ளது. எனவே, சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு
நொய்யலில் கலக்கிறது. கழிவுகள் மட்டுமன்றி, ஆக்கிரமிப்புகளும் நொய்யலை உருக்குலையச் செய்துள்ளன. ஒரு நதி நம் கண் முன்னால் உயிர்ப்பை இழந்து கொண்டிருக்கிறது!
*கரை அமைத்தால் கறை நீங்கும்:*- கோவையில் இருந்து கரூர் வரை, நொய்யலின் இரு கரையையும் அகலப்படுத்தி, ரோடு அமைக்கலாம் என்ற திட்டம் கடந்த காலங்களில் முன்மொழியப்பட்டு இருந்தது. ஆற்றின் கரை சுத்தப்படுத்தப்படும்; ரோடு வசதியும் உருவாகும். ஆக்கிரமிப்புகளையும் தடுக்க முடியும். போக்குவரத்து நெரிசலுக்கும்
தீர்வு கிடைக்கும். கொங்கு மண்டலத்துக்குள் மெட்ரோ போன்ற இரயில் திட்டம்
உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவை.
ஆனால், நொய்யல் கரையில் ரோடு வசதியை உருவாக்க மத்திய அரசை எதிர்நோக்க வேண்டிய அவசியம் இருக்காது. முழுமையான ரோடாக இல்லாவிட்டாலும், முக்கிய இணைப்புகள் வரை ரோடு அமைக்கலாம். புறநகர் வழிச்சாலை; தொழில் வளர்ச்சி என பல பரிமாணங்களிலும்
இத்திட்டம் பலனளிக்கும்.




நரகமாகிவிட்ட நாகரிக சுவடுகள்:*- நதிக்கரைகளில் தான் நாகரிகங்கள் தோன்றின.
தமிழக நதிக்கரைகளுக்கும் அப்பெருமை உண்டு. நொய்யல் நதிக்கரையின் கொடுமணல்
நாகரிகம் கி.மு. 300 முதல் கி.பி. 300ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டது என
தொல்பொருள் சான்றுகள் தெளிவுபடுத்துகின்றன. சிற்பக்கலைக்கு பெயர் பெற்ற பேரூர்
பட்டீஸ்வரர் கோவிலை தன் கரையில் கொண்டுள்ளதும், இலட்சக்கணக்கான மக்களின்
வாழ்வாதாரமாகவும் இருந்த நொய்யல், இன்று கடந்து செல்பவர்கள் முகம் சுளிக்கும்
அளவுக்கு கழிவுகளை சுமந்து செல்கிறது. விவசாயிகளை செழிப்படையச் செய்த அதே
நொய்யல், அவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
*
நொய்யலை காக்க என்ன தான் தீர்வு?:*- கொங்கு நாகரிகத்துக்கு வேராக இருந்த நதி,
25 ஆண்டுகளில் இல்லாமல் போய்விட்டது. இனியாவது அரசு விழித்துக் கொள்ளாவிட்டால்,
நொய்யல் என்ற பெயரை செவிவழியாக மட்டுமே கேட்க முடியும். நொய்யலை நேரடியாக
சீரமைத்து விட முடியாது. சங்கிலித்தொடர் போல், பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வு
கண்டு, சில நடைமுறைகளை கட்டுப்படுத்தினால் மட்டுமே சாத்தியம்.


* சாக்கடை கழிவுகள் நொய்யலில் கலக்கும் போது, பிளாஸ்டிக் கழிவுகள் நீரோட்டத்தை
தடை செய்கின்றன; பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தடை விதிக்க வேண்டும்.


* கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உடனடியாக செயல்பட, அரசு தடையின்மை
சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


* சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர்,
நச்சுத்தன்மை இல்லாமல் இருப்பினும், ஆற்றில் கலப்பதை தடை செய்ய வேண்டும். ஒரு
சொட்டு கழிவு நீர் கூட, ஆற்றில் கலக்காமல் குழாய் மூலம் அப்புறப்படுத்தப்பட
வேண்டும்.


* திருப்பூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை முழு அளவில் செயல்படுத்த
வேண்டும். பாதாள சாக்கடை கழிவை சுத்திகரித்து, அக்கழிவு நீரையும் குழாய் மூலம்
அப்புறப்படுத்த வேண்டும். நொய்யலின் பாதையில் உள்ள எந்த உள்ளாட்சி பகுதியில்
இருந்தும் சாக்கடை கழிவுகள் நொய்யலில் கலக்க தடை விதிக்க வேண்டும்.


* சாயக்கழிவு நீர் கடலில் கலக்கும் திட்டத்தை செயல்படுத்தும்போது,
சுத்திகரிக்கப்பட்ட சாக்கடை கழிவு நீரையும், அதே குழாய் மூலம்
அப்புறப்படுத்துவற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.


* நொய்யலை தூர்வார வேண்டும். ஆக்கிரமிப்பை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும்.
நொய்யலால் நீராதாரம் பெறும் குளங்களும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே,
அவற்றையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இத்திட்டங்களுக்காக, சில ஆயிரம் கோடிகள் தேவைப்படும். ஆயினும், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை தன் மெத்தனப்போக்கால் சிதைத்து விட்ட அரசு, பணத்தை செலவழித்தே ஆக வேண்டும்.


* கோர்ட்டில் உள்ள நொய்யல் தொடர்பான வழக்குகளை அனைத்து தரப்பும் வாபஸ் பெற்று, நேரடியான தனிக்குழு மூலம் பேச்சு நடத்த வேண்டும். அல்லது விரைவு நீதிமன்றம் மூலம் மூன்று மாதங்களுக்குள் தீர்வு காண வேண்டும்.
திருப்பூர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி. தன் பதவிக்காலம்
முடிவடையும் முன் இதை செய்து முடித்தால், வரலாறு அவரை நன்றியுடன் நினைவுகூறும்.


நன்றி: தினமலர்


Thanks
Thamilselvan Subramaniam

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook