மதேந்திர பல்லவன் - (Part II)

12/23/2013 08:32:00 PM

இடைப்பட்ட எந்த நாட்களிலும் இல்லாத மழை, நாங்கள் புறப்படும் ஞாயிறுகளில் மட்டும் வந்து பயணத்தை கெடுக்காத வகையில் லேசாக பெய்து, செல்லும் இடங்களை பசுமையாக்கி, கண்களையும் மனதையும் குளுமையாக்கி, பயணத்தையும் புகைப்படங்களையும் அழகானதாக்கும் மழைத் தோழனுக்கு எங்கள் நன்றிகள். நண்பர் ரமேஷ், நண்பர் மாணிக் ராஜேந்திரன் மற்றும் தோழி ஒருவருடன் மழையும் இணைந்துகொள்ள காலையிலேயே கலைகட்டியது பயணம், தமிழகத்தின் முதல் (?) குடவரைக் கோயிலை காண்பது என்று முடிவு செய்து சென்னையிலிருந்து நேராக விழுப்புரம் நோக்கி பயணித்தோம். "ஓவர் டு ப்ளாக் அண்ட் ஒயிட்".

வருடம் 598, ஐப்பசி மாதம், அந்த இரவு நல்ல மழை பெய்துகொண்டிருந்தது, மகேந்திர பல்லவனுக்கு சரியான உறக்கமில்லை, அரண்மனைக்கு நேர் எதிரில் இருக்கும் அந்த கோயிலை பார்த்துகொண்டே முற்றத்தில் உலவிக்கொண்டிருந்தார். ஏதோ தவறு நடக்கப் போவதாக உள்ளுணர்வு கூறிக்கொண்டே இருந்தது, அதை தடுக்க முடியாது என்பதையும் அவர் அறிந்திருந்தார், யோசித்துக்கொண்டே இருக்கையில், கண் இமைக்கும் நேரத்தில் அந்த பயங்கர சம்பவம் நடந்து முடிந்தது, ஆம், செங்கற்களால் கட்டப்பட்டிருந்த அந்த நூறு வருடம் கடந்த பழமையான கோயில் அந்த பெருமழைக்கு தாங்காமல், அவர் கண் முன்னே இடிந்து மழையில் கரைந்துகொண்டிருந்தது. மிகுந்த மனவேதனை, அன்று இரவு முழுவதும் அவருக்கு தூக்கமில்லை, விடியற்காலை முதல் வேலையாக அரசவைக் கூட்டி மந்திரிகளோடும், சிற்பிகளோடும் ஆலோசிக்கிறார், நான் சமீபத்தில் தான் சைவ சமயத்திற்கு வந்திருக்கிறேன், இதுவரை யாரும் செய்யாத ஒன்றை என் சிவனுக்காக நான் செய்ய வேண்டும், நாம் அவருக்காக எடுக்கும் கோயில்கள் அனைத்தும் பல நூறு வருடங்களை கடக்க வேண்டும், புதிதாக ஏதேனும் நாம் முயற்சிக்க வேண்டும்! இதுவரை யாரும் இங்கு இவற்றை செய்த ஒன்றாக அவை இருக்கக்கூடாது, என்ன செய்யலாம்? கேள்வியை சபை முன்பு வைத்துவிட்டு அமைதியானார் மகேந்திரன்.

சபை தீவிரமாக யோசித்தது, வெகு நேரம் ஆகியும் பதில் இல்லை, சபையின் மௌனம் மகேந்திரருக்கு மேலும் வருத்தத்தை கூட்டியது, நீண்ட யோசனைக்கு பிறகு, சரி நானே ஒரு யோசனையைக் கூறுகிறேன், நம் நாட்டு சிற்பிகள் ஐம்பது பேரை, ஐந்து நபர் கொண்ட குழுவாக பத்து பிரிவுகளாக மலைகளை நோக்கி நாளையே பயணப்படட்டும், அவர்களின் முதன்மையான பணி, "கல்லை குடைந்து கோயிலை செய்யும் படி ஏதுவான பெரிய பாறைகளை தேர்ந்துப்பது தான்" இந்த உத்தரவு மந்திரிகளுக்கு அதிர்ச்சி அளித்தது, கல்லைக் குடைவதா? அது எப்படி சாத்தியம்? வட நாட்டில் இருப்பதை போன்று நம் பாறைகள் மெலிதானவை அல்லவே! இவை அனைத்தும் முரட்டுப் பாறைகள், இவற்றை குடைவது என்பது... " என்று மந்திரி ஒருவர் மேலும் பேச முற்பட.."போதும், இது என் உத்தரவு," என்று ஒரே வார்த்தையில் முடித்தார் மகேந்திரன், அடுத்த நாளே சிற்பிகளின் குழு மலைகளை நோக்கி பயணப்பட்டது, பல நாட்கள் பயணித்து, பல பாறைகளின் மீதேறி, பல குன்றுகளைக் கடந்து, ஒரு இடத்தை தேர்வு செய்து மன்னருக்கு செய்தி அனுப்பியது ஒரு குழு, மற்ற குழுக்களை திரும்ப வரச்சொல்லிவிடலாமா? என்று மந்திரி வினவ, இல்லை அவர்கள் தேடட்டும், சிவன் எல்லா இடங்களிலும் நிறைய வேண்டும்.

சிற்பிகள் தேர்ந்தெடுத்த அந்த குறிப்பிட்ட பாறையை காண மகேந்திர வர்மன் மிகுந்த ஆர்வத்துடன் அடுத்த நாளே புறப்பட்டு அந்த இடத்திற்கு வந்தார், சுற்றிலும் எழில் சார்ந்த மலை, எதிரில் நீர் தடாகம், இந்த காட்சிகள் அவர் மனதிற்கு இதமளித்தது, அஹா, அற்புதம்..என் அருமை சிற்பிகளே நீங்கள் இதுவரை செய்யாத ஒன்றை இங்கு முயற்சிக்கவிருக்கிறீர்கள், இந்த பணி பல மாதங்களுக்கு நீளும் என்பது எனக்கு தெரியும், இந்த பெரும் பாறைகளை குடையும் போது, துகள்கள் தெறித்து கண்கள் கூட குருடாகலாம், சிரமத்தை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு ஒரு வேளை இந்த பணியை நாம் முடித்துவிட்டால், மழையாவது, புயலாவது, இந்த பூமியில் சந்திர சூரியன் உள்ளவரை நம் கோயில்கள் அழியாது என்று கண்ணில் பரவசம் போனகம் உற்சாகமாக பேசினார் மகேந்திரன் .

ஒரு பக்கம் கலக்கமாக இருந்தாலும், மன்னரின் உத்தரவை மீறவா முடியும்? அடுத்த ஒரு சில நாட்களில், இது வரை யாரும் முயற்சிக்காத செயலை சிற்பிகள் அரங்கேற்றத் துவங்கினர், பாறைகளை சதுரம் சதுரமாக வெட்டி, கொஞ்சம் கொஞ்சமாக குடைந்து பல மாத போராட்டங்களுக்கு பிறகு, பெரும் சிரமங்களை கடந்து, தன் மன்னன் விரும்பிய அந்த கோயிலை பல்லவ சிற்பிகள் அவருக்காக முடித்துக்கொடுத்தனர். கோயிலில் மொத்தம் மூன்று கருவறைகள், ஒன்று பிரம்மாவிற்கு, மற்றொன்று விஷ்ணுவிற்கு, அடுத்து சிவனுக்கு, அது மட்டுமா? யாரும் செய்ய முடியாத ஒன்றை தன் மன்னன் முடித்து விட்டான் என்பதால் அவரை "விசித்திர சித்தன்" என்று பெருமையுடன் கற்களில் பொறித்தனர்.

இந்த கதை என் கற்பனையில் உருவானது தான், ஆனால் முதன் முதலில் "செங்கல்,மண், உலோகம்,மரம்" இவை இல்லாமல் "பிரம்மா, விஷ்ணு, சிவனுக்காக ஒரு கோயிலை விசித்திர சித்தனாகிய நான் எழுப்பி இருக்கிறேன் என்று ஆசை ஆசையாக, பெருமையாக கூறும் "மகேந்திர வர்மரின்" கல்வெட்டுகளை இன்றும் நீங்கள் செஞ்சிக்கு அருகே இருக்கும் "மண்டகப்பட்டு" என்ற குடவரைக் கோயிலில் தொட்டுத் தடவிப் பார்க்கலாம். அது என்ன சாதாரண கல்வெட்டா?, அல்ல, 1400 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதனின் மனக் கண்ணாடி, தமிழகத்தில் அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் கட்டப்போகும் 40,000 மேற்பட்ட கற்கோயில்களுக்காக எழுப்பப்பட்ட அடித்தளம்.

1400 வருடங்களுக்கு முன் புதிய ஒரு முயற்சியாக பாறையை கொண்டு குடைந்த அந்த குடவரைக் கோயிலை காணச் செல்லுங்கள். மதேந்திர பல்லவன், அவர் கோயிலை காண வருவோரை கண்ணுக்குத் தெரியாத காற்றாக இருந்து, இன்றும் நம்மை வரவேற்றுக்கொண்டிருக்கிறார்


(தமிழக அரசு செய்ய தவறிய,சோழர்களின் வரலாற்று பொக்கிசங்களை ஆவணப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள திரு சசிதரன் அவர்களின் முகநூல் பதிவிலிருந்து......!)


https://www.facebook.com/SasidharanGS

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook