கோவை:"மண் புழு உரம் தயாரித்தல் மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; இயற்கை உரங்களுக்கு வழங்கப்படும் மானியத்தையும் அதிகப்படுத்த வேண்டும்' என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.தற்போதைய சூழலில் இயற்கையை நம்பி தொழில் செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இளைய தலைமுறையினர் மாற்றுத் தொழிலை நாடிவருகின்றனர். விவசாயத்தில் குறைவான வருவாய் கிடைப்பதே இதற்கு காரணம். மேலும், போதிய மழையின்மை, தொழிலாளர் பற்றாக்குறை, கூலி உயர்வு, விதை மற்றும் உரத்தின் விலையேற்றமும் விவசாயத்தை சோதனைக்குள்ளாக்கி வருகிறது. முதலீட்டுச் செலவை ஈடுகட்டி, லாபம் பார்க்கும் அளவிற்கு விவசாய உற்பத்தி பொருட்களுக்கு விலை கிடைப்பதில்லை. இதனால், பலரும் விவசாயத்தை கைவிட்டு வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர். எனவே, விவசாயிகள் வேறு தொழிலுக்கு செல்வதை தவிர்க்க, விவசாயம் சார்ந்த மாற்றுத்தொழிலையும் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.ஆடு, மாடு, கோழி, தேனீ வளர்ப்பு தொழில்களை அரசு ஊக்குவிக்கிறது.
இந்த வகையில், விவசாயிகளுக்கு வருவாய் தரக்கூடிய இனத்தில் மண்புழு உரமும் முக்கிய இடம் பிடித்துள்ளது; மண்புழு விவசாயிகளின் தோழன். மண் புழு, மண்ணில் ஊர்ந்து விளைநிலம் இறுகிவிடாமல் செய்கிறது. தற்போது, உற்பத்தி அதிகரிப்பையே நோக்கமாக கொண்டு செயற்கை உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை அதிகளவில் பயன்படுத்துவதால், மண்ணின் தன்மை கெட்டு, மண் புழுக்களும் அழிந்து வருகின்றன.இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், பல விவசாயிகள் மண்புழு உரம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். எனினும், இந்த உரம், ஏற்றுமதி தரத்தில் இல்லை; உள்ளூரில் சந்தைப்படுத்தும் தரத்திலேயே உள்ளது. மண்புழு உரத்தை ஏற்றுமதி செய்து லாபம் பார்க்க, தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறையின் அனுமதி பெற வேண்டும். குறைந்த அளவிலான விவசாயிகளே இதற்கான அனுமதியை பெற்றுள்ளனர். ஏற்றுமதி தரத்திலான மண்புழு உரத்தை தயார் செய்ய, கூடுதலான உதவி மற்றும் ஊக்குவிப்பு தேவை என்பது விவசாயிகள் கோரிக்கையாக உள்ளது.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:சாதாரண எருவை விட, மண்புழு உரத்தில் 6 பங்கு தழைச்சத்து, 7 மடங்கு மணிச்சத்து, 11 பங்கு சாம்பல் சத்து உள்ளது. மக்கிய எருவை மட்டும் மண்புழு உண்ணும். ஒரு கிலோ மாட்டுச் சாணத்தில், 30 கிலோ தாவர கழிவுகளை மக்க வைக்க முடியும். ஒரு மாடு பத்து கிலோ சாணம் கொடுத்தால் 300 கிலோ தாவரக் கழிவை மக்க வைக்கலாம். பண்ணை கழிவுகளை மட்டும் பயன்படுத்தினால் தரமான உரம் கிடைக்கும். ஒவ்வொரு நாளும் போதிய கழிவுகள் கிடைப்பதில்லை. கழிவு பற்றாக்குறையை தீர்க்க குடியிருப்புகளில் கிடைக்கும் கழிவை பயன்படுத்துகின்றனர். குடியிருப்பு கழிவுகளின் மூலம் எருவின் தரம் குறைந்துவிடுகிறது. தயாரித்த மண்புழு உரத்தை விற்பனை செய்வதில் சிக்கல் உள்ளது. உள்ளூர் மார்க்கெட் விற்பனையை உயர்த்த, விவசாயிகளிடம் கூடுதல் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். மேலும், அரசு நேரடி கொள்முதல் செய்தும், ஏற்றுமதி வாய்ப்பை அதிகரித்தும் தர வேண்டும்.உணவுத் தட்டுப்பாட்டை தீர்க்க ரசாயன முறையை ஊக்குவிப்பதை அரசு தவிர்க்க வேண்டும்.
செயற்கை உரங்களுக்கு அளித்து வரும் மானியத்தை குறைத்து, இயற்கை உரங்களுக்கு கூடுதல் மானியம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்."மண்புழு உர ஏற்றுமதிக்கு வாய்ப்பு'தமிழ்நாடு அங்கக சான்றளிப்புத்துறை மதிப்பீட்டாளர் சைலம் கூறியதாவது:மண்ணில் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் உள்ளன. செயற்கை உரம், பூச்சிகொல்லி ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம் நுண்ணுயிரிகள் இறந்துவிடுகின்றன. அனைத்து தரப்பினரும் இயற்கை சார்ந்த விவசாயத்திற்கு மாறினால் மண்புழு, பஞ்சகாவியம் உள்ளிட்ட இயற்கை தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். ஏற்றுமதி தரத்தில் மண்புழு உரம் தயாரிக்க, முறையான தயாரிப்பு திட்டம் தேவை. ஆவணங்கள் பயன்படுத்துவதில் இருந்து உரம் தயாரிக்கும் வரை பணிகளை ஒருங்கிணைக்க வேண்டும். இயற்கை இடுபொருள், இருப்பு வைத்தல், பேக்கிங் செய்தல், எடுத்துச் செல்லுதல் ஆகியவை ஏற்றுமதியில் கவனிக்கப்பட வேண்டியவை. இதற்கு, தேசிய அங்கக உற்பத்தி திட்டத்தின் கீழ் செயல்பட வேண்டும். மண்புழு உரம் தயாரிப்பதற்கான விபரம் மற்றும் உதவிகளுக்கு வட்டார வேளாண் அலுவலகத்தையும், சான்று பெறுவதற்கு அங்கக சான்றளிப்பு துறையையும் அணுகலாம். அங்ககச் சான்று பெற 3,400 ரூபாய் கட்டணம். மண் புழு உரத்துக்கான தரத்தை நிர்ணயம் செய்வதில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கூட தெளிவான பார்வை இல்லை. இந்திய விவசாயிகள் முயற்சி செய்தால், மண் புழு உர ஏற்றுமதிற்கான வாய்ப்பை பெறலாம். அதற்கான வளங்கள் அதிகமுள்ளன. ஏற்றுமதி வாய்ப்பை பெற்றால், இந்திய விவசாயிகளின் எதிர்காலம் சிறப்படையும்.இவ்வாறு, சைலம் கூறினார்.
courtesy - Dinamalar
Thanks
Thamilselvan subramaniam