மூளையைத் தூங்க விடாதீர்கள்!

11/24/2013 08:34:00 PM

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3. புதிதாகச் சிந்தித்தல்

இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி.

ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.

தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாரங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.

இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.

இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.

புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.

உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.

ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.


courtesy

Sasi Kumar Karpagavel

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook