சீனாவைப் பற்றி புரட்சியாளர் அம்பேத்கர்
7/02/2014 09:06:00 AM1951 அக்டோபர் 6ல் ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனத்தின் செயற்குழு அம்பேத்கர் இல்லத்தில் நடைபெற்றது. அதில் கம்யூனிசம், சோஷலிசம், காந்தீயம் அல்லது வேறு எந்த இசத்துக்கும் எந்தக்குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கும் கட்சியின் கோட்பாடு கட்டுப்பட்டதல்ல என்பதையும் ....தனிப்பட்டவர்களின் சுதந்திரம் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை அழித்து அதற்குப் பதிலாக ஏதேச்சாதிகாரத்தை கொண்டுவருவதை இலட்சியமாகக் கொண்டுள்ள கம்யூனிஸ்டு கட்சிகள் போன்ற கட்சிகளுடன் ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனம் எந்த உறவையும் வைத்துக்கொள்ளாது என்பதையும் மறுபடியும் தெளிவு படுத்தியது. இந்த செயற்குழு தமது வெளிநாட்டுக் கொள்கை என்ன என்பது பற்றியும் சொல்லியது.
அந்த வெளிநாட்டுக் கொள்கையைப் பார்த்தோமானால் அம்பேத்கர் கம்யூனிச சீனாவையும் நம்பவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
‘‘நமது வெளிநாட்டுக் கொள்கைகளில் சீனா பற்றிய நம் கண்ணோட்டம் பல நாடுகளை நமது விரோதிகளாக்கிவிட்டன. ஐ.நா.வில் சீனா நிரந்தர உறுப்பினராவதற்கு இந்தியா போராட வேண்டி வந்துள்ளது. இது ஓர் அசாதாரணமான விஷயம். இந்தப் போராட்டத்தை நடத்த சீனாவுக்கு வலிமை இருக்கும்போது ஏன் இதற்காக இந்தியா போராட வேண்டும். கம்யூனிஸ்டு சீனாவுக்கு ஆதரவாக இந்தியா செயல்படுவதே இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் பகைமை உணர்ச்சிக்குக் காரணம். இதன் விளைவாக அமெரிக்காவிட மிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை நாம் பெற முடிவதில்லை.
.....தன் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதே இந்தியாவின் தலையாய கடமை. ஐ.நா.வில் சீனா நிரந்தர உறுப்பினராகச் சேர்க்கப்பட வேண்டும் என்பதற்குப் போராடுவதற்குப் பதிலாக தான் ஐ.நா.வின் நிரந்த உறுப்பினராவதற்கு இந்தியா பாடுபட வேண்டும். இதைச் செய்வதற்குப் பதிலாக சியாங்கேஷேக்குக்கு எதிரான மாவோவின் போராட்டத்தில் இந்தியா தன் சக்தியை விரயம் செய்கிறது. உலக ரட்சகனாக நடந்து கொள்ளும் இந்த பைத்தியக்காரக் கொள்கை இந்தியாவிற்கு அழிவையே கொண்டுவரும். தற்கொலைக்கொப்பான இந்த வெளிநாட்டுக் கொள்கை எவ்வளவு சீக்கிரம் மாற்றப்படுகிறதோ அவ்வளவு சீக்கிரம் இந்தியாவுக்கு நன்மை உண்டாகும். ஆசிய நாடுகளின் பிரச்சினைகளுக்கு குரல் எழுப்புவதற்கு முன்பு இந்தியா தன்னைப் பலப்படுத்திக் கொள்ள எல்லா உதவிகளையும் பெற கடுமையாக பாடுபட வேண்டும். அப்பொழுதுதான் அதன் குரலுக்கு மதிப்பு இருக்கும். இத்தைகய வெளிநாட்டுக் கொள்கையையே ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனம் கடைபிடிக்கும்.’’
அதாவது இந்திய கம்யூனிசம் மட்டுமல்ல கம்யூனிச சீனா, கம்யூனிச ரஷ்யா போன்ற கம்யூனிசம் கோலோச்சுகிற நாடு களையும் அவர் நம்பவில்லை.
இந்தியாவின் இரண்டாவது தலைநகரம் அமைவது பற்றி எழுதுகையில் அம்பேத்கர் குறிப்பிடுகிறார் : “இந்தியாவும் சீனாவும் இப்போது இப்போது நட்புநாடுகளாக இருந்தாலும் இந்த நட்புறவு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை யாராலும் திட்டவட்டமாகக் கூற முடியாது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்படும் வாய்ப்பு எப்போதும் இருக்கவே செய்கிறது.’’ என்று - மொழிவாரி மாநிலங்கள் பற்றிய சிந்தனைகள், (1955) நூலில் கூறுகிறார்
0 comments