சர்தார் உத்தம் சிங்
11/24/2013 08:49:00 PMசர்தார் உத்தம் சிங் 1919 ஏப்ரல் 13 அன்று ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தது. தற்காப்பு ஏதுமின்றி அமைதியாகக் கூடியிருந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை, ஜெனரல் ஓ டயர் பிறப்பித்த உத்தரவின் பேரில் சுட்டுக்கொன்றனர். அரசியல் காரணங்களுக்காக உண்மையான எண்ணிக்கை வெளியே சொல்லப்படாவிட்டாலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் எந்த முன்னறிவிப்புமின்றிச் சுட்டுக் கொல்லப்படனர் என்பது நிதரிசனம். இப்படுகொலையைக் கண்டு மனம் கொதித்த உதம் சிங், அமிர்த சரஸில் நீராடி, ஹரிமந்திர் சாகிப்பில் ஜாலியன்வாலாபாக் படுகொலையை நடத்திய ஜெனரல் டயரைக் கொல்லுவதாகச் சபதம் எடுத்துக் கொண்டார். 1940 மார்ச் 13 – ஏறக்குறைய இருபது ஆண்டுகள் – சரியாக ஒரு மாத காலகட்ட இடைவெளி. காக்ஸ்டன் ஹாலில் கிழக்கு இந்திய அசோசியேஷன் மற்றும் ராயல் சென்ட்ரல் ஏஷியன் சொசைட்டி ஆகியவற்றின் கூட்டத்தில் பங்கு பெற வந்திருந்த சீமான்களில் முக்கியமானவனாக வந்திருந்தான் டயர். கூட்டத்தில் கையில் ஒரு புத்தகத்துடன் உதம் சிங். புத்தகத்துக்குள் கச்சிதமாக வெட்டப்பட்ட பக்கங்களுக்குள் 0.45 ஸ்மித் வெல்ஸன் கைத்துப்பாக்கி. பஞ்சாபில் தாம் செய்த செயலுக்காகத் தாம் சிறிதளவும் வருத்தப்படவில்லை என்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நீடித்த வாழ்வுக்காக பஞ்சாபில் தாம் செய்ததை ஆப்பிரிக்காவிலும் தாம் வாய்ப்பு கிடைத்தால் அரங்கேற்றச் சித்தமாக இருப்பதாகவும் தன் பேச்சில் டயர் குறிப்பிட்டான். இத்தருணத்தில் கூட்டத்தில் இருந்த உத்தம் சிங் எழுந்தார். “அந்த வாய்ப்பு உமக்கு கிடைக்கப்போவதில்லை சர். மைக்கேல் டயர் அவர்களே” எனக் கூறியபடி துப்பாக்கியை எடுத்தார். உதம் சிங்கின் குறி தவறவில்லை முதல் குண்டு அவன் மார்பையும் இரண்டாம் குண்டு அவனது சிறுநீரகத்தையும் சிதைக்க, தாக்கப்பட்ட மைக்கேல் டயர் அங்கேயே மரணம் அடைந்தான். இந்திய அரசு செக்ரட்டரியான செட்லாண்ட் காயமடைந்தார். லாமிங்டன் என்கிற பிரிட்டிஷ் பிரபுவின் கை சிதறிப் போனது. “நீண்ட 21 ஆண்டுகளாக இப்படிப் பழிதீர்க்க முயன்று வருகிறேன். என்பணி நிறைவேறியதற்காக நான் ஆனந்தமடைகிறேன். இது என் கடமை” என்று முழங்கினான். கதிகலங்கிப்போனது ஆங்கிலேயக் காலனி அரசு. ஆனால் விடுதலைப் போராட்டத்தை அகிம்சைவழியில் கொண்டு செல்ல உறுதியேற்றிருந்த மகாத்மா மற்றும் பண்டித நேரு ஆகியோர் இதைக் கண்டித்தனர். “பைத்தியகாரத்தனமான செயல்” என்று கூறினார் காந்தியடிகள்.. பிரிட்டிஷாருக்குத் தமது கோட்டையிலேயே தமது சாம்ராஜ்யத்தின் வலிமை வாய்ந்த தளபதியை ஓர் இந்தியன் கொன்றான் என்பது அவமானகரமாக இருந்தது. “உதம் சிங் மனநிலை பிறழ்ந்தவர்” என ஒரு பிரச்சாரத்தை அவர்கள் தொடங்கினார்கள். இந்நிலையில் பஞ்சாப் பிரமுகர்கள் பலர் உதம் சிங்கை எப்படியாவது விடுவிக்க வேண்டும் என வக்கீல்களைத் தேடி அலைந்து இறுதியில் கிருஷ்ண மேனனை வக்கீலாக அமர்த்தினர். கிருஷ்ண மேனன் உதம் சிங்கைத் தான் பைத்தியம் என ஒப்புக்கொள்ளும்படியும் அப்படிச் சொன்னால் தப்பித்துவிடலாம் என்றும் கூறினார். உதம் சிங் வேதனையுடன் அதனை மறுத்துவிட்டார். இறுதியாக அவர் “பாரத மாதா கீ ஜே!” என முழக்கமிட்டபடி இழுத்துச் செல்லப்பட்டார். . ஜூலை 31, 1940 அன்று அவர் வந்தேமாதர கோஷத்துடன் தூக்குக்கயிறை முத்தமிட்டார். “தியாகச்சிங்கம்” என அழைக்கப்பட்ட அவரது உடல் சீக்கிய மதச்சடங்குகளுக்கு தடைவிதிக்கப்பட்டு சிறைச்சாலையில் புதைக்கப்பட்டது.
0 comments