மகாபாரத கதை..

1/09/2014 10:22:00 PM

சகாதேவன் ஜாதக சாஸ்திரத்தை அறிந்தவன் என்பதால், துரியோதனன் அவனிடம் வந்து, 'யுத்தத்தில் நாங்கள் வெற்றி பெற வேண்டும். அதற்கு நீதான் தேதி குறித்துக் கொடுக்க வேண்டும்’ என்று கேட்டான். அமாவாசை நாளைக் குறித்துக் கொடுத்து, 'வெற்றி உங்களுக்கே!’ என்றான் சகாதேவன்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ண பரமாத்மாவுக்கு வந்ததே கடும் கோபம்..! ''துரியோதனன், நம்மிடம் போர் செய்வதற்காகத்தான் தேதி குறிக்கச் சொல்கிறான். நம்மை வெல்வதற்காகத்தான் நல்ல நாள் பார்த்து தரச் சொல்லிக் கேட்டிருக்கிறான். அப்படியிருக்கும்போது, எப்படித் தேதி குறித்துக் கொடுக்கலாம் நீ? சரி... அந்தத் தேதி பொய்யான நாள்தானே?! தப்பான நேரத்தைத்தானே குறித்துக் கொடுத்தாய்?'' என்று கண்ணபிரான் கேட்டான்.

சகாதேவன் மெல்லியதாகச் சிரித்தபடி... ''ஜோதிட சாஸ்திரத்தைப் பொய்யாக எடுத்துரைப்பது பாவம்! அப்படிச் சொல்வது ஜோதிடத்தையே அவமதிப்பதாகிவிடும். ஒருநாளும் அப்படியரு தவற்றை நான் செய்யமாட்டேன். எனவே, நான் குறித்துக் கொடுத்த தேதியில், அமாவாசை திதியில் யுத்தம் செய்தால்... துரியோதனன் நிச்சயம் வெல்வான். நானும் என் சகோதரர்களும் தோற்கலாம்.

ஆனால், ஜோதிடத்தை நம் லாப- நட்டங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. ஜோதிட சாஸ்திரத்தில் இருந்து வழுவாமல் இருப்பது இந்த சகா தேவனின் வேலை. கள்ளத்தனம் செய்து, தகிடுதத்தம் பண்ணி, ஜெயிக்கச் செய்வது உன்னுடைய வேலை! அதை நீ பார்த்துக் கொள்!'' என்று பளிச்சென்று முகத்துக்கு நேராகச் சொன்னான் சகாதேவன்.

'அதெல்லாம் எனக்குத் தெரியும்’ என்று சிரித்துக்கொண்டே வந்த கண்ணபிரான், 14-ஆம் நாளான சதுர்த்தசியன்று, ஆற்றங்கரைக்குச் சென்று தர்ப்பணம் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டான். அதைக் கண்ட அனைவரும் அதிர்ந்து போனார்கள். 'இதென்ன குழப்பம்! நாளைக்குத்தானே அமாவாசை! கிருஷ்ண பரமாத்மா இன்றைக்குத் தர்ப்பணம் செய்கிறாரே...’ என்று பிரகஸ்பதியிடம் கேட்டார்கள். அதே நேரத்தில் சூரியனும் சந்திரனும் குழம்பிப்போன நிலையில் ஒன்று கூடினார்கள். புலம்பித் தீர்த்தார்கள். 'என்ன இது... ஒன்றுமே புரியவில்லையே..?’ எனத் தவித்து மருகினார்கள்.

இறுதியாக, ஸ்ரீகிருஷ்ணரிடமே சென்று, ''அமாவாசையன்றல்லவா தர்ப்பணம் செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்கள். உடனே, ஸ்ரீகிருஷ்ணர், 'முதலில் அமாவாசை என்றால் என்ன? அதைச் சொல்லுங்கள்?’ என்று கேட்டார் சிரித்தபடி. ''இதென்ன கேள்வி... சூரிய பகவானாகிய அவரும் சந்திரனாகிய நானும் சந்தித்துக் கொள்வதுதான் அமாவாசை திதி'' என்றார் சந்திர பகவான்.

''அதானே அமாவாசை? இதோ... சூரியன் - சந்திரன், நீங்கள் இரண்டு பேரும் இப்போது ஒன்றாகத்தானே இருக்கிறீர்கள்? எனவே, இந்தத் திதி அமாவாசை திதிதானே? அதனால்தான் தர்ப்பணம் செய்கிறேன்'' என்று குறும்புப் பார்வையுடன் சொன்னார் ஸ்ரீகிருஷ்ணர். அதுமட்டுமா? ''என் அனுஷ்டானத்துக்கு இடையூறு செய்யாதீர்கள். நான் அமாவாசை தர்ப்பணம் செய்யவேண்டும்'' என்று சொல்லிவிட்டு, விறுவிறுவென தர்ப்பணம் செய்வதில் ஈடுபட்டார் கிருஷ்ண பரமாத்மா.

பஞ்ச பாண்டவர்கள்(உண்மை) ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, எப்படி எல்லாம் தந்திரங்களைக் கையாண்டிருக்கிறார் கிருஷ்ணர் !!

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook