"மகேந்திர பல்லவர்" உருவாக்கிய மற்றொரு கோயில்

12/23/2013 08:30:00 PM

மேலே கருமேகங்கள், சாலையின் இரு பக்கமும் வயல்கள், பசுமையான கிராமங்களை கடந்து, பலபேரிடம் வழி கேட்டு ஒரு வழியாக அந்த இடத்தை வந்தடைந்தோம், ஊருக்கு வெளியே மலைகள் சூழ ரம்மியமாய் மிக அமைதியாய் ஒரு கோவில் வளாகம். கோயிலின் அருகிலேயே பரந்து விரிந்த ஏரி. பாடல் காட்சிகளை படமாக்க வெளிநாடுகளுக்கு ஓடும் தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள், இது போன்ற இடங்களில் இருக்கும் இந்த மண்ணின் அழகை ஏன் பதிவு செய்வதில்லை என்ற ஏக்கமே அந்த இடத்தை பார்க்கும் போது அதிகமாக இருந்தது.

அதனால் என்ன, இன்றைக்கும் நம் இயக்குனர்களின் கண்ணில் படாத இந்த அழகிய இடம், 1400 வருடங்களுக்கு முன்பே நம் "மகேந்திரர்" கண்ணில் பட்டுவிட்டதே! இவ்வளவு இயற்கை எழில் கொஞ்சும் இந்த அழகான இடத்தை விட்டு வைப்பாரா? உருவாக்கிவிட்டார், அங்கேயும் ஒரு குடவரைக் கோயிலை, நாம் ஏற்கனவே "மண்டகப்பட்டு", "தளவானூர்" ஆகிய ஊர்களில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் "மகேந்திர பல்லவனால்" உருவாக்கப்பட்ட குடவரை கோயில்களை முந்தைய பதிவுகளில் பார்த்தோம், அந்த வரிசையில், அதே "மகேந்திர பல்லவர்" உருவாக்கிய மற்றொரு கோயில் தான் இந்த "அவனிபாஜன பல்லவேஸ்வரம்". தமிழ்நாட்டு குடவரைகளிலேயே மிக அற்புதமான சிறப்புகளை உள்ளடக்கிய குடவரைக் கோயில். அப்படி என்ன சிறப்புகள் இங்கு உள்ளன?

"சீயமங்கலம்" திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம், மகேந்திர பல்லவனின் தந்தை பெயரான "சிம்மவிஷ்ணு" அவர்களின் பெயரைக் கொண்டே உருவானது தான் இந்த "சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்களம்". பின்பு பெயர் மருவி "சீயமங்கலம்" என்றாகியுள்ளது. உள்ளே நுழையும் போதே விஜயநகர மன்னர்கள் காலத்து ராய கோபுரம் நம்மை வரவேற்கின்றது. அதை கடந்து உள்ளே சென்றதும் கோபுரத்தின் வலது பக்கம் மிக அழகான விஜயநகர பாணி மண்டபம் ஒன்றும் உள்ளது, இதையும் கடந்தால் சோழர் கால மண்டபங்கள் கோயிலுக்குள் செல்ல நம்மை வரவேற்கின்றது. இதெல்லாம் என்ன சிறப்பு இது எல்லா கோயில்களிலும் இருப்பவை தானே என்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள் இன்னும் நாம் குடவரைக் கோயிலை சென்றடையவில்லை.

இந்த மண்டபங்களை தாண்டி உள்ளே சென்றால் நம் கண்முனே நிற்கின்றது அந்த 1400 வருட பழமையான மதேந்திர வர்மனின் பொக்கிஷம்!! குடவரை அடைந்ததும் நாங்கள் பட படப்பாக ஒரு விஷயத்தை தேடினோம், எங்கே...எங்கே..எங்கே..இதோ உள்ளது மேற்கு பக்க அரைத்தூணில் இருகின்றது அந்த சிற்பம் என்று ஒரு நண்பர் குரல் கொடுக்க அனைவரும் ஓடிச்சென்று அந்த இடத்தை அடைந்தோம்.

இடது பக்க பூதகணம் கைகளை உயர்த்தி வணங்கியபடி சிவனின் நடனத்தை மெய்மறந்து ரசிக்க, வலது பக்க பூத கணம் சிவன் ஆடும் நடனத்திற்கேற்ப தாளம் இசைக்க ,இரு கால்களிலும் சலங்கை கட்டி, வலது காலை தரையில் ஊன்றி இடது காலை மேலே உயர்த்தி, ஒரு கையில் "பயப்படாதே நான் இருக்கிறேன்" என்கின்ற அபய முத்திரை காட்டி, மறுகையில் தீச்சட்டியும், பரசும் ஏந்தி, தலையில் பிறையுடன் சிவன் ஆனந்த தாண்டவமாடும் படத்தில் இருக்கும் இந்த சிற்பம் தான் தமிழகத்தில் கால் பதித்த "முதல்" ஆடவல்லான்!. பார்க்க கண் கோடி வேண்டுமே!!

அடுத்து அதற்கு நேர் எதிரே இருக்கும் தென்புற இன்னொரு அரைத் தூணில் "ரிஷபாந்திகர்" சிற்பம். சிவனும் பார்வதியும் நந்தியின் மீது சாய்ந்து கொண்டிருக்கும் இந்த அழகான சிற்பமும் இங்கு தான் நாம் முதன் முதலில் காண்கிறோம், இவற்றை எல்லாம் கண்குளிர பார்த்து விட்டு அது சற்று உள்ளே நம் பார்வையை தீர்ப்பினால்..

எங்கள் இருவரில் யார் அழகு? என்று கேட்பதை போன்று அழகான வேலைப்பாடுடன் கூடிய "துவாரபாலகர்கள்" அவர்களின் நகை, உடை, ஆயுதம், நின்று கொண்டிருக்கும் ஒய்யாரம், முகத்தில் இருக்கும் புன்சிரிப்பு, பல்லவ சிற்பிகளே உங்கள கைகளில் அப்படி வித்தை தான் வைத்திருந்தீர்கள்!!!

இவற்றை எல்லாம் கண்குளிர பார்த்துவிட்டு வெளியே வந்தால் ஒரே ஒரு தனி கல்லில் குன்று போல இருக்கும் அந்த பாறையின் மீது ஒரு முருகர் கோயில் இருந்தது, ஏறுவதற்கு படிகள் இல்லை, அந்த பாறையே படிகளை போன்று காலூன்றுவதற்கு ஏற்ப வெட்டி இருந்தார்கள், தைரியம் இருப்பவர் மட்டுமே ஏற முடியும். அந்த மீது ஏறி நின்று பார்த்தால், ஊரின் அழகான தோற்றம், கீழே கோயில் வளாகம், அருகே பறந்து விரிந்த ஏரி, சுற்றிலும் குன்றுகள், அடடா இவ்வளவு அழகான பூமியை படைத்த இறைவன் எவ்வளவு கருணை மிக்கவன் !!

நிம்மதிக்காக கோயில்களுக்கு செல்ல திட்டமிட்டு, வளர்ந்த நிலையில் இருக்கும் பெரிய பெரிய கோயில்களை மட்டும் நாடி, மணிக்கணக்கில் வரிசையில் முண்டியடித்து நின்று, இருக்கும் நிம்மதியை கூட இழப்பதை விட, பல கிராமங்களில், பல வருட பழமையான வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள் ஒளிந்திருப்பதை தேடி பயணியுங்கள். அதில் உங்கள் முதல் பயணம் "சீயமங்கலமாக" இருக்கட்டும், உங்கள் வரவிற்காக தமிழகத்தின் முதல்நடராஜர் அங்கே காத்திருக்கிறார்!.


(தமிழக அரசு செய்ய தவறிய,சோழர்களின் வரலாற்று பொக்கிசங்களை ஆவணப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள திரு சசிதரன் அவர்களின் முகநூல் பதிவிலிருந்து......!)


https://www.facebook.com/SasidharanGS

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook