பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை......!

10/24/2013 08:44:00 PM

ஒரு முறை பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோயிலுக்கு சென்று விளக்கு வைத்து விட்டு வாருங்கள் என்று பதிவிட்டுருந்ததை பார்த்து, வழக்கம் போல் பேஸ் புக்கில் லைக், கமெண்டோடு நிறுத்திக்கொள்ளாமல், சேலத்தில் இருந்து இருசக்கர வண்டி எடுத்துக் கொண்டு, கும்பகோணம் (பட்டீஸ்வரம்) வரை சென்று விளக்கு எரித்துவிட்டு, மேலும் தொடர்ந்து அங்கு பூஜைகள் நடக்க தன்னால் ஆன உதவிகளை செய்து , கோயிலின் நிலையை கண்டு மிகுந்த வருத்தப்பட்டு, "இந்த கோயிலை நாம் சுத்தப்படுத்த வேண்டும்" என்று என்னிடம் தொடர்பு கொண்டு பேசிய திரு. Jagadeeswaran Ganesanனோடு இந்த வாரம் பயணப்பட்டோம், மேலும் ஒரு புதிய நண்பர் எங்கள் குழுவில் இணைந்தது மகிழ்ச்சி.

எல்லாம் நவீனமயமாகிவிட்ட இந்த காலத்தில் 1000 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை தேடி கிராமம் கிராமமாக வெயிலில் அலையும் சுகத்தை விவரிக்க முடியாது, கிராமங்களுக்குள் சென்று "ராஜ ராஜன், ராஜேந்திரன்" என்று பழைய வரலாற்றை அவர்களிடம் பேசும் போது, எங்களை வேற்று கிரக வாசியைப்போன்று மேலும் கீழுமாக பார்பார்கள்.ஒவ்வொரு வாரமும் வரலாற்று சிறப்பான ஏதேனும் ஊருக்கு செல்ல வேண்டும், நாளைக்கு இருப்போமா? தெரியாது, ஆனால் இருப்பதற்குள் பாதியையேனும் பார்த்து விட வேண்டும். இந்த நோக்கத்தில் தான் வார வாரம் எங்கள் பயணம் தொடர்ந்துகொண்டுள்ளது..

அப்படி இந்த வாரம் நாங்கள் தேர்ந்தெடுத்துச் சென்ற ஊர் காஞ்சிபுரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் "பிரம்ம தேசம்" . அப்படி என்ன சிறப்பு இந்த ஊருக்கு?

காடு, நாடு, மலை, கடல் என எத்தனையோ இடம் கடந்து தன்னுடைய வீரத்தால், போர்த்திறமையால், வலிமையான கப்பல் படையால் வடக்கே கங்கை தொடங்கி கடல் கடந்து கடாரம் வரை வென்று சுமார் 5000 கிலோமீட்டர் தூர தெற்காசியாவை தமிழத்தை தலைமை இடமாக கொண்டு ஆண்டு வந்த முதலாம் "ராஜேந்திர சோழன்" தன் கடைசி மூச்சை சுவாசித்த இடம். நாங்களும் அந்த இடத்தை மிதிப்பது என பயணப்பட்டோம்.

ஊரின் எல்லையை நெருங்கும் போது தூரத்தில் வயல்வெளிகளுக்கு நடுவே ஒருஅழகான கோயில் தென்பட்டது. இன்று வரை எப்படி உருவாக்கப்பட்டது என்று தெரியாத மணற்கற்களால் "கம்பவர்மன்" என்ற பல்லவ மன்னனால் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கோவில், அடடா!! என்ன அழகு!! அப்படி என்ன இருக்கின்றது இந்த பல்லவ கலைஞர்களின் விரலில்!!! ஊர் இதனை ஒதுக்கி விட்டதா? ஊரை இது ஒதுக்கி விட்டதா? ஊரின் தெற்கு எல்லையில் உள்ள வயல் வெளிகளுக்கு நடுவே ரம்மியமாக தெரிந்தது "சந்திரமௌலீஸ்வரர் கோவில்". கருவறை மற்றும் அர்த்த மண்டபம் ஆகியவையோடு இருந்த பல்லவ கோவிலை, பின்னர் மகா மண்டபம், திருச்சுற்று மாளிகை, ராஜ கோபுரம் என விரிவுபடுத்தியுள்ளனர் சோழர்கள், பல மன்னர்களால் ஏகப்பட்ட கொடைகளுடன் பஞ்ச காலத்தில் கூட தான் சிறப்பாக விளங்கியதாக ஆங்காங்கே புதர்களுக்குள் கிடந்த கல்வெட்டுகள் கூறியது,

1100 வருடங்களுக்கு முன்பு அவர்கள் என்ன உணர்சிகளோடு செய்தார்களோ அந்த சிற்பங்களை செய்தார்களோ அதே முகத்தோடு இன்றும்..அரக்கியிடம் பால் குடிக்கும் கண்ணன், பிச்சாடனர், நரசிம்மர், ரிஷபத்தை பாசமாக வருடிக்கொடுக்கும் சிவன் என விமானத்தில் இருந்த ஒவ்வொரு சிற்பங்களும் அவ்வளவு அழகாக,நேர்த்தியாக உணர்ச்சிகள் ததும்ப செய்திருந்ததை காண முடிந்தது, இரண்டு இன்ச் இடத்தில் இடுப்பை மடக்கி ஒய்யாரமாக ஆடிக்கொண்டிருக்கும் பெண்கள்!! இது போன்ற திறமையான மனிதர்கள் வாழ்ந்திருகிரார்கள் என சந்தோஷப்படவா அல்லது இவற்றை செய்ய முடியவில்லை என்றாலும் காண்பதற்கு கூட ஆட்கள் இல்லையே என வருத்தப்படவா!! நாங்கள் வந்திருப்பதை பார்த்த அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன் கோவில் சாவியை வாங்கிக்கொண்டு ஓடி வந்து கோயிலை திறந்து காட்டினான். பூஜை ஏதும் நடைபெறாமல் தூசிகள் நிறைந்து காணப்பட்ட சந்திரமௌலீஸ்வரரை கொஞ்சம் காலத்திற்கு முன் இடிந்து கிடந்த கோயிலை தற்போது மத்திய தொல்லியல் துறை முடிந்த வரை காப்பாற்றி சிறப்பாக பாதுகாத்து வருகின்றது.

" பஞ்ச காலத்தில் கூட இந்த கோயிலை இடை விடாமல் எப்படி பராமரிக்க வேண்டும் என்று முன் கூட்டியே திட்டமிட்டு அதற்கு வழிவகை செய்த மன்னர்களின் கல்வெட்டுகள் கிளம்பும் போது நினைவில் நிழலாடியது!! பஞ்சம் பூமி தனில் இருந்தால் சரி ஆனால் மனிதர்கள் நெஞ்சம் தனில் இருந்தால்??


Courtesy- 
Sasi Dharan

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook