பாரதியின் கனவுகளுக்கு புத்துயிர் : நனவாகிறது நதிகள் இணைப்பு

11/05/2010 11:12:00 AM

நதிகள் இணைப்பு என்பது இன்றைய அரசியல்வாதிகளின் வாய்ச்சொல்லாக மட்டுமே இருக்கிறது. ஆனால் "வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால், மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்' என பல ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசனம் கண்டவர் பாரதியார். அவரின் கனவுகளுக்கு உயிர் கொடுத்துள்ளது தமிழக அரசு. இதன்படி தென் மாவட்டங்களில் உள்ள 10 நதிகளை இணைக்கும் திட்டம், 3,290 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட உள்ளது.

வட மாநிலங்களில் ஓயாத மழை; வெள்ளச்சேதம்; மீட்பு பணிகள் என செய்திகள் வரும். அதே காலகட்டத்தில் தென் மாநிலங்களில் கடும் வறட்சி என்ற தகவலும் பரபரக்கும். ஒரே நாட்டில் ஒரு பகுதியில் வெள்ள நிவாரணம், மறு பகுதியில் வறட்சி நிவாரணம் என முரண்பட்ட நிலை.

இது தான் தீர்வு: தொடர் மழையால் நதிகளில் உபரி நீர் கடலில் கலக்கும். சில மாநிலங்களில் குடிநீர் பஞ்சம், தலைவிரி கோலமாய் தாண்டவமாடும். இதே நிலை பல ஆண்டுகளாக நீடித்ததால், நதிகள் இணைப்பு என்ற முழக்கம் உருப்பெற்றது. இதற்கு பலதரப்பினரும் உயிர் கொடுக்க, தேசிய நதிகள் இணைப்பு என்ற நிலைப்பாடு வலுப்பெற்றது. பல கட்ட விவாதங்கள், ஆலோசனைகளுக்கு பின், முதற்கட்டமாக தென்னக நதிகள் இணைப்பு என்ற கருத்தும் மேலோங்கியது. வழக்கம் போல சண்டை போடும் நம் அண்டை மாநிலங்கள், ஆரம்ப நிலையிலேயே இக்கருத்தை மண் தோண்டி புதைத்தன. காவிரி நீருக்காக கர்நாடகா, பாலாற்றுக்காக ஆந்திரம், பெரியாறுக்காக கேரளம் என கையேந்தி, அலட்சியம், அவமரியாதைகளால் கூனிகுறுகிப்போய் நிற்கிறது தமிழகம். இப்பிரச்னைகளை சமாளிக்க தமிழக நதிகள் இணைப்பு மட்டுமே, ஒரே தீர்வு என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்த அரசு, இத்திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுத்துள்ளது.

சிறு நதிகள் இணைப்பு: முதற்கட்டமாக சிறு நதிகளை இணைக்கும் முயற்சியை அரசு துவக்கியுள்ளது. தென்மாவட்டங்களில் திருச்சி மாயனூர் கட்டளை கதவணையில் இருந்து காவிரி, மணிமுத்தாறு, வைகை, குண்டாறு உள்ளிட்ட நதிகளை இணைக்கும் திட்டம், 2008-09 ல் அறிவிக்கப்பட்டது. இதற்காக 3, 290 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.இத்திட்டத்தால் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்கள் வளம் பெறும். கடந்த ஆண்டு மார்ச்சில் கால்வாய் அமைப்பதற்கான ஆய்வு பணிகள் துவங்கி, தற்போது முடிந்துள்ளன.

நீங்கும் அபாயம்: காவிரி கட்டளையில் இருந்து அக்கினி ஆறு, தெற்கு வெள்ளாறு, பாம்பாறு, விருசுழி ஆறு, மணிமுத்தாறு, சருகணி ஆறு, உப்பாறு, வைகை, கிருதுமால் நதி, காணல் ஓடை, குண்டாறு என 11 நதிகள் இணைக்கப்படும். இதற்கான கால்வாய் 257 கி.மீ., நீளமுடையது. கால்வாய், காவிரி கட்டளையில் துவங்கும் போது 20 மீ., அகலம், 5 மீ., ஆழம் இருக்கும். முடிவில் 6.4 மீ., அகலம் இருக்கும். கிராம சாலைகளில் 38, மாநில சாலைகளில் ஐந்து, தேசிய சாலைகளில் மூன்று பாலங்கள் மற்றும் நான்கு ரயில்வே பாலங்கள் கட்டப்படும். ஆறுகளின் உயரத்தை கணக்கிட்டு, 25 சுரங்க கால்வாய்களும் அமைக்கப்படவுள்ளன. இத்திட்டத்தின் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில், வெள்ள அபாயம் நீங்கும்.

இதுகுறித்து விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஆதிமூலம் கூறுகையில்,""தென் மாவட்ட நதிகள் இணைப்பால் காவிரியில் உபரியாக செல்லும் நீர், வறட்சி மாவட்டங்களுக்கு கிடைக்கும். இதில் ஒரு "கியு செகண்ட்' க்கு 6,000 கன அடி நீர், 1.17 கி.மீ., (நொடிக்கு) வேகத்தில் வரும் என்கின்றனர் பொதுப்பணி துறையினர். இதன்மூலம் உள்ள ஒன்றரை லட்சம் எக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்,'' என்றார்.

Thanks
Thamilselvan Subramaniam

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook