அபிமன்யுவின் வீரம்..!

1/05/2014 02:07:00 PM

சிறுவன் ஒருவன் சாதனைகளைச் செய்ய முடியுமா? நிச்சயமாய் முடியும். அபிமன்யுவின் வரலாறை படிக்கும் குழந்தைகள் பெரும் சாதனையாளர்களாக மாறுவார்கள். அர்ஜூனனின் மனைவி சுபத்ரா. துவாரகை மன்னன் பலராமன், கண்ணன் ஆகியோரின் தங்கை. அவளுக்கு ஆனைப்பட்டணம் என்ற ஊரை சீதனமாக அளித்தார் பலராமன். சுபத்ரா கர்ப்பமாக இருந்த நேரத்தில் அண்ணன் கண்ணனிடம் போர் முறைகளைப் பற்றி கேட்டாள். கண்ணன் சொல்ல ஆரம்பித்தார். எப்படியெல்லாம் போரில் யூகங்கள் வகுக்கப்படும், அதிலிருந்து எப்படியெல்லாம் வீரர்கள் தப்புவார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவரது விளக்கம் சுபத்ராவுக்கு போரடித்து விட்டது போலும். உம் கொட்டிக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தவள் அப்படியே தூங்கி விட்டாள். ஆனால் உம் சத்தம் மட்டும் வந்து கொண்டே இருந்தது. சுபத்ராவின் வயிற்றில் இருந்த குழந்தை தான் அது.போர் முறைகளைப் பற்றிக் கவனமாகக் கேட்டுக் கொண்டே உம் கொட்டியது. கண்ணன் அப்போது சக்ர வியூகம் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அதை அமைக்கும் விதத்தைச் சொல்லி முடித்த அவர், தங்கையைக் கவனித்தார். தங்கை அயர்ந்து உறங்கி விட்டதைப் பார்த்து எழுந்து விட்டார். சக்ரவியூகத்தில் இருந்து தப்பிக்கும் வழியைச் சொல்வதற்குள் தங்கை தூங்கி விட்டதால் கண்ணன் பாதியில் முடித்து விட்டார். கருவில் இருக்கும் போதே வீரக்கதை கேட்ட அந்த குழந்தைதான் அபிமன்யு. அவன் பிறந்ததும், பலராமனுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சுந்தரி என பெயர் சூட்டினர். அவள் அழகில் சிறந்து விளங்கினாள். இருவரும் வளர்ந்ததும், திருமணம் செய்து வைத்து விடுவோம் என பேசி முடித்தனர். ஆண்டுகள் கடந்தன. அபிமன்யு தன் மாமா பலராமனிடம் வித்தைகள் பல கற்றான். தனிடையே அபிமன்யுவின் தந்தை அர்ஜூனன், நாடிழந்து வனவாசம் சென்று விட்டான். சுபத்ரா தனியாக இருந்ததால், அபிமன்யு தாய்க்கு துணையாகச் சென்று விட்டான். இளம் பருவத்திலேயே திருமணம் பேசி முடித்ததால், அபிமன்யு மீது சுந்தரி தீராக்காதல் கொண்டிருந்தாள்.

சுந்தரிக்கு மணம் முடிக்க ஏற்பாடு ஆனது. இந்த நிலையில் சகுனி துரியோதனனிடம் ஒரு யோசனை சொன்னான். துரியோதனா! பலராமன் நம் பக்கம் இருப்பது எபபோதுமே நல்லது. அவனது உறவு நிலையாக இருக்க வேண்டுமானால், உனது மகன் லக்குவனுக்கு பலராமனின் மகள் சுந்தரியை மணம் முடித்து விடு. உறவு பலப்படும், என்றான். துரியோதனனுக்கு இந்த யோசனை நல்லதாகத் தெரிந்தது. பலராமனுக்கு ஓலை அனுப்பினான். பலராமனுக்கு பெரும் மகிழ்ச்சி. துரியோதன மகாராஜா பாண்டவர்களின் ராஜ்யத்தையும் வெற்றி கொண்டு பரந்த நிலப்பரப்பை வைத்திருக்கிறார். அவரது வீட்டில், நீ வாழ்ந்தால் மிகுந்த செல்வச் செழிப்புடன் இருப்பாய், என மகளுக்கு அறிவுரை கூறினார் தந்தை. மகளால் தந்தையை எதிர்த்து பேச முடியவில்லை. ஆனால் அழுகை பீறிட, ஆபத்தாந்தவனான தன் சித்தப்பா கண்ணனிடம் புகார் சொன்னாள். பாருங்கள் சித்தப்பா! உங்கள் அண்ணன் செய்வது நியாயமா? அபிமன்யுவுக்கும், எனக்கும் காதல் வளர காரணமாக இருந்து விட்டு, இப்படி செய்யலாமா? என்றாள். கண்ணனும் அண்ணனிடம் பேசிப் பார்த்தார். அண்ணன் ஒப்புக் கொள்ளவில்லை. ஏற்கனவே நம் தங்கையை கட்டிக் கொடுத்து விட்டு அவள் கணவனுடன் வாழ இயலாமல் கஷ்டப்படுவது போதாதா? இன்னும் நம் மகளை வேறு அந்தக்குடும்பத்தில் திருமணம் செய்விக்க வேண்டுமா? அங்கே பொருள் இல்லையே. மகள் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் சிரமப்பட வேண்டுமா? சிறுவயதில் விளையாட்டாக பேசியதை எல்லாம் பொருட்படுத்தக் கூடாது. நீ கவுரவர்களை வரவேற்கும் ஏற்பாட்டைச்செய், என கண்ணனை விரட்டி விட்டார் பலராமன். கண்ணன் அண்ணனை எதிர்த்துப் பேச முடியாமல் போய் விட்டார். சுந்தரி நேரடியாக ஒரு ஓலையை அபிமன்யுவுக்கு அனுப்பி விட்டாள். அபிமன்யு ஆத்திரம் கொண்டான். சுபத்ராவால் இதை நம்பமுடியவில்லை. நேரடியாக அண்ணன் வீட்டுக்குச் சென்று, நியாயம் கேட்பதற்காக மகனுடன் புறப்பட்டாள். செல்லும் வழியில் அவளுக்கு கடும் சோர்வு ஏற்பட்டது. தாயும், மகனும் காட்டில் ரதத்தை நிறுத்தி விட்டு ஓய்வெடுத்தனர்.

அப்போது, ஒரு அரக்கன் அங்கு வந்தான். அவன் தனது காட்டில் அனுமதியின்றி தங்கிய அபிமன்யுவை எதிர்த்தான். அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அவன் அபிமன்யுவைக் கொன்று விட்டான். சுபத்ரா துடித்தாள். அவளது அழுகுரல் கேட்டு வனதேவதை அங்கு தோன்றினாள். அவள் ஒரு மந்திரத்தை உபதேசித்தாள். அதைச் சொல்லி மகனின் கன்னத்தில் வருடினாள் சுபத்ரா. அபிமன்யு உயிர் பெற்று எழுந்தான். எழுந்த வேகத்தில் தன்னுடன் போராடிய கடோத்கஜனையும், அவனைச் சேர்ந்த வீரர்களையும் கொன்று விட்டான். இதைக் கேள்விப்பட்டு கடோத்கஜனின் தாயார் அங்கு ஓடிவந்து அரற்றினாள். மகனே! நீ இறந்த விபரத்தை உன் தந்தை பீமனிடம் எப்படி சொல்வேன், என்று புலம்பினாள். அதன்பிறகு தான் இறந்தது பீமனின் மகன் என்பது தெரிந்தது. இறந்தது தனது சகோதரன் என்பதை அதன்பிறகே அபிமன்யு தெரிந்து கொண்டான். சுபத்ரா மனமிறங்கி, வனதேவதை சொல்லித் தந்த மந்திரத்தைச் சொல்லி கடோத்கஜனையும், மற்றவர்களையும் எழுப்பினாள். நடந்ததை அறிந்த கடோத்கஜன், மகிழ்ந்து தம்பி அபிமன்யுவுக்கு உதவ முன்வந்தான். அவர்களை காட்டிலேயே இருக்கச் சொல்லி விட்டு, பெண் வேடம் பூண்டு பலராமனின் நாட்டுக்குள் சென்றான். அவனும், அவனோடு உருமாறி வந்த பெண்களும் அரண்மனைக்குள் மாப்பிள்ளை வீட்டார் என சொல்லிப் புகுந்தனர். அங்கு சென்றதும் அவன் சுந்தரி போல உருவத்தை மாற்றிக் கொண்டு, முகூர்த்த சமயத்தில் மாப்பிள்ளை லக்குவன் பக்கத்தில் அமர்ந்தான். அவன் தாலி கட்ட வரும்போது, தனது அரக்க உருவத்தைக் காட்டினான். அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதற்குள் சுந்தரியை வான் வழி தூக்கிச்சென்றான் கடோத்கஜன். அதற்குள் கண்ணனும் பலராமனுக்கு தெரியாமல், காட்டிற்கு வந்தார்.

அபிமன்யுவுக்கும், சுந்தரிக்கும் அங்கேயே திருமணம் நடந்தது. இருவரும் பின்பு பலராமனைச் சந்தித்து ஆசிபெற்றனர். முதலில் கோபப்பட்டாலும், பின்பு சமாதானமாகி விட்டார் அவர். இதன்பிறகே குருஷேத்திர யுத்தம் நடந்தது. தர்மரை எப்படியும் சிறைபிடிப்பேன் என துரோணர் சபதம் எடுத்தார். இதற்காக பாண்டவர்களை அவரிடமிருந்து பிரித்து, வெவ்வேறு இடத்திற்கு கூட்டிச் சென்று விட்டால், அவரைப்பிடிப்பது எளிதாகும் என திட்டமிடப்பட்டது. அதன்படியே திட்டத்தையும் செயல்படுத்தினார்கள். பல்வேறு திசைகளிலிருந்து படைகள் பாய்ந்து வந்தன. அவர்கள் எல்லாரையும் தடுக்க திசைக்கு ஒருவராக எல்லாரும் பிரிந்தனர். தர்மர் தனித்து நின்ற போது, அபிமன்யு மட்டுமே பெரியப்பாவுக்கு பாதுகாப்பாக நின்றான். அவன் இளைஞன் தானே என்று, யாரும் கண்டு கொள்ளாமல் தர்மரை நெருங்கினர். ஆனால் அவனது வீரத்தின் முன் யாரும் நிற்கமுடியவில்லை. இதைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர். சக்ர வியூகம் அமைத்தால் மட்டுமே அவனைப் பிடிக்க முடியும் என்ற நிலைமை வந்தது. சக்ரவியூகத்தையும் உடைத்த அபிமன்யு கடுமையாகப் போரிட்டான். பலரை அம்பெய்து கொன்றான். ஆனால் அந்த வியூகத்தில் இருந்து எப்படி வெளியேறுவது என தெரியவில்லை. பலமுயற்சிகள் செய்தும் வெளிவர முடியாத அவனைக் கொன்றனர் எதிரிகள். இதற்குள் மற்ற படைகளை முறியடித்து விட்டு சகோதரர்கள் தர்மனையும் பாதுகாத்தனர். வீர மரணம் அடைந்த அபிமன்யுவைக் கண்டு அரற்றி அழுதான் அர்ஜூனன். அதற்கு பழிக்குப் பழிவாங்கும் வகையில் கவுரவ படைகளை அழித்து வெற்றி அடைந்தான்.

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook