சென்ட் நிலத்தில் 60 பயிர்கள்... பட்டையைக் கிளப்பும் பல பயிர் சாகுபடி!

2/13/2013 05:32:00 PM

வீட்டுத் தேவைக்குக் காய்கறிகள்.பூச்சிக்கு ஆமணக்கு.மூடாக்காகக் களைகள்.
புதிது புதிதானக் கருவிகள், புதிது புதிதான விவசாயத் தொழில்நுட்பங்கள், மறைந்து கிடக்கும் வேளாண் வித்தைகள் என்று பலவற்றையும் தேடிப் பிடித்துப் பயன்படுத்துவதில் பலருக்கும் ஆர்வம் இருக்கும். அப்படிப்பட்ட விவசாயிகளைத் தேடிப் பிடித்து வாசகர்களுக்குத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது, 'பசுமை விகடன்’.இத்தகைய விவசாயிகளின் அனுபவங்களை, உடனடியாகத் தங்கள் நிலத்திலும் சோதித்துப் பார்ப்பதில் நம் வாசகர்களுக்கு இணையில்லை. அவர்களில் ஒருவர்... ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகேயுள்ள சாலைப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி.
''பல பயிர் சாகுபடி பத்தி, 'பசுமை விகடன்'ல படிச்சதுமே ரொம்ப குஷியாகிட்டேன். உடனடியா அதைச் செயல்படுத்திட்டேன். இப்போ, பயிர் நல்லா வளந்து நிக்கறத பார்க்கறப்ப... ரொம்ப நம்பிக்கையா இருக்கு'' என்று மகிழ்ச்சிப் பெருக்கோடு பேசத் தொடங்கிய பழனிச்சாமி,
மூன்று குருமார்கள் !
''ரெண்டு ஏக்கர் நிலத்தில விவசாயம் செஞ்சுட்டு இருந்தேன். தண்ணீர்ப்பற்றாக்குறை, வேலை ஆட்கள் கிடைக்கறதுல சிரமம்னு ஏகப்பட்டத் தொல்லை. இதுக்காக தவிச்சுட்டிருந்த சமயத்துலதான் 'பசுமை விகடன்' படிக்க ஆரம்பிச்சேன். அது மூலமா, சுபாஷ் பாலேக்கரோட 'ஜீரோ பட்ஜெட்' வழிமுறைகளைத் தெரிஞ்சுகிட்டேன். அப்பறம், 'வானகம்’ பண்ணையில 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார்கிட்ட பயிற்சி எடுத்துக்கிட்டேன். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மூணு மாசம் வேளாண்மை சம்பந்தப்பட்ட படிப்பும் படிச்சுட்டு, முழுத் தெம்போட இயற்கை விவசாயத்தை ஆரம்பிச்சுட்டேன்.
நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர், மண்புழு மன்னாரு, மூணு பேரும்தான் எனக்கு குரு. நிலத்துல துளிகூட ரசாயனம் பயன்படுத்துறதில்ல. முழுக்க முழுக்க இயற்கை இடுபொருட்கள் மட்டும்தான். 60 சென்ட் நிலத்துல கத்தரி, தக்காளி, வெண்டை, அவரை, வெங்காயம், சுரைக்காய்னு நிறைய காய்கறிகளை விதைச்சிருக்கேன். நான் வெச்சிருந்த பாரம்பரிய ரக விதைகளைத்தான் நாத்துப் பாவி நட்டேன். எல்லா செடிகளும் சும்மா 'தளதள’னு வளர்ந்து நிக்குது'' என்று உற்சாகமாகச் சொன்னார்.
60 சென்டில் 60 பயிர்கள் !
தொடர்ந்து பேசியவர், சாகுபடி செய்யும் முறைகள் பற்றி விவரித்தார். ''சாகுபடியை ஆரம்பிக்கறதுக்கு முன்ன நிலத்துல ஆட்டுக்கிடை போட்டேன். அப்பறம் மண்ணைக் கொத்தி பொலபொலப்பாக்கி சதுரப்பாத்தி எடுத்துக்கிட்டேன். 30 சென்ட் நிலத்துல இரண்டடிக்கு ஒரு நாத்துனு தக்காளி, கத்தரி, மிளகாய் நாத்துகளை அடுத்தடுத்து நட்டிருக்கேன். மீதி 30 சென்ட் நிலத்துல மத்த பயிர்களையும் கலந்து நடவு செஞ்சுருக்கேன்.
ஓரமா இருந்த அஞ்சாறு வேப்பமரங்களைச் சுத்தி, பாகற்காய், பூசணி மாதிரியான கொடிவகைப் பயிர்களை நடவு செஞ்சி, கொடிகளை மரத்துல ஏத்தி விட்டிருக்கேன். பீர்க்கனை நடவு செஞ்சு அதுக்கு மட்டும் பந்தல் போட்டிருக்கேன். கோடையில வர்ற பீர்க்கன், குளிர்காலத்துல வர்ற பீர்க்கன்னு ரெண்டு ரகமுமே இங்க இருக்கு. அதே மாதிரி, குத்து அவரை, தம்பட்ட அவரைனு எல்லாமே இருக்கு.
ரெண்டு சென்ட் நிலத்துல வெண்டை இருக்கு. ஒவ்வொரு செடியும் மரம் கணக்கா பத்தடிக்கு வளர்ந்து நிக்குது. இதுபோக சிறுகீரை, சிவப்புக்கீரை, மிளகு தக்காளி, முருங்கை, அகத்தி, வெள்ளைப்பூண்டு, வெங்காயம், பூனைக்காலினு கிட்டத்தட்ட 60 சென்ட்ல 60 வகையானப் பயிர்கள் இருக்கு'' என்று சொல்லி நம்மை வாய் பிளக்க வைத்தவர், தொடர்ந்தார்.
''தோட்டத்தைச் சுத்தி 6 அடி இடைவெளியில் ஆமணக்குச் செடியை நட்டிருக்கேன். இது மூலமா சின்ன வருமானம் கிடைக்கறதோட... காய்கறிச் செடிகளை தாக்குற பூச்சிகளும் கட்டுப்படுது. இந்த விதைகளை இடிச்சு தண்ணியில கலந்து வயல்ல அங்கங்க வெச்சா... பூச்சியெல்லாம் அதுக்குள்ள விழுந்துடும். வயல்ல அங்கங்கப் பறவை தாங்கி வெச்சிட்டோம்னா... பூச்சிவிரட்டி தெளிக்க வேண்டிய அவசியமே இருக்காது.
தேவையான அளவு தண்ணி பாய்ச்சுறதோட, 15 நாளைக்கு ஒரு தடவை 200 லிட்டர் அமுதக்கரைசலைத் தோட்டம் முழுசும் தெளிக்கிறேன். பூச்சித் தாக்குதல் இருந்தா மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிப்பேன். களைகளை எல்லாம் பறிச்சு, அங்கயே மூடாக்கா போட்டுடறதால, மண்ணுல ஈரப்பதம் இருந்துக்கிட்டே இருக்குது. பெரிசா எந்தப் பராமரிப்பும் கிடையாது.
வீட்டுத் தேவைக்காகத்தான் காய்கறிகளை சாகுபடி செய்றேன். தேவைக்குப் போக மிஞ்சுறத உள்ளூர் கடையிலயே வித்துடுறேன்.
இப்போ, எங்களுக்குக் காய்கறிச் செலவே இல்லாமப் போயிடுச்சு. சத்தான, இயற்கை காய்கறிகளை சாப்பிடறோம்ங்கறதுதான் எல்லாத்தையும்விட முக்கியமான விஷயம்'' என்று சொல்லி, மகிழ்ச்சியோடு விடை கொடுத்தார், பழனிச்சாமி!
தொடர்புக்கு, பழனிச்சாமி,செல்போன்: 94438-39926.
- நா. சிபிச்சக்கரவர்த்தி படங்கள் ரா. அருண்பாண்டியன்நன்றி :- விகடன்

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook