எல்லா நாடுகளின் கவனத்தையும் கவர்ந்த பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷங்கள்

7/11/2011 05:01:00 PM

பல நூற்றாண்டுகளாக பல கோவில்களில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதும், அவை தற்போது வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டு வருவதும், சில ஆண்டுகளாக எங்குமே கேள்விப்படாத செய்தி. ஆனால், அது நிஜமாகவே கேரள தலைநகரில் நடந்துள்ளது.உலக பிரசித்திப் பெற்ற திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில் இருந்து ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொக்கிஷங்கள் இருப்பது பக்தர்களுக்கு தெரிய வர, தற்போது இக்கோவில் மிகவும் பிரபலமடைந்து, இந்தியா மட்டுமல்லாமல் எல்லா நாடுகளிலும் அனைவரது கண்களும் இக்கோவிலை நோக்கியே உள்ளன.
இந்தியாவில், 108 வைணவ கோவில்களில் முக்கியமான கோவிலாக திகழ்ந்து வருவது, கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவில். இக்கோவில் குறித்து பழைய புராணங்களான வராக புராணம், பிரம்ம புராணம், பிரமாண்ட புராணம், பத்ம புராணம், மத்சய புராணம் போன்றவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இருப்பினும் சரித்திரச் சான்றுகள் என, கி.பி., 1375க்கு, பிறகு தான் உள்ளது. ஐதீகங்களின்படி, கோவிலில் உள்ள அனந்தசயனத்தில் காட்சி அளிக்கும் பத்மநாப சுவாமி மூலவரை, திவாகரமுனி என்பவர் பிரதிஷ்டை செய்ததாக ஒரு தகவலும், வில்வமங்கல சுவாமி தான் மூலவரை பிரதிஷ்டை செய்ததாக மற்றொரு தகவலும் தெரிவிக்கிறது.
இது தவிர, 10ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் தான் இக்கோவிலை எழுப்பியதாக தகவல்கள் உள்ளன. இக்கோவில்கள் குறித்து பல்வேறு தகவல்கள், "மதிலகம் ஆவணங்கள்' என்ற பதிவேடுகளில் தான் நிறைய உள்ளன. இதில், கோவில் நிர்வாகம், உற்சவங்கள், சட்டத் திட்டங்கள், உரிமை கோரும் விவாதங்கள், சடங்குகள், ஆராட்டு, பள்ளி வேட்டை, கொள்ளை, கோவிலுக்கு கிடைக்கப் பெற்ற பரிசுகள் என, பல தகவல்களும் அடங்கியுள்ளன.


கோவிலுக்கு மிக அதிகளவில் கிடைத்த பொக்கிஷங்கள், வெளியில் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கான மடங்கள் ஆகியவை, 15ம் நூற்றாண்டுக்கு முன்னரே இருந்ததாக சான்றுகள் தெரிவிக்கின்றன.மேலும், கி.பி., 1459ம் ஆண்டில் கோவிலில் இருந்த ரகசிய அறையை திறந்து, சுவாமிக்கு அணிவிக்க வேண்டிய தங்க நகைகள் எடுக்கப்பட்டதாகவும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. தவறு செய்தவர்களிடம் இருந்து அபராதமாகவும், வெளியே இருந்து சுவாமிக்கு தானமாக கிடைக்கப் பெற்ற அதிகளவு தங்க நகைகள், யானைகள் என பலவும் அக்காலம் தொட்டே கிடைக்கத் துவங்கியுள்ளது எனவும் சான்றுகள் மூலம் தெரிய வந்துள்ளது.


இக்கோவிலில் இருந்து கொள்ளை போன பல பொருட்கள் மீண்டும் கிடைத்துள்ளன. இக்கோவிலின் சொத்துகளை, பிள்ளைமார் என அழைக்கப்பட்ட ஒரு பிரிவினர் தான் நிர்வகித்து வந்துள்ளனர். கோவில் நிர்வாகத்தை, சபா என்ற அமைப்பு கவனித்து வந்தது. இதில் இவ்விரு பிரிவினரும், கோவிலுக்கு உரிமையாளரான மன்னரும் தனித்தனியே பிரிந்து கலகத்தில் ஈடுபட்டனர்.இவ்வரிய வாய்ப்பை அங்கு வியாபாரத்திற்காக வந்திறங்கிய ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.
அப்போது, கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு டச்சுக்காரர்கள் ஆட்சி செய்து வந்தனர். இந்நிலையில் தான் அதிவீரனும், சிறந்த புத்திசாலியுமான மார்த்தாண்ட வர்மா, 1729ம் ஆண்டு திருவிதாங்கூர் பகுதியில் ஆட்சி பொறுப்பேற்றார்.


எதிரிகளை வீழ்த்தி, கோவில் நிர்வாகத்தில் இருந்து வந்த கலகங்களை அடக்கி ஒடுக்கினார். இதையடுத்து, போரிட வந்த டச்சுக்காரர்களை குளச்சல் போர் மூலம் மார்த்தாண்ட வர்மா விரட்டினார். வேனாடு என்ற சிறிய பகுதியை கொச்சி வரை விரிவாக்கவும் செய்து, திருவிதாங்கூர் என்ற பெரிய நாட்டை உருவாக்கினார். தான் போர் மூலம் மீட்டெடுத்த பகுதிகளை, பத்மநாப சுவாமிக்கு அர்ப்பணம் செய்தார்.


அந்நிகழ்ச்சி, "திருப்படி தானம்' என்ற சடங்கு, அன்று முதல் கோவிலில் துவங்கியது. 1880 - 1885ம் ஆண்டுகளில் திருவிதாங்கூர் பகுதியில் கடும் பஞ்சம் தலைதூக்கியபோது, மன்னராக இருந்த விசாகம் திருநாள் மகாராஜா, கோவிலில் இருந்து சில பொருட்களை எடுத்து விற்றுவிட்டதாக பலர் கூறி வந்தாலும், அது குறித்த எந்தவொரு ஆதாரமும் இல்லை. இக்கோவிலில் பூமிக்கடியில் உள்ள ஆறு அறைகளில் தான் தற்போது கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.


அதில், நான்கு அறைகளில் சுவாமிக்கு பயன்படுத்தப்படும் தங்கம், வெள்ளி பொருட்கள் இருப்பது, பலரும் ஏற்கனவே அறிந்த விஷயமாக உள்ளது. ஆனால், 150 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் இரு அறைகளில் என்னென்ன பொருட்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பது தெரியாமல் உள்ளது. அதிலும் ஒரு அறையை திறந்து விட்டனர். இன்னும் இருப்பது ஒரே ஒரு அறை தான்.அவ்வறையில் இருந்து சற்று தொலைவில் உள்ள அரபிக்கடல் பகுதிக்குச் செல்வதற்கான பாதை இருப்பதாக சிலரும், அவ்வறையை திறந்தால் நாட்டில் பல்வேறு ஆபத்துகள் ஏற்படும் என சிலரும் கூறி வருகின்றனர். இதில், எது உண்மை என்பது அவ்வறையை திறந்தால் தெரிந்து விடும்.


பல மாநில பட்ஜெட்டை விட அதிக சொத்து:கோவிலில் பூமிக்கடியில் ஆறு அறைகளில் சுவாமிக்கு கிடைத்த தங்கம், வெள்ளி, வைரம், மரகத நகைகள் உட்பட தங்கம், வெள்ளி கட்டிகள், தங்கத்தால் ஆன கிருஷ்ண விக்ரகம், நெல் மணிகளைப் போன்று தங்கத்தால் ஆன மணிகள் குவியலாக பாதுகாக்கப்பட்டுள்ளன.விலை மதிக்க முடியாத பல பொருட்களும், தேக்கு மரத்தினாலான பெட்டிகளில் வைக்கப்பட்டு, பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.


திருவிதாங்கூர் மன்னர், சுவாமி தரிசனம் செய்ய ஒவ்வொரு முறை வரும் போதும், தங்க நாணயத்தை மூலவருக்கு காணிக்கையாகச் செலுத்துவது வழக்கம். அவ்வாறு சேகரிக்கப்பட்ட நிறைய தங்க நாணயக் குவியல் அறைகளில் காணப்படுகின்றன.


இங்கு பாதுகாக்கப்படும் பல வைரம் மற்றும் கற்கள் விலை மதிக்க முடியாதவை. இங்குள்ள சில பொருட்கள் உலகச் சந்தையில் மிகவும் அரிய வகையாகக் கருதப்படுபவை.


திருவிதாங்கூர் மன்னர் தனக்கு கிடைத்த பொக்கிஷங்களையும், சொத்துகளையும் பத்மநாப சுவாமிக்கு அர்ப்பணித்து விட்டு, தன்னை பத்மநாப தாசன் என்று அறிவித்து அதன்படியே நடந்து வந்தார்.


இங்குள்ள சொத்துகளின் விலையாகக் கருதப்படும் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் என்பது, நாட்டில் மூன்று மாநிலங்களின் பட்ஜெட் தொகையை விட அதிகம். டில்லி - 27 ஆயிரம் கோடி ரூபாய், உத்தரகண்ட் - 7,800 கோடி ரூபாய், ஜார்க்கண்ட் - 33 ஆயிரம் கோடி ரூபாய்.


கோவில் சொத்து மதிப்பு, மத்திய அரசு, நாடு முழுவதும் கல்விக்காக இரண்டரை ஆண்டுகளில் செலவிடும் தொகைக்கு சமம்.


இங்குள்ள மூலவர் உருவாக்க பயன்படுத்தப்பட்ட 12 ஆயிரம் சாளக்கிராம கற்கள் போக, மீதமுள்ள 12 ஆயிரம் கற்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவை நேபாள நாட்டில் காந்தகி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டு, நேபாள மன்னரால் திருவிதாங்கூர் மன்னருக்கு வழங்கப்பட்டவை.


நாட்டில் இதுவரை பணக்கார சுவாமி என கருதப்பட்டு வந்த திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் சொத்துகளை (ரூ.42 ஆயிரம் கோடி) விட இக்கோவிலில் அதிக சொத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள் ளது.


கோவில் பாதாள அறைகளுக்கு செல்லும் வழியின் மறுபுறம், பத்மநாப சுவாமியின் தலைப்பகுதியில் முடிவடைவதாகவும் பக்தர்கள் கருதுகின்றனர்.


உலகில் அதிக சொத்துள்ள கோவிலாக தற்போது மாறிவிட்ட இக்கோவிலுக்கு, வருங்காலங்களில் ஆபத்துகள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதில், தீ விபத்து முதல், பயங்கரவாத தாக்குதல் வரை பல வழிகளிலும் ஆபத்து வர வாய்ப்புள்ளதாக பக்தர்களிடம் அச்சமும் எழுந்துள்ளது. கோவிலுக்கு அருகே, கடல் மற்றும் விமான நிலையம் இருப்பது குறிப்பிடத்தக்கது.


பாதாள அறைகள் ஒவ்வொன்றின் நுழைவுப் பகுதியும் பெரிய பாறாங்கற்களால் அடைக்கப்பட்டிருந்தன. அவற்றை பலசாலிகளான எட்டு பேர் கொண்ட குழுவினர் தான் மிகவும் சிரமப்பட்டு அகற்றினர்.


பாதாள அறைக்குள் முதலில் தொழிலாளிகளை அனுப்பி, அங்கு விஷ ஜந்துக்கள் ஏதுமில்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே, சுப்ரீம் கோர்ட் நியமித்த ஏழு பேர் கொண்ட உறுப்பினர்கள் குழு, அறைக்குள் நுழைந்தது.


பாதாள அறையில் காணப்பட்ட பாம்பு உருவம் அபாயத்தை குறிப்பிடுவதாக பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால், அப்பாம்பு உருவத்தின் பின்பகுதியில் ஏதாவது ரகசிய அறை இருக்கிறதா என்பது கண்டறியப்படவில்லை.


பாதாள அறைகளில், சுவாமிக்கு தினமும் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பல பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவ்வறையை தினமும் பிற்பகல் உச்சிக்கால பூஜைக்கு பின் திறந்து, மாலை 4 மணிக்கு முன்பாக மூடி விடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதாவது உச்சிக்கால பூஜை முடிந்து மாலை பூஜை துவங்குவதற்கு முன், இடைப்பட்ட காலத்தில் அறையை திறந்து மூடுவது ஆசாரம்.


புதிய கட்டடங்கள் கட்ட தடை:பத்மநாபசுவாமி கோவிலைச் சுற்றிலும், புதிய கட்டடங்கள் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டட பணிகளை நிறுத்தும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.தற்போது அனுமதி பெற்று கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகள் குறித்து, அதிகாரிகள் அப்பகுதியில் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். அவற்றில் சந்தேகப்படும்படியான, கட்டடங்கள் யாராவது கட்டி வருகின்றனரா என்றும் ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடிந்த பிறகே, தற்போது கட்டப்பட்டு வரும் வீடு உட்பட கட்டடப் பணிகள் மேலும் தொடர்வதற்கு அனுமதி அளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.


மேலும், அப்பகுதியில் இரண்டு மாடிகளுக்கு மேல் கட்டடம் கட்ட அனுமதி வழங்கப்படாது. அத்துடன் பாரம்பரிய பெருமையை பாதிக்கும் வகையிலான மிகப் பெரிய கட்டடங்கள் கட்டுவதற்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் மாநில அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், கோவிலுக்கு மிக அருகே ஒரு கட்டடத்தில், பூமிக்கடியில் அறை அமைக்க மாநகராட்சி அனுமதி அளித்துள்ளதும், வேறொரு கட்டடத்திற்கு மேல் மூன்றாவது தளம் அமைக்க அனுமதி வழங்கியிருப்பதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். அதனால், இனிமேல் கட்டட அனுமதி கோரி மாநகராட்சிக்கு வரும் புதிய விண்ணப்பங்கள் அனைத்தும், கடும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-அ.சாந்தப்பன்-
Courtesy Dinamalar
Thanks
Thamilselvan Subramaniam

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook