முற்பகல் செய்யின்...

3/14/2013 12:13:00 PM

வாழ்க்கை அத்தனை சுயநலம் மிகுந்ததா? தன்னை ஈன்ற பெற்றோரைக் கூட முதுமையில் சோறு போட மறத்து / மறந்து விடும் சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இத்தனை சுயநலங்களையும் தாண்டி, எங்காவது யாராவது ஒருவர் சகமனிதனுக்கு தன்னலம் ஏதும் பாராமல் உதவ முன்வரும்போது உள்ளபடியே மனசு நெகிழவே செய்கின்றது.

அப்படி உதவ முன்வருவோருக்கு, அவர் போலவே உதவ இயலாத, மனமில்லாத சமூகம் தனது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்பதுகூட இல்லை. அவர்களின் சேவையை, தியாகத்தைக் மலினப்படுத்தி நோகடிக்காமல் இருந்தாலே போதும். ஒட்டுமொத்தமாய் அவர்களை ”பொழைக்கத் தெரியாதவன்” என முத்திரை குத்தியோ, ”இப்படியெல்லாம் செய்றாங்னா எதாச்சும் காரணம் இருக்கும்” என குறை காணவோ செய்கிறது.

எப்போதும் எனக்கு ஒரு ஆழ்ந்த நம்பிக்கையுண்டு. எவரொருவர் தன்னலம் பாராது சேவையாற்றுகிறாரோ, அவருக்கான பலன், அவர் எதிர்பார்த்தாலும் எதிர்பார்க்காவிட்டாலும் சரியான நேரத்திலோ, காலம் தாழ்த்தியோ எப்படியேனும் வந்தடைந்தே விடுகின்றது என்பது. ஒருபோதும் அவர்களின் வாழ்க்கையில் நிம்மதி தொலைந்து போய்விடுவதில்லை. எப்போதும் தங்களைக் குறித்து மனதில் ஒரு திருப்தி இருந்து கொண்டேயிருக்கின்றது.

மூன்று வருடங்களுக்கு முன்பு நண்பர் ஆரூரன், ஈரோட்டில் இருக்கும் ஒரு மெஸ்ஸில் உடல் ஊனமுற்றோருக்கு சலுகை விலையில் உணவளிப்பதாகவும், அரசு மருத்துவமனையில் ஏழ்மையாய் இருக்கும் 20 நோயாளிகளுக்கு 1 ரூபாய் பெற்றுக்கொண்டு மதிய உணவு அளிப்பதாகவும் சொன்னார். அதன்பின் சில நாட்கள் அந்த மெஸ்ஸிற்கு சாப்பிடச் சென்றேன். அவர்களின் சேவையில் ஒரு நேர்மைத்திறன் இருப்பதை உணர்ந்தேன். மதியம் உணவு வழங்குகையில் சில படங்களை எடுத்துவந்து அதுகுறித்து ஒரு வேளை சாப்பாடு ஒரு ரூபாய் கட்டுரையை என்னுடைய வலைப்பக்கத்தில் எழுதினேன்.

அந்தக் கட்டுரை இணையத்தில் பல்லாயிரக்கணக்கில் வாசிக்கப்பட்டது. புதியதலைமுறை இதழ் அதையொட்டி ஒரு கட்டுரை எழுதியது. புதியதலைமுறை தொலைக்காட்சி தனது ”பதிவு” நிகழ்ச்சியில் மெஸ் உரிமையாளர் திரு. வெங்கட்ராமனை படம் பிடித்து ஒளிபரப்பி கௌரவப்படுத்தியது.

இந்தச் சூழலில் திரு. வெங்கட்ராமன் தனது மகளுக்கு பொறியியில் சேர்க்கை முயன்றுகொண்டிருந்திருக்கின்றார். சுயநிதிக்கல்லூரியில் மிகுந்த செலவு செய்துதான் சேர்க்கை எனும் சூழல். சேர்க்கை தொடர்பாக தமது மகளோடு சென்னை சென்றிருந்த தினத்தில் ராமகிருஷ்ண மடத்திலிருந்து வெங்கட்ராமனுக்கு அழைப்பு வருகின்றது. இவரின் சேவையைப் பாராட்டிய மடத்தினர், யதேச்சையாக இவரின் குடும்பம் குறித்தும் விசாரிக்கின்றனர். குடும்பம் குறித்துப் பேசுகையில் மகளின் பொறியியல் கல்வி தொடர்பாக சென்னை வந்திருப்பதாகச் சொல்கிறார். மடத்தினர் தங்கள் இடத்திற்கு வரச்சொல்கின்றனர். எல்லா விபரங்களையும் முழுவதுமாக விசாரிக்கின்றனர். மடத்தின் சார்பில் SRM பொறியியல் கல்லூரியில் சேர்க்கைக்கு பரிந்துரைக்கின்றனர். இலவச சேர்க்கை அனுமதி கிடைக்கின்றது.

முதலாம் ஆண்டு கல்விக்கட்டணத்தை சிரமப்பட்டு கட்டுகின்றனர். சிரமங்களை அறிந்த SRM நிர்வாகம் இரண்டாம் ஆண்டிலிருந்து ஆண்டுக் கட்டணம், விடுதிக் கட்டணம் ஆகியவற்றிற்கும் விலக்கு அளிக்கின்றது.

மாதங்கள் நகர்கின்றன. TIMES NOW தொலைக்காட்சி வெங்கட்ராமன் அவர்களை அடையாளம் கண்டு, செய்தி வெளியிடுகிறது. அத்தோடு 2013 ஜனவரியில் நடந்த Amazing Indians விருது வழங்கும் நிகழ்ச்சியில் 14 பிரிவுகளில் விருதுகள் வழங்குகிறது. அதில் Ordinary Indians, Extraordinary stories எனும் பிரிவில் திரு. வெங்கட்ராமன் அவர்களைத் தேர்ந்தெடுத்து தம்பதிகளாக டெல்லிக்கு அழைத்து விருது கொடுத்து கௌரவித்துள்ளது.

விழாவில் குடியரசு துணைத் தலைவர், மத்திய மந்திரிகள், முன்னால் துணைப்பிரதமர் ஆகியோர் முன்னிலையில் விருது வழங்கும் நிகழ்வை நடத்துகிறது. வெங்கட்ராமன் முன்னாள் துணைப்பிரதமர் அத்வானி கையால் விருது பெறுகிறார். விருது பெற்ற மேடையில் தனக்குத் தெரிந்த தாய்மொழி தமிழிலேயே நன்றியுரையும் ஆற்றுகிறார்.

மகளுக்கான கல்லூரி சேர்க்கை கிடைத்தபோதும், TIMES NOW விருது வாங்கிய பிறகும் நேரில் வந்து நெகிழ்ந்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்தார். ஏதோ சேவை செய்துகொண்டிருந்த தன்னை, ஒரு கட்டுரை பலவகைகளில் வெளிச்சமிட்டதாக நெகிழ்ந்துபோவார். அவரிடம் ஒன்றே ஒன்றுதான் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேயிருக்கின்றேன், ”20 நிமிடங்கள் செலவு செய்து எழுதும் வெறும் கட்டுரை மட்டுமே ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்துவிடுமா எனத் தெரியவில்லை. ஆனால் தினமும் 20 பேரின் பசியை போக்கிக்கொண்டிருந்த புண்ணியம்தான், பசியாறியவர்களின் வாழ்த்துதான் உங்களை இந்த நிலைமைக்கு உயர்த்தியுள்ளது”.

இன்றும் தினமும் 20 - 40 பேர் வரை மதிய உணவினை 1 ரூபாய்க்கு தொடர்ந்து வழங்கிக்கொண்டிருக்கிறார்.

தொடர்புகளுக்கு :
திரு. வெங்கட்ராமன், AMV மெஸ், பவர்ஹவுஸ் ரோடு, நல்லசாமி மருத்துவமனை எதிரில், ஈரோடு-1. செல்: 96290-94020 email: 1rsmeals.amv@gmail.com

முற்பகல் செய்யின், பிற்பகல் விளைவது உண்மைதான்.

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook