பெரிய கோயில் யானை வெள்ளையம்மாள்.

10/20/2013 07:44:00 AM

கடந்த ஒரு மாதமாக தஞ்சை பெரிய கோயிலின் உள்ளே உள்ள அந்த யானை மண்டபம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
பழக்க தோஷத்தில் வரும் பக்தர்கள் பலரும் அந்த யானை மண்டபத்தை நோக்கி போவதும் பின்னர் மண்டபம் வெறுமையாக இருப்பதை பார்த்ததும்தான் ஞாபகம் வந்தவர்களாய் கண்களில் கண்ணீர் திரள சில நொடிகள் அந்த இடத்தில் நின்றுவிட்டு திரும்புவதுமாக இருக்கின்றனர்.
அந்த பக்தர்களின் கண்ணீருக்கு காரணம் சமீபத்தில் இறந்த பெரிய கோயில் யானை வெள்ளையம்மாள்.
நாட்டிலேயே அதிக வயதான யானைகளில் ஒன்று என்று பலராலும் பிரமிப்புடனும், பக்தியுடனும், பாசத்துடனும் பார்க்கப்பட்ட வெள்ளையம்மாள் யாரும் எதிர்பாராத ஒரு வேளையில் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தி சென்று விட்டது.
வீரபாண்டிய கட்டபொம்மன் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியதை அடுத்து அந்த ஆண்டு (1960) தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ஒரு பத்து வயது பெண் யானையை பரிசாக கொடுத்தார். கட்டபொம்மன் படத்தில் சிவாஜிக்கு அடுத்தபடியாக அதிகம் பேசப்பட்ட பாத்திரம் வெள்ளையம்மாளாகும். "அஞ்சாத சிங்கம் என் காளை.. பஞ்சாய் பறக்கவிடும் ஆளை' என்று அந்த பாத்திரமாகவே மாறி நடித்தவர் நடிகை பத்மினி. அந்த பெயரையே யானைக்கும் வைத்துவிட்டார்.
தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலில் இருந்து கடந்த 85ம் ஆண்டு பெரிய கோவிலுக்கு வெள்ளையம்மாள் நிரந்தரமாக இடம் பெயர்ந்தது. அதன்பிறகு கோயில் தொடர்பாக நடைபெறும் அனைத்து விழாக்களுமே வெள்ளையம்மாள் இல்லாமல் நடைபெறாது. நாள் தவறாமல் யானை வெள்ளையம்மாளிடம் வந்து வணங்கியும் ஆசீர்வாதமும் பெற்றுச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் சென்றது.
பொதுவாகவே யானைகள் ஐம்பது வயதைத் தாண்டினாலே கால்களின் எலும்பு மூட்டில் தேய்மானம் ஏற்பட்டு படுக்கமுடியாத நிலை ஏற்பட்டுவிடும், இந்த பிரச்னை உள்ள யானைகள் காட்டில் உள்ள மரங்களின் மீதோ, மலை அல்லது பாறைகளின் மீதோ சாய்ந்து கொண்டுதான் தூங்கும்.
இந்த பிரச்னை வெள்ளையம்மாளுக்கும் அறுபது வயதில் ஏற்பட்டது. கேரளா ஆயுர்வேத சிகிச்சை உள்பட அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டாலும் படுக்கமுடியால் நின்று கொண்டேதான் வெள்ளையம்மாள் நீண்ட காலம் தூங்கியது. ஆனால் தனது வேதனையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன்னை பார்க்கவரும் பக்தர்களை சந்தோஷத்துடன் ஆசீர்வாதம் செய்து கொண்டுதான் இருந்தது.
திடீரென சில நாட்களுக்கு முன் நிற்கவும் முடியாமல் படுத்தது, பின் வலிதாங்க முடியாமல் பெருங்குரலெடுத்து பிளிறியது. கால்நடை டாக்டர்கள், பாகன்கள், கோவில் ஊழியர்கள், பக்தர்கள் அனைவரும் ஒன்று திரண்டு நிற்க அனைவரையும் பார்த்த யானை வெள்ளையம்மாள் தனது துதிக்கையை தூக்கி ஆசீர்வாதம் செய்ய முயற்சித்து, அது முடியாமல் போகவே கண்களின் ஓரம் நீரை வழியவிட்ட நிலையில் தனது உயிரைவிட்டது. பார்த்துக் கொண்டு இருந்த அனைவரது கண்களிலும் கண்ணீர், நெஞ்சில் சொல்லமுடியாத சோகம்.
யானை மண்டபத்தின் பின் பகுதியில் குழி தோண்டி நூறு கிலோ விபூதி பத்து கிலோ உப்பு மற்றும் அபிஷேகப்பொருட்களை இட்டு நிரப்பி சிறப்பு பூஜை செய்தபிறகு யானையை அடக்கம் செய்தனர். தஞ்சை பெரிய கோவிலின் ஒரு அங்கமாகவே மாறியிருந்த வெள்ளையம்மாளை கடைசி முறையாக பார்க்கிறோம் என்ற எண்ணம் எல்லோர் முகத்திலும் எதிரொலிக்க பலர் பெருங்குரலெடுத்து அழுதனர்.
யானை வெள்ளையம்மாள் இறந்து நாட்கள் வாரங்களாகிவிட்டன அது மாதங்களே ஆனாலும் மனதைவிட்டு அகலாது என்பதே நிஜம்.
-எல்.முருகராஜ்
Courtesy
Dinamalar

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook