தெரிந்து கொள்வோம் - பக்ரீத் பண்டிகை: ஏன்?

11/16/2010 06:57:00 PM

ஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத், உலக நாடுகள் முழுவதிலுமுள்ள இஸ்லாமியர்கள், இறை தூதர் இப்ராஹீம் அவர்களின் புனிதமும் அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்த வாழ்வை எண்ணி, தியாகத்தின் மேன்மையைப் போற்றும் நல்லதொரு நாள்.

நபி ஆதம் முதல் முகம்மது நபி அவர்கள் வரையிலும் தோன்றிய நபிமார்கள் பலரும் ஒவ்வொரு காலத்திலும் தோன்றி இறைத் தூதை அளித்து வந்தனர். இவர்களுள் ஒருவரே நபி இப்ராஹீம்.

தனது காலத்தில் நடந்த கொடுமையான நம்ரூதுவின் ஆட்சியிலும், எள்ளளவும் அச்சமின்றி இறைக் கொள்கையை முழங்கிய நபி இப்ராஹீம், அயல் நாடுகளுக்கும் பயணித்து அன்பின் மார்க்கத்தை எடுத்துரைத்தார்.

'இறைவனே எல்லாம்; அவனுக்கு இணையாக எதுவும் இல்லை' எனும் இறைப் பற்றோடு வாழ்ந்த அவருக்கு, இரண்டு மனைவிகள். ஆயினும், குழந்தை பேறு கிடையாது.

இதனால், மனம் வருந்திய நபி இப்ராஹீம், இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்த்தனை செய்தார். நபியின் நம்பிக்கை மிகுந்த பிரார்த்தனையை ஏற்றுக் கோண்டார் அல்லாஹ். அந்த அற்புதமான பொழுது புலர்ந்தது... இப்ராஹீமின் இரண்டாவது மனைவியான ஹாஜாரா அம்மையாருக்கு, நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் பிறந்தார்.

அதன்பின் வாழ்க்கைப் பயணம் இன்பமயகமாக தொடர்ந்தபோது, இறைவன் மீதுள்ள பற்றானது நாளுக்கு நாள் பெருகியவண்ணம் இருந்தது.

அப்போது, இறைவன் மேற்கொண்ட ஒவ்வொரு சோதனையையும் நிந்தனை செய்யாது வென்ற இப்ராஹீம் நபிக்கு, இறுதியாக மாபெரும் சோதனை வந்தது...

இரவு நேரம்... ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த இப்ராஹீமுக்கு கனவொன்று வந்தது. தன்னுடைய மகனை, தானே இறைவனுக்கு பலி கொடுப்பது போன்ற கனவைக் கண்ட நபி, ஆழ்ந்த துயரமுற்றார்.

தன்னை முழுவதுமாய் இறைவனுக்கு அர்பணித்த இப்ராஹீம் நபி, தாம் கண்ட கனவை அன்பு மகனிடம் கூறினார். தியாகத் திருவிளக்குக்குக்குப் பிறந்தது, தியாக தீபமே என நிரூபிக்கும்வண்ணம், இறைக் கட்டளையை உடனே நிறைவேற்றும்படி தன்னுடைய தந்தையிடம் பணித்தார், நபி இஸ்மாயீல்.

அவ்வாறு பணித்ததோடு மட்டுமின்றி, 'பெற்ற பாசத்தினால் எங்கே தந்தையின் மனம் மாறிவிடுமோ?' என அஞ்சிய பாச மகன், தந்தையின் கண்களைத் துணிகளால் கட்டி, கையிலே கட்டாரியையும் கொடுத்தார். தந்தையும் துணிந்தார்...

ஆனால், அந்த நரபலியைத் தடுத்து, அவர்களின் தியாகத்தைப் புகழ்ந்து, இந்த நிகழ்வின் நினைவாக ஓர் ஆட்டினை பலியிட்டு, அனைவரையும் புசிக்குமாறு கூறினான் இறைவன்!

குழந்தைச் செல்வங்கள் மலிந்திருப்போரும், தனது ஒரு குழந்தையை இழக்க சம்மதிக்காத இவ்வுலகில், ஒரே மகனையும் பலியிடத் துணிவதென்றால், நபி இப்ராஹீமின் தியாகத்தை போற்றாமல் இருப்பது முறையா?

இப்புனிதம் மிகுந்த தியாகத் பெருநாளில், இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவுகூர்ந்து, புத்தாடை அணிந்து, அதிலே நறுமணம் தடவி, பள்ளி சென்று இறைவனை இதயம் கனிந்து தொழுவோம்..!

அத்துடன், உற்ற நண்பர்களுடன் உறவாடி, உற்றார் உறவினர்களுடன் உளப் பூரிப்போடு நல்வழிகாட்டிய நபிமார்களின் வழியில் இறையருளுடனும், தியாகத்தின் உன்னதத்தை உணர்ந்தும் நல்வாழ்க்கை வாழ்வோம்!

நன்றி

பரக்கத்

http://rajagambeeran.blogspot.com 

 

Thanks
Thamilselvan Subramaniam

 

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook