ஒரு ஏக்கரில் ரூ.3,50,000 லாபம்… ரெட்லேடி பப்பாளி

8/24/2013 02:42:00 PM

கரும்பு, மஞ்சள், வாழை… என ஒரே மாதிரியான பயிர்களை சாகுபடி செய்து கட்டுப்படியான விலை கிடைக்காமல், அவதிப்படுவதை விடுத்து… சத்தான சந்தை வாய்ப்புள்ள புதிய பயிர்களைப் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருப்பது, தொடர்கிறது. அந்த வகையில், பப்பாளி சாகுபடியில் இறங்கி, லட்சங்களில் வருமனாத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார், கோயம்புத்தூர், ‘சின்னக்குயிலி’ கிரமத்தைச் சோந்த முன்னோடி விவசாயி, பாலதண்டாயுதபாணி.

தினமும் வருமானம்!

எனக்கு 15 ஏக்கர் நிலமிருக்கு. ஆயிரம் அடிக்கு பேர்வெல் போட்டு தண்ணீர் எடுத்துத்தான் பாசனம் செய்கிறேன். விவசாயம் கட்டுபடியாகுறதில்லை என்பது உண்மைதான். ஆனால், கொஞ்சம் மாற்றி யோசித்து செய்தால், கண்டிப்பாக நல்ல லாபம் பார்க்க முடியும். இந்தப் பக்கம் எல்லாரும் ராகி, சோளம் ,கம்பு என்று விளைவிக்கும் போது.. நான் பருத்தியை விதைத்தேன். அதன் பிறகு, எல்லாரும் பருத்திக்கு மாறினாங்க. அது கொஞ்சம் சுணங்கிய நேரத்தில் திராட்சை சாகுபடியில் இறங்கினேன். அதன்பிறகு அதே பந்தலில், பாகல், புடலை, பீர்கன் என்று சாகுபடி செய்தேன். அடுத்து வாழை விவசாயத்திற்கு மாறினேன். ஒப்பந்த அடிப்படையில் பால் பப்பாளி சாகுபடி செய்தேன்.

எல்லாவற்றையும் விட்டுவிட்டு, இப்போது மூன்று வருடமாக பழத்துக்காக பப்பாளி சாகுபடி செய்கிறேன். இதில் தினமும் வருமானம் கிடைக்கிறதே என்றார்.

ஏழு அடி இடைவெளி!

ரெட் லேடி ரகத்தின் வயது 22 மாதங்கள். ஆடி, ஆவணி மாதங்கள் நடவுக்கு உகந்தவை. இது, நல்ல சிவப்பு நிறமும், சுவையும் கொண்ட ரகம். ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்து 60 டன் முதல் 80 டன் வரை மகசூல் கிடைக்கும். சாகுபடிக்காகத் தேர்வு செய்த நிலத்தை இரு முறை கோடை உழவு செய்து, மண்ணைப் பொலபொலப்பாக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு ஏக்கர் நிலத்திற்கு 10 டன் தொழுவுரம் என்ற கணக்கில் கொட்டி இறைத்து, நிலத்தை சமன் செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு 900 நாற்றுக்கள் தேவைப்படும். தரமான நாற்றுகளை நர்சரிகளில் வாங்கிக் கொள்ளலாம். ஒரு நாற்று 13 ரூபாய் விலையில் கிடைக்கிறது. 7 அடிக்கு 7 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்கு குழியெடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு குழியிலும், ஒரு கிலோ நுண்ணுயிர் உரக்கலவையை இட்டு நிரப்பி, நாற்றுகளை நட்டு மண் அணைத்து தேவையான அளவு வட்டப்பாத்திகள் அமைத்து, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நேரடிப் பாசனத்தைவிட, சொட்டுநீர்ப் பாசனம் சிறந்தது.

எட்டாம் மாதம் அறுவடை!

நடவு செய்த 20-ம் நாளில் களை எடுத்து, தழை, மணி, சாம்பல் சத்துக்கள் அடங்கிய 150 கிலோ உரத்தை (ஒரு ஏக்கருக்கு ) கொடுக்க வேண்டும். 7-ம் மாதம் வரை பெரிதாக பராமரிப்புத் தேவையில்லை. 8-ம் மாதம் காய் அறுவடைக்கு வந்துவிடும். தொடர்ந்து 14 மாதங்கள் மகசூல் கொடுக்கும்.
இந்தக் காலத்தில் மாதம் தோறும் ஏக்கருக்கு 150 கிலோ அளவுக்கு பயோ மற்றும் ஆர்கானிக் கலப்பு உரங்களைக் கொடுக்க வேண்டும். வளா்ந்த செடிகளில் இருந்து பழுத்த இலைகள் விழுந்து கொண்டே இருக்கும். மரங்களின் அடியில் விழும் இலைகள் மட்கி, அந்த மரத்துக்கே உரமாகி விடும்.

பூச்சிகள்.. கவனம்!

பப்பாளியை அதிகம் தாக்கி சேதப்படுத்துவது மாவுப்பூச்சிகள்தான். ஒட்டுண்ணிகளை விடுவதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
இலைச்சுருட்டுப் புழு, வெள்ளை ஈக்கள் ஆகியவற்றின் தாக்குதலும் பழ அழுகல் நோயும் அதிகமாக வரும். இவற்றைக் கட்டுப்படுத்த, 15 மில்லி பயோ – ஆன்டி வைரஸ் பூச்சிவிரட்டியை 10 லிட்டர் நீரில் கலந்து செடிகளின் மீது தெளிக்க வேண்டும். நோய் தாக்கும் போது, மட்டும் தெளித்தால் போதுமானது. தலா 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கை, செடிக்குச் செடி தூரில் வைத்தால், வேர் சம்பந்தமான நோய்கள் அண்டாது.
மழைநீர் தேங்கி நிற்காதபடி, வடிகால் வசதி செய்து கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறை ஒரு செடிக்கு 100 லிட்டர் நீர் கிடைக்குமாறு பாசனம் செய்ய வேண்டும். மரத்தில் உள்ள காய்களின் முகம் பழுக்கும் தருணத்தில், பறிக்கத் தொடங்க வேண்டும்.

விற்பனைக்கு பிரச்னை இல்லை!

திருப்பூர், கோயம்புத்தூர் பக்கம் இருந்து வியாபாரிகள் தோட்டத்திற்கே வந்து, பறித்து வைத்திருக்கும் பழங்களை எடை போட்டு வாங்கி கொண்டு போய்விடுவார்கள்.

இன்றைக்குத் தேதிக்கு கிலோ 7 ரூபாய் விலைக்கு போகிறது. சராசரியாக வருடத்திற்கு மூன்றரை லட்ச ரூபாய்க்குக் குறையாமல் லாபம் கிடைத்துவிடும். மகசூல் முடிந்ததும், மரங்களை வெட்டி. ரோட்டா வேட்டர் வைத்து உழுது, நிலத்திற்கே உரமாக்கலாம். ரெட் லேடி பப்பாளிப் பழத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், விற்பனைக்குப் பிரச்னையே இல்லை.
பப்பாளிப் பழம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். மலச்சிக்கலை சரி செய்வதற்கும், பெண்களுடைய மாதவிடாய் பிரச்னைக்கும், இது நல்ல பலன் கொடுக்கும். நான் பப்பாளி உற்பத்தியாளர் சங்கத்தை ஆரம்பித்திருக்கிறேன். பப்பாளிக்கு அரசாங்கம் தனி வாரியம் அமைக்க வேண்டும். நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ள ரகங்களை வேளாண் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் உருவாக்கித் தர வேண்டும் அரசு நாற்றுப் பண்ணைகளில் பப்பாளி நாற்றுகளை உற்பத்தி செய்து மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் நம் மூலமாக அரசுக்கு வைத்து, விடை கொடுத்தார்.

தொடர்புக்கு
பாலதண்டாயுதபாணி, செல்போன் : 98946 99975
ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 25.06.13

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook