பண்ணைக் குட்டைகள்

2/18/2013 05:05:00 PM

இந்த வருடம் பருவ மழை பொய்த்துப்போனதால் விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி நிற்கிறது.அதிலும் மழையை மட்டும் நம்பி விவசாயம் செய்யும் மானாவாரி விவசாயிகளின் கதி இன்னும் மோசம். மானவாரி நிலங்கள் அதிகமுள்ள பகுதிகளில் மழை பொய்க்கும் போதெல்லாம் பயிர்கள் கருகுவதும், கருகிய பயிர்களைப் பார்த்து விவசாயிகள் ரத்தக் கண்ணீர் வடிப்பதும் வழக்கம். ஆனால் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சவேரியார்பட்டினம் என்ற கிராமத்து விவசாயிகள் ‘பண்ணைக் குட்டைகள்’ (FARM POND) என்ற புதிய மாற்றுவழியால் மழை பொய்த்தாலும் ஆண்டு தோறும் லாபகரமாக விவசாயம் செய்துவருகின்றனர். பண்ணைக்குட்டைகள் இரண்டாம்தர நீர்த்தேக்கம் என அழைக்கப்படுகின்றன. தன் நிலத்தில் விழும் நீரை விவசாயியே பண்ணைக்குட்டை மூலம் தன் நிலத்திற்குள்ளேயே தேக்கிவைக்க முடியும். தற்போது கிராமங்களில் கண்மாய்கள் இருந்தாலும் நீர்வரத்துக் கால்வாய்கள் பெரும்பாலானவை ஆக்கிரமிப்புகளாலும், பராமரிப்பின்றியும் சேதமடைந்துள்ளன. இவற்றின் மூலம் கண்மாய் நிரம்பும் என்பது நடக்காத காரியம். எனவே, மானாவாரி விவசாயிகளுக்கு பண்ணைக்குட்டைகள் ஒரு சிறந்த மாற்று. வழக்கமாக மானாவாரி நிலங்களில் மழை பெய்தவுடன் விவசாயம் தொடங்கிவிடும். பயிர் ஓரளவிற்கு வளர்ந்து, அறுவடைக்குத் தயாராகும் கடைசி நேரத்தில் மழை பொய்த்து, பயிருக்குப் பாய்ச்ச நீரின்றி பயிர்கள் கருகும் அவலம் நிகழும். ஆனால் பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்ட நிலத்தில் பயிர்கள் கருகும் நிலை ஏற்படாது. நிலத்தின் ஒரு மூலையில் வெட்டப்படும் செவ்வகக்குழி போன்ற அமைப்பு கொண்ட பண்ணைக்குட்டைகள் முதல் மழை பெய்ததும் நிரம்பி விடும். பின்னர் மழை பெய்யாமல் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும் காலத்தில் பண்ணைக்குட்டைகளில் உள்ள நீர், பயிருக்கு அளிக்கப்பட்டு முழு விளைச்சல் உறுதி செய்யப்படும். இரண்டரை ஏக்கர் நிலத்தில் சுமார் 1,000 முதல் 1,500 கன மீட்டர் நீர் தேங்க 30 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம், 1.5 மீட்டர் ஆழம் கொண்ட பண்ணைக்குட்டை அமைக்க வேண்டும். ஆழத்தை தேவைக்கேற்ப அதிகரித்துக்கொள்ளலாம். பண்ணைக்குட்டை நிலத்தில் எந்தப் பகுதி தாழ்வாக உள்ளது எனக் கண்டறியப்பட்டு, அங்கு வெட்டப்படுகிறது. ஒரு பண்ணைக்குட்டை அமைக்க, தற்போதைய சூழலில் ஒரு கன மீட்டருக்கு 35 முதல் 38 ரூபாய் வரை செலவாகிறது. நீர் ஆவியாகாமல் இருக்க, செவ்வக வடிவில் அமைக்கப்படும் பண்ணைக்குட்டைகளை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரித்தால் போதும். இராமநாதபுரம் மாவட்டம் கடலாடியிலிருந்து சுமார் 14 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சவேரியார்பட்டினம் கிராமத்தில் சுமார் 250 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்தக் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டைகளின் எண்ணிக்கை 360. தானம் அறக்கட்டளையின் வழிகாட்டுதல் மற்றும் நிதி உதவியுடன் 2000ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது அக்கிராம மக்களின் பொருளாதாரத்தை வெகுவாக முன்னேற்றியுள்ளது.தானம் அறக்கட்டளையினர் பண்ணைக்குட்டைகளின் அவசியம் குறித்து எடுத்துக் கூறும்போது கிராம மக்கள் யாரும் உடன்படவில்லை. நிலம் வீணாகும், மண் அள்ள முடியாது என மறுத்தார்கள். முதல் ஆளாக நான் முன்வந்து, என் நிலத்தில் 2002ம் ஆண்டு நபார்டு மற்றும் தானம் அறக்கட்டளையின் நிதி உதவியுடன் நானும் சிறிது பணம் போட்டு, பண்ணைக்குட்டை அமைத்தேன். சரியாக அந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் மற்ற விவசாயிகளின் நிலத்தில் நீர்ப் பற்றாக்குறையால் பயிர்கள் கருகின. ஆனால், பண்ணைக்குட்டைகளின் உதவியால் நான் நல்ல விளைச்சல் எடுத்தேன்" என மகிழ்ச்சியுடன் கூறினார், சவேரியார்பட்டினம் கிராம விவசாயியான சூசை மாணிக்கம். பண்ணைக்குட்டை வந்த பிறகு, தண்ணீரை காசு கொடுத்து வாங்குவதில்லை. பயிர்கள் கருகியதும் இல்லை" என்கிறார், பண்ணைக்குட்டையால் பயனடைந்த மற்றொரு விவசாயியான மைக்கேல். இக்கிராம மக்கள் பண்ணைக்குட்டைகள் அமைத்த பிறகு ஏக்கருக்கு 30,000 ரூபாய் வரை நிகர வருமானம் ஈட்டிவருகின்றனர். அதிலும் மிளகாய் உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கின்றனர். மழை நன்றாகப் பெய்யும் காலங்களில் பண்ணைக்குட்டையிலுள்ள நீர் பயன்படாது. அந்தச் சமயங்களில் மீன் வகைகளை அவற்றில் வளர்க்கலாம். இன்னும் சில விவசாயிகள் பண்ணைக்குட்டையில் உபரி நீர் இருக்கும்போது, பருத்தி போன்றவற்றை பயிரிட்டுக் கொள்கின்றனர். மொத்தத்தில் பண்ணைக்குட்டைகள் ஒரு குட்டிப் பொருளாதார மண்டலம்" என்கிறார், தானம் அறக்கட்டளையின் முதுகுளத்தூர் பகுதி மூத்த திட்ட நிர்வாகி வெள்ளையப்பன். தானம் அமைப்பினரின் தொடர்பு எண்: 0452-2601673 , Thanks Puthiyathalaimurai

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook