மதுரையை சூறையாடிய மாலிக் கபூர்..

10/16/2013 12:26:00 PM

மாலிக் கபூர் என்றால் எஜமானனுக்கு உரியவர் என்றுபொருள். அவர் ஓர் அரவாணி. இவர் எங்கே பிறந்தார்? பெற்றோர் யார்? என்பதைப் பற்றிய தெளிவான ஆதாரங்கள் இல்லை. ஒரு வேசியின் பிள்ளை என்றும், இந்து வணிகரின் மகன் என்றும் இருவிதமான தகவல்கள் இருக்கின்றன. ஜலாலுதீன் கில்ஜியின் மருமகனான அலாவுதீன் கில்ஜி, தன் மாமனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினார்.

பெண்கள் மீது கில்ஜி அதீத மோகம்கொண்டவர் என்றும் கூறப்படுகிறது. அதனால், கமலா தேவியை மதமாற்றம் செய்து திருமணம் செய்துகொண்டதோடு அவளோடு கொண்டுவரப்பட்ட அடிமை மாலிக் கபூரை தனது படுக்கைத் தோழனாக வைத்துக்கொண்டார்.

இவரது ஆட்சிக் காலம் முழுவதும் படையெடுப்புகளால் நிரம்பி இருக்கிறது.அடிமையாக வந்து சேர்ந்த மாலிக் கபூர், கில்ஜியின் காதலியைப் போல நெருக்கமாக இருந்தார். அதை, வெளிப்படையாகவே கில்ஜியின் மனைவி கண்டித்தார். ஆனால், கில்ஜி கண்டுகொள்ளவில்லை. தனக்கு விருப்பமான அவரைப் படைப் பிரிவின் உதவி அதிகாரியாக நியமித்தார். சில ஆண்டுகளுக்குள் மாலிக் கபூர், கில்ஜியின் தளபதிகளில் ஒருவரானது அவரது நெருக்கமான உறவால்தான் என்கிறார்கள்.டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தன்வசப்படுத்திச் சூறையாடிய கில்ஜி, தென்னிந்திய அரசுகளை ஒடுக்கி செல்வத்தைக் கொள்ளையடிக்க மாலிக் கபூர் தலைமையில் தனது படையை அனுப்பிவைத்தார். 

தேவகிரி ராஜ்ஜியம், மைசூர், வாரங்கல், துவாரசமுத்திரம் எனச் சூறையாடி ஆயிரக்கணக்கான ஹிந்துகளை கொன்று குவித்தான் மாலிக் கபூர்.அப்போது, பாண்டிய நாட்டு மன்னராக இருந்த மாறவர்மன் குலசேகர பாண்டியனுக்கு, சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் என இரண்டு வாரிசுகள் இருந்தனர். அவர்களுள் சுந்தரபாண்டியன், பட்டத்தரசியின் மகன். வீரபாண்டியன், ஆசைநாயகியின் மகன். வீரபாண்டியனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டியதை எதிர்த்த சுந்தர பாண்டியன், தனது தந்தையைக் கொன்றுவிட்டு மதுரையில் முடி சூட்டிக்கொண்டான். இதனால், சகோதரர்களுக்கு இடையே போர் மூண்டது...

இதில், சுந்தரபாண்டியன் தோல்வி அடைந்து ஓடிவிட்டான். பிறகு, அரசாட்சியை மீட்க மாலிக் கபூரின் உதவியை நாடினான். மாலிக் கபூர் தனது படையுடன் வந்து வீரபாண்டியனை வெற்றிகொண்டதோடு, சுந்தரபாண்டியனையும் அடிமைப்படுத்தினான் என்பதும் குறிப்பிடத்தக்கது..

மாலிக் கபூர், மதுரையைத் தாக்கியபோது மதுரை கோயிலில் யானை மட்டுமே மிஞ்சி இருந்தது. அதைக் கைப்பற்றியதோடு, கோயிலுக்குத் தீ வைத்துவிட்டு அதுவரை கைப்பற்றிய பெரும் செல்வத்துடன் டெல்லி புறப்பட்டான். 312 யானைகள், 20 ஆயிரம் குதிரைகள், கோகினூர் வைரம், தங்க நாணயங்கள், முத்து, மரகதம், மாணிக்கம் என்று கொள்ளையடித்த பொருட்களுடன் டெல்லி வந்த மாலிக் கபூருக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.பரிசாகக் கொண்டுவந்த பொருட்களை அனைவரும் காணும்படியாக பொது தர்பார் நடத்தினார் சுல்தான் அலாவுதீன். இதற்குப் பிறகு, 'மாலிக் நைப்’ என்ற புதிய பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டு, மன்னரின் பிரிக்க முடியாத துணையாக மாறினான் மாலிக் கபூர். 1316-ல் அலாவுதீன் கில்ஜியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு படுக்கையில் வீழ்ந்தார்.

இந்த நிலையில், அவர் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார். மாலிக் கபூர், ஆட்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டான். கில்ஜி வாரிசுகளின் கண்களைக் குருடாக்கிவிட்டு மீதம் இருந்த சிறுவனை கைப்பொம்மை போல அரியணையில் அமர்த்தி, தானே டெல்லியை ஆளத் தொடங்கினார்.

அடிமையாக, ஒரு வேளை உணவுக்குக்கூட அடுத்தவரை நம்பி இருந்த மாலிக் கபூருக்கு, அதிகார போதை மட்டுமே ஆறுதல் தருவதாக இருந்தது. எதிர்ப்பவர்களை எல்லாம் கொடூரமாகக் கொன்று குவித்த மாலிக் கபூர், டெல்லியைத் தனது கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொண்டார். ஆனால், கில்ஜியின் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து, மாலிக் கபூர் உயிரோடு இருக்கும் வரை தங்களால் நிம்மதியாக வாழ முடியாது என்று, அவனது பாதுகாவலர்களைக்கொண்டே அவனை மடக்கினர்.டெல்லியில் தனி அரண்மனையில் படுக்கையில் இருந்த மாலிக் கபூரை, நள்ளிரவில் சுற்றி வளைத்த கில்ஜியின் விசுவாசிகள், கை வேறு கால் வேறாக வெட்டித் தலையை தனியே எடுத்தனர். டெல்லி கோட்டையின் ஒவ்வொரு வாசலிலும் ஒவ்வொரு உறுப்புகளைத் தொங்கவிட்டு பழிதீர்த்துக்கொண்டனர்.எதிர்ப்பே இல்லாமல் பெரும் படை நடத்திச் சென்று, இந்தியாவை நடுங்கச் செய்த மாலிக் கபூர், அடையாளமே இல்லாமல் அழித்து ஒழிக்கப்பட்டான்....

You Might Also Like

2 comments

  1. அருமையான பதிவு. நன்றி. வாழ்த்துகள்.
    மின்னஞ்சலுக்காக Feed Burner என ஒரு இணைப்பு இருக்கும். அதையும் உங்கள் பதிவில் இணைத்துக் கொள்ளுங்கள். நண்பர்கள் அவரவரது மின்னஞ்சல் முகவரியை பதிந்தால் நீங்கள் பதிவு எழுதும் போது அவர்களுக்கு பதிவு போய்விடும்.
    எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Thamilselvan Subramaniam

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா, உங்களது கருத்து என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது. Feed Burner வசதியையும் இப்பொழுது இணைத்துள்ளேன்.... நன்றி
      - தமிழ்ச்செல்வன்

      Delete

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook