நொய்யல் ஆறு

12/11/2010 12:25:00 PM

ஒரு நதி எப்படி ஆகக்கூடாது என்பதற்கு உதாரணமாக ஓடிக்கொண்டிருக்கிறது நொய்யல் ஆறு. சாய ஆலை ரசாயனக் கழிவு எவ்வளவு பாதித்துள்ளது என்பதற்குச் சான்றாகி உள்ளது, சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணை.

சங்க இலக்கியங்களில் "காஞ்சிமாநதி' என்று சிறப்பு பெற்ற நொய்யல் ஆறு, கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்கள் வழியே 174 கிலோ மீட்டர் பயணம் செய்து, கரூர் அருகே காவிரியில் கலக்கிறது.வற்றாத நதியாக ஓடிய நொய்யல், காலப்போக்கில் பருவமழையை நம்பி வாழ்ந்தது. இன்றோ, திருப்பூர் பகுதியில் செயல்படும் சாயப் பட்டறைகளின் சுத்திகரிக்கப்படாத, ரசாயனக் கழிவுகளைச் சுமக்கும் சாக்கடையாக மாறிவிட்டது. நொய்யலில் வெள்ளக்காலத்தில் மிகுதியாக ஓடி, கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் விவசாயத்துக்குப் பயன்படுத்தும் வகையில், 1981ம் ஆண்டு 9,000 ஏக்கர் புஞ்சை நிலங்களுக்குப் பாசனமளிக்க வசதியாக சின்னமுத்தூர் அருகே தடுப்பு அணை கட்டி பாசனத்துக்கு வழிவகை செய்தனர்.


அடுத்த நிலையாக, 1984ம் ஆண்டு சென்னிமலை அருகே ஒரத்துப்பாளையத்தில் 17 கோடி ரூபாய் செலவில் 1,050 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ஒரத்துப்பாளையம் அணை கட்ட ஆரம்பிக்கப்பட்டது. 1992ம் ஆண்டில் அணை கட்டி முடிக்கப்பட்டது. 1996ம் ஆண்டு வரை ஒரத்துப்பாளையம் அணையிலிருந்து பாசனத்துக்கு நீர் விடப்பட்டது. அதன்பின், அணையின் மேற்பகுதியில் அமைந்துள்ள திருப்பூர் நகரம் பின்னலாடைத் தொழிலில் பெரும் வளர்ச்சியடைந்து வந்தது. அங்கு பனியன்களுக்குச் சாயம் தோய்க்கும் சாயப்பட்டறைகள் 200க்கும் மேற்பட்டவை நொய்யல் கரையிலேயே அமைக்கப்பட்டன. திருப்பூர் நகரம் வளர வளர, சாயப்பட்டறைகளின் கழிவுநீர் வரத்தும் அதிகமாகி, நொய்யல் ஆறு வழியாக ஒரத்துப்பாளையம் அணையில் பாசனத்துக்காகத் தேக்கி வைக்கப்பட்ட நீரை மாசுபடுத்தி விட்டது.


ரசாயனக் கழிவு அணையின் அடிமட்டத்தில் படிந்து, அணையின் நீரை பாசனத்துக்குப் பயன்படுத்த முடியாத அளவுக்குத் தள்ளப்பட்டது. அணை மாசுபட்டதன் தாக்கம் சுற்றுப்புறப் பகுதி கிராமங்களிலும் உடனடியாக எதிரொலித்தது. நிலத்தடி நீர்மட்டம் சாயக்கழிவாக மாறியதால் குடிநீர்க் கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகள் பாழாகின. விவசாய நிலங்கள் மலடாகின. இதைப் பார்த்துப் பரிதவித்த விவசாயிகள், அரசு உயர் மட்ட அதிகாரிகளுக்குப் புகார் மனுக்கள் கொடுத்தும் பயனில்லை. . விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.


அப்போது தான், சில வழிமுறைகளைக் கையாள நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. சாயப்பட்டறைகள் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும். நொய்யல் ஒரத்துப்பாளைம் நீர்த் தேக்கத்தில் படிந்துள்ள ரசாயனக் கழிவுகளை முற்றிலும் அகற்றுவதற்கு திருப்பூர் பகுதிகளில் சாயபட்டறை அதிபர்களிடம் பணம் வசூல் செய்து, திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டது. அணையில் தேங்கியிருந்த சாயக் கழிவுநீர், யாருக்கும் பாதிப்பு இல்லாமல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றப்பட்டது. நொய்யல் பாசன விவசாயிகள் பாதுகாப்பு சபையினரால் மீண்டும் 2003ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.


அதில், அணையைச் சுத்தப்படுத்த 12.50 கோடி ரூபாய் உடனடியாக திருப்பூர் சாயபட்டறை சங்கங்கள் செலுத்த வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. தற்போது 90 சதவீதம் அளவுக்கு தூர் வாரும் பணி நிறைவு பெற்றுள்ளது. உப்புத்தன்மை கொண்ட ரசாயன நீர் தேங்கியதில் அணையின் தடுப்புச் சுவர் பெரும் சேதமடைந்து விட்டது. ஷட்டர் மாற்றுதல், கைப்பிடிச் சுவர் அமைத்தல், சுவரின் உட்பகுதியில் ரிபிட் மண் கல் பதித்தல், அணையின் மேல்பகுதியில் தார்சாலைப் பணிகள் ஆகியவை நடந்துள்ளன. அணையிலிருந்து, காவிரியாறு வரை நொய்யலாற்றைச் சுத்தப்படுத்தும் பணியும் நிறைவு பெற்றுள்ளது. இப்பணிகளுக்கு ஐந்து கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது.இவையெல்லாவற்றையும் விட முக்கியமாக, அணைக்கு மீண்டும் சாயக் கழிவுநீர் வராமல் தடுக்க வேண்டும். அதற்கு, "திருப்பூர் பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளில் "ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ்' (ஆர்.ஓ.,) முறையில் கழிவுநீரை முழுமையாகச் சுத்திகரிப்பு செய்யும் இயந்திரங்கள் பொருத்த வேண்டும்' என நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. . இதனால், இன்று வரை அணைக்குச் சாயக்கழிவு வரத் தான் செய்கிறது. இதைக் கண்காணிக்க முடியாத அரசு, சாயக்கழிவுகளை குழாய் மூலம் கொண்டு சென்று கடலில் கலக்கும் திட்டம் 750 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என அறிவித்தது. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.


இந்த நதியை சுத்தப்படுத்த என்ன முயன்றாலும் முடியாது என்பதில்லை. முடிந்த வரை திருப்பூரில் கூட மேற்க்கே டயமண்ட் தியேட்டர் முதல் கிழக்கே மின்மயானம் வரை ஆற்றை ஆழப்படுத்தி ஒருபுறம் மட்டுமே சிமெண்ட் வாய்க்கால் அமைத்து நகரத்தின் கழிவு நீரை தேங்காமல் ஓடச் செய்யலாம். இதனால் என்ன பலன் என்று கேட்காதீர்கள். நகருக்குள் கொசுக்களின் தொந்தரவைக்குறைக்கலாம். மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பை தீவிரமாக, குறைந்த பட்சம் டிபார்ட் மெண்ட் ஸ்டோர்கள், ஓட்டல்களில் உபயோகப்படுத்தாமல் குறைக்க தன்னார்வத்தோடு முன்வந்தால் போதுமானது. கழிவு நீர் தேங்க முழுமுதற்காரணமே இந்த பிளாஸ்டி கேரி பேக்குகள் என்பதையும் நாம் மறக்காமல் ஆற்றை சுத்தப்படுத்த முன்வருவோமாக.நன்றி - வாய்ப்பாடி குமார்  அவர்களே
[this article taken from http://voipadi.blogspot.com]

Thanks
Thamilselvan Subramaniam

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook