இன்னொரு சுதந்திரப் போராட்டத்திற்கு மக்கள் தயாராக வேண்டும்!

2/20/2013 02:57:00 PM

-இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்

வேகவேகமாக விவசாய விளைநிலங்கள் பிளாட் போட்டு விற்கப்படுகின்றன, சரியான விலை நிர்ணயம் இல்லாமையால் பயிரிட முடியாமல் போய்விட்டது, மழை குறைவாலும், நதி நீர்களின் அணைத் தடுப்பாலும் விவசாயிகளின் வாழ்வாதாரம் படுமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் அடுத்தடுத்து தமிழகத்தில் தற்கொலைக்குத் துணியும் துயரச் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் ‘விவசாயிகள் வேறு வேலைகளுக்கு மாறிக்கொள்ள வேண்டும்’ என்று கூறியிருப்பது எல்லாத்தரப்பு மக்களையும் திகிலடைய வைத்திருக்கிறது.
வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங் களை இந்தியாவில் நேரடி முதலீட்டின் மூலம் வியாபாரம் செய்ய இந்திய அரசு கதவைத் திறந்து விட்டு இந்தக் கருத்தைக் கூறியிருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பாரம்பரியமாக விவசாய நாடான இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் ரசாயன உரம் போட்டு நிலத்தைக் கெடுத்ததல்லாமல் இப்போது விவசாயத்தையே தடுத்து நிறுத்தும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கெடுக்கும் இப்படிப்பட்ட அறிவிப்பைப் பற்றி இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரிடம் கேட்டோம் :
அவர்கள் விவசாயத்தை அழித்துவிடுவது என்று திட்டம் போட்டு வேலை செய்து கொண்டி ருக்கிறார்கள். சனநாயகம் என்ற போர்வையில் ஒரு முட்டாள்தனம் நடந்து கொண்டிருக்கிறது. எதையும் ஆட்சியிலிருப்பவர்கள் வெளிப்படையாகப் பேசுவதில்லை. ஆனால் அவர்கள் செய்கிற காரியம் அத்தனையும் விவசாயத்தை அழிக்கிறதாக இருக்கிறது.
முதலில் நிலத்தைப் பிடுங்கிக்கொள்கிறார்கள். ரியல் எஸ்டேட் என்கிறார்கள். தண்ணீரை விடாமல் அணை கட்டி நிறுத்தி வைத்துக்கொள் கிறார்கள். நிலத்தில் போர் போட்டு எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள். மின்சாரம் கொடுக்க மாட்டார்கள். நிலத்தில் வேலை செய்ய விடாமல் 100 நாள் வேலை வாய்ப்புத் தருவதாகச் சொல்லி குளத்தங்கரையை ரோட்டோரத்தில் சுரண்டச் சொல்கிறார்கள்.
நம்முடைய விதைகள் எல்லாம் காணாமல் போயின, பயிர்களெல்லாம் காணாமல் போய் விட்டது. ஒன்றுக்கும் உதவாத சொத்தை விதைகளைக் கொடுத்துப் பயிர் செய்யச் சொல் கிறார்கள். உழவுத் தொழில் செய்த மாடுகள் எல்லாம் கசாப்புக்கடைக்குப் போய்விட்டன. இதனுடைய இறுதிக் கட்டமாகத்தான் பிரதமர் சொல்லியிருக்கிறார், ‘வருவாய் அதிகரிக்க வேண்டும் என்றால் விவசாயிகள் நிலத்தைவிட்டு வெளியேறவேண்டும்’ என்று. இது ஒன்றுதான் பிரதமர் வெளிப்படையாகப் பேசிய விஷயம். முன்னே சொன்னதெல்லாம் இலைமறை காயாக நடந்துகொண்டே இருக்கிற விஷயங்கள். எனவே அவருடைய நோக்கம் மட்டும் நிறைவேறி விட்டால் பன்னாட்டு நிறுவனங்களிடம் பட்டிருக்கிற கடன் தீர்ந்துவிடும். அவருடைய நோக்கம் நிறைவேறிவிடும். இந்தியா மீண்டும் ஒரு அடிமை நாடாக மாறிவிடும். ஆக, இந்திய மக்கள் மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்துக்குத் தயாராகவேண்டும்.

சிக்குன் குனியா, டெங்கு போன்ற நோய்களுக்கு மருந்தில்லை என்கிறார்களே?

டெங்கு ஒரு பெரிய நோய் இல்லை. பப்பாளி இலைச் சாறைக் கொடுத்து குணப்படுத்தி விட்டார்கள். இங்கிலீஷ் ஆஸ்பத்திரிக்கு போகும் போது மட்டும்தான் நோயாளி செத்துப்போகிறான். பள்ளிக்கூடத்துக்குப் போகிறவன் முட்டாளாகி விடுகிறான், ஆஸ்பத்திரிக்குப் போகிறவன் நோயாளியாகிவிடுகிறான்.

தற்போது பாட்டிலில் அடைத்த குடிநீர் விநி யோகம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது, அதற்கு மக்கள் பழகிக் கொண்டிருக்கிறார்கள். இதன் பின்விளைவு எப்படி இருக்கும்?

மக்கள் இப்போது அறியாமையில் இருக்கி றார்கள். மழை கொடுக்கிறது, தண்ணீரை இயற்கை வழங்குகிறது. அது நிலப்பரப்பு முழுவதும் விழுந்து ஆறாக ஓடுகிறது. அந்தத் தண்ணீரை அசுத்தப்படுத்தக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. அதைக் கண்காணிப்பதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்று ஒரு துறையும் இருக்கிறது. அது தன் கடமையைச் செய்யவில்லை. அதைச் செய்யாதவர்களை இந்த அரசு தண்டிக்கவில்லை. அவர்கள் சட்ட ரீதியாகவும் நீதி, நியாயம் என்ற பேரிலேயும் அதற்கு எதிராக வேலை செய்கிறார்கள். அவர் களைக் கண்டிக்கக்கூடிய, தண்டிக்கக்கூடிய ஒரே உரிமை ஜனநாயகத்தில் நாட்டு மக்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. மக்கள் விழித்தெழ வேண்டும், அங்கங்கே முற்றுகைப் போராட்டம் நடத்தவேண்டும். எங்கே தண்ணீர் மாசுபடுகிறதோ அதைக் கண்டறிந்து ஒழிக்கவேண்டும். அப்போதுதான் எல்லாரும் குடிக்கும்படியான இயற்கைத் தண்ணீர் எல்லா இடத்திலேயும் கிடைக்கும்.


நேரடியாக முதலீட்டில் இறங்கியிருக்கும் வால் மார்ட்டால் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

இதற்கெல்லாம் முன்பு அமெரிக்காவினுடைய ஜனாதிபதி புஷ் வந்திருந்தார். அவரோடு ஆந்தி ராவில் உட்கார்ந்து இந்திய பிரதமரும் அவரும் ஓர் ஒப்பந்தம் போட்டிருந்தார்கள். அந்த ஒப்பந்தத் தின்படி வெளிநாட்டு பன்னாட்டுக் கம்பெனிகளும், உள்நாட்டு பன்னாட்டுக் கம்பெனிகளும் ஒன்றாகக் கைகோர்த்து இந்தியாவிலுள்ள எல்லா வியாபாரத்தையும் அவர்கள் கையில் எடுத்துக்கொள்வார்கள். அதெல்லாம் நம் கண்ணுக்கு முன்பு ஒன்றும் தெரியாது. முதலில் அதிக விலை கொடுத்து விவசாயிகளிடம் வாங்கி, அதைப் பதப்படுத்தி டப்பாக்களில், டின்களில் அடைத்துவைத்து, பின்பு அது மட்டுமே கிடைக் கிற மாதிரி செய்து விடுவார்கள். இது அவர்களின் திட்டம். அந்தத் திட்டம் இப்போது தெரிந்துபோய் விட்டது. வியாபாரம் அவர்கள் கைகளுக்குப் போய்விட்டதால் பெருத்த லாபம் அவர்களுக்கு. டப்பா, டின்களில் அடைத்த உணவுச் சாப்பிடு வதால் நோய்கள் நம் மக்களுக்கு.


இயற்கை முறை பயோ டீசல் தயாரிப்பு ஏன் கிடப்பில் போடப்பட்டுவிட்டது?

பயோ டீசல் தயார் செய்து சென்னையிலிருந்து பெங்களூருக்கு ரயில் ஓட்டியாகிவிட்டது. மோட்டார் சைக்கிள் ஓட்டிக் காட்டியாகி விட்டது. அதற்கு முன்னாடி ஜெர்மனியில் ஓட்டிக் காட்டியிருக்கிறார்கள், பிரேசிலில் ஓட்டிக் காட்டியிருக்கிறார்கள். இப்போதுகூட பெட்ரோலில் பயோ டீசலை 10 விழுக்காடு கலக்கலாம் என்று அரசாங்கமே சொல்லியிருக்கிறது. அது முடியாது என்பதில்லை. அதைச் செய்வதற்கு ‘அவர்கள்’ விரும்பவில்லை என்பது மட்டும் தெரிகிறது.


மக்களிடம் இயற்கை வேளாண் விவசாயம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறதா?

வேகமாக மக்களிடம் அந்தக் கருத்து வளர்ந்து வருகிறது. நிறையப் பேர் ஆர்வம் காட்டு கிறார்கள்.

இயற்கை விவசாய விளைபொருள் உண்போரை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

வாங்கிச் சாப்பிடுகிறவர்கள்தான் எதை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக் கிறார்கள். அதற்குச் சிறிய உதாரணம், நான் சின்னப் பையனாக இருந்தபோது பேனாவின் மௌத்தை கழற்றிவிட்டு அதில் இங்க் ஊற்றிவிட்டு மறுபடியும் செருகிவிட்டு மறுபடியும் எழுதலாம். அந்த மௌத் உள்ள பேனா எங்கேயாவது கிடைக் கிறதா? பயன்பாட்டில் இருக்கிறதா? நுகர்வோர் எழுதிவிட்டு தூக்கிப்போடுகிற பேனாவை கையில் எடுத்துவிட்டார்கள். அதுமாதிரி விவசா யத்திலேயும் நுகர்வோர் ‘இயற்கை விளைநிலத்தில் விளைந்ததை மட்டும்தான் சாப்பிடுவேன்’ என்று முடிவு எடுத்துவிட்டால் விற்பனையாளர்கள் மாறித்தான் ஆகவேண்டும்; வேறுவழி கிடையாது.

இயற்கை வேளாண் விவசாயத்தில் புதிய உத்திகள் வந்திருக்கின்றனவா?

1911ல் இரண்டு விவசாயிகள் தமிழ்நாட்டில் ஆராய்ச்சி செய்து சொல்லியிருக்கிறார்கள். ‘பிழைக்கும் வழி’ என்கிற பத்திரிகையில் அது அச்சாகியிருக்கிறது. ஒற்றை ஒற்றை நாற்றாக நடவேண்டும், இளம் நாற்றாக நடவேண்டும், எட்டி எட்டி நடவேண்டும், நிலத்தைக் காயப்போட்டு காயப்போட்டு தண்ணீர்விடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதுவே இன்னும் நடை முறைக்கு வரவில்லை. புதிதாக இன்னும் என்ன வேண்டியிருக்கிறது!

இந்தியாவில் ஏற்றுமதி குறைவாகவும் இறக்குமதி அதிகமாகவும் இருக்கிறது. அதனால்தான் விலையேற்றம் ஏற்படுகிறது, மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படுகிறது என்கிறார்களே?

இதற்கு பிரதம மந்திரி என்ன சொல்கிறார், கம்பெனிகாரர்களிடம் எல்லாவற்றையும் கொடுத்து விட்டால் அவர்கள் ஏற்றுமதி செய்வார்கள். இந்தியாவுக்கு நிறைய வருவாய் வரும் என்று. அதையே நிதி மந்திரியும் சொல்கிறார்.

அப்போது இந்திய மக்கள் நிறைய விலை கொடுத்து வாங்கவேண்டியிருக்குமே?

முன்பு கவலைப்பட்டீர்களே, ஏற்றுமதி குறைவாக இருக்கிறது என்று. அதுதான் பிரச்சினை யாகிவிட்டது. இதனால் பெரும் பாதிப்பு வரத்தான் செய்யும். நிறையப் பேர் பட்டினியில் செத்துப் போய்விடுவார்கள்.

போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கக் காரணம் என்ன?

மக்கள் இங்கேயும் அங்கேயும் அலைந்து கொண்டே
இருக்கிறார்கள். அதனால்தான் இவ் வளவு பஸ் விடுகிறார்கள். ரயில் விடுகிறார்கள். அப்போதும் கூட்டம் குறையவே இல்லை. அங் கிங்கு அலைய வேண்டியதில்லை. வள்ளுவன் சொன்னான்: (‘நாடென்ப நாடா வளத்தன’) பெரு முயற்சியின்றி வளந்தரும் நாடே சிறந்த நாடு என்று. ஒவ்வொரு கிராமத்திலிருக்கிற மக்களின் தேவையும் அந்தந்த கிராமத்திலேயே உற்பத்தியாக வேண்டும். திட்டமிட்டு கிராமங்கள் வளரவேண்டும். வேறு வழியே இல்லை. இப்போது கிராமத்தை அழித்துப் பட்டணத்தை வளர்க்கிறார்கள். பட்டணத்தின் சாக்கடையாக கிராமம் மாறிக்கொண்டிருக்கிறது. இது தலைகீழாக மாறவேண்டும். கிராமம் கிராமமாக இருக்கவேண்டும்.

இயற்கை வேளாண் விவசாயம் பற்றிப் படிக்க அரசு தனி கல்லூரி அமைப்பது சாத் தியமா?

அதெல்லாம் வேண்டாம். அதை கிரா மத்து மக்களிடம் போய்க் கேட்டால் சொல்லித் தருவார்கள். கிராமத்தில் செய்து கொண் டிருக்கிறார்கள். வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். அங்கு போய்தான் கற்கவேண்டும். நான்கு சுவர்களுக்குள் இயற்கையைக் கற்க முடியாது.
உயிர்கள் வாழ்வதற்கு அடிப்படை விவசாயம். அதையே ஒழிப்பது இயற்கைக்கு எதிரானது, நோய்களுக்கு வரவேற்பானது என்பதே அனைவரின் கருத்து.

சந்திப்பு : தமிழ்வேல்

நன்றி : புதிய தரிசனம்

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook