துருவே

12/18/2013 09:15:00 PM

நினைவிருக்கிறதா..? 
1984-டிசம்பர் 3-ம் தேதி...!!!

போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் க்ளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார்.

அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல் அறைக்கு ஓடினார். எப்படியாவது லக்னோ டு மும்பை ரயிலைத் தடுத்துவிடுவதுதான் அவரது நோக்கம். ஆனால், அந்த ரயில் ஏற்கெனவே கிளம்பிவிட்டது. துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. லக்னோ-மும்பை ரயில் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள். ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம் இறந்தார்கள்.

கொஞ்ச நேரத்தில் போபால் ரயில் நிலையத்தில் 191 பிணங்கள்கிடந்தன. அந்தக் காட்சி துருவேயை நிலைகுலையவைத்தது. பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு அவருக்குக் கீழ் பணிபுரியும் சிக்னல் மேன் வாயில் ரத்தம் வழிய செத்துக்கிடந்தார். அவரை ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு, 'எந்த ரயிலும் போபால் வழியே வந்துவிட வேண்டாம்' என்று தகவல் அனுப்பத் தொடங்கினார். அதையும் மீறி வரும் ரயில்கள் ஜன்னலை மூடிக்கொண்டு போபால் ஸ்டேஷனில் நிற்காமல் வேகமாகப் போய்விடுமாறு அறிவுறுத்தினார்.

மூக்கிலும் வாயிலும் வழிந்த ரத்தத்தைத் துடைத்துக்கொண்டு, இரவு முழுவதும் விழித்திருந்து வேலை பார்த்தார். அந்த இரவு விடிந்தது. அடுத்த நாள் சிக்னல் அறையைத் திறந்தபோது, ஸ்டேஷன் மாஸ்டர் துருவே வாயில் ரத்தம் வழிந்த நிலை யில் சிக்னல் அனுப்பும் கருவியை ஒரு கையால் பிடித்தபடி செத்துக்கிடந்தார்.

துருவே மட்டும் இல்லை எனில், போபால் விஷ வாயுக் கசிவின் மரண எண்ணிக்கை இன்னும் சில ஆயிரங்கள் கூடியிருக்கும். ஆனால், போபால் நகரத்தில் விஷவாயு கசிந்த அந்த இரவில் மாநில முதல்வர் அர்ஜுன் சிங், நகரில் இருந்து 14 கி.மீ ஓடோடிச் சென்று தப்பித்தார்.

’துருவே’ போன்றவர்களின் தியாகம் ஏனோ அங்கீகரிக்கப்படுவதுமில்லை,ஞாபகம் இருப்பதும் இல்லை.


-ஆனந்த விகடன் இதழிலிருந்து....

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook