பேஸ்புக்கில் 'பாரதி' :

12/11/2013 08:47:00 PM

பாரதியார் ஒரு நாள் பேஸ்புக் வந்தார்,

"காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ் 
கண்டதோர் வையை பொருனைநதி"

என்று ஸ்டேடஸ் போட்டார்.

"அந்த காவிரித் தாயே எங்கள் அம்மா தான்..அம்மா நாமம் வாழ்க!" என்று அ.தி.மு.கவினர் கமெண்ட் போட்டனர்,கடுப்பாகி ஸ்டேடசை அழித்துவிட்டார்.

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"

என்று ஸ்டேடஸ் போட்டார்.

"அந்த வள்ளுவனுக்கு சிலை வைத்ததே எங்கள் கலைஞர் தான்" என்று தி.மு.கவினர் கமெண்ட் போட்டனர்,கடுப்பாகி ஸ்டேடசை அழித்துவிட்டார்.

"சேதமில்லாத ஹிந்துஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா"

என்று ஸ்டேடஸ் போட்டார்.

"சேதமில்லாத ஹிந்துஸ்தானம் அமைய சப்போர்ட் நமோ..!" என்று பா.ஜ.கவினர் கமெண்ட் போட்டனர்,கடுப்பாகி ஸ்டேடசை அழித்துவிட்டார்.

"சிங்களம் புட்பகம் சாவக-மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி"

என்று ஸ்டேடஸ் போட்டார்.

"சிங்களத் தீவிற்குள் தைரியமாய் சென்றது எங்கள் வைகோ தான்"என்று ம.தி.மு.கவினர் கமெண்ட் போட்டனர்,கடுப்பாகி ஸ்டேடசை அழித்துவிட்டார்.

"தங்கள் புலிக்கொடி மீன்கொடியும்-நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு"

என்று ஸ்டேடஸ் போட்டார்.

"உறவுகளே தனி நாடு கிடைக்க ஒரே வழி,நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏந்துங்கள்"என்று நாம் தமிழர் கட்சியினர் கமெண்ட் போட்டனர்,கடுப்பாகி ஸ்டேடசை அழித்துவிட்டார்.

"காதல் புரியும் அரம்பையர்போல்-இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு"

என்று ஸ்டேடஸ் போட்டார்.

"நீங்கள் சொல்வது நாடகக்காதலை தானே?இதை தடுக்கவே எங்கள் அய்யா போராடுகிறார்"என்று பா.ம.கவினர் கமெண்ட் போட்டனர்,கடுப்பாகி ஸ்டேடசை அழித்துவிட்டார்.

"சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"

என்று ஸ்டேடஸ் போட்டார்.

"அப்படி சொல்லுங்கள்,தலித்களின் ஒரே அதிகாரப்பூர்வ அடையாளம் தலைவர் திருமா தான்"என்று வி.சி யினர் கமெண்ட் போட்டனர்,கடுப்பாகி ஸ்டேடசை அழித்துவிட்டார்.

"தெய்வம் நமக்குத்துணை பாப்பா - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா"

என்று ஸ்டேடஸ் போட்டார்.

"உங்க தெய்வம் பாப்பாக்கு மட்டும் தான் துணையா?" என்று புரட்சியாளர்கள் கமெண்ட் போட்டனர்,கடுப்பாகி ஸ்டேடசை அழித்துவிட்டார்.

"செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே"

என்று ஸ்டேடஸ் போட்டார்.

"வொய் திஸ் கொலவெறி" என்று பீட்டர் பெண்கள் கமெண்ட் போட்டனர்,கடுப்பாகி ஸ்டேடசை அழித்துவிட்டார்.

"வெள்ளை நிறத்தொரு பூனை,எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை,அவை பேருக்கொரு நிறம் ஆகும்"

என்று ஸ்டேடஸ் போட்டார்.

"பூனையின் நடத்தை சரியில்லை போல" என்று 18+ பதிவர்கள் கமெண்ட் போட்டனர்,கடுப்பாகி ஸ்டேடசை அழித்துவிட்டார்.அக்கௌண்டையே டீஆக்டிவேட் செய்துவிட்டு சென்றார்.

பின் ஒருநாள் யானையிடம் மாட்டி இறந்து விட்டார்,பேஸ்புக்கில் இருவர் பேசிக்கொண்டனர்,"பாவம் கடைசில அந்த கவிஞர் யானையிடம் மாட்டி இறந்துட்டார்" என்றார் ஒருவர்.

"நல்லவேளை 'கவிஞர்' யானையிடம் மாட்டினாரே,கிசோரிடம் மாட்டாமல்" என்று சொல்லி சிரித்தார் இன்னொருவர்.

"வெள்ளையர்களுக்கு எதிராய் இவர்களை சாதி,மதம்,கட்சி,காம இச்சை,அந்நிய மோகம் தாண்டி ஒன்றிணைத்தோம்,ஆனால் வெள்ளைக்காரன் கண்டுபிடித்த 'பேஸ்புக்' எல்லாவற்றையும் பிரித்துவிட்டதே" பாரதியின் ஆவி ஆதங்கத்துடன் காற்றில் பறந்தது. 


Boopathy Murugesh

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook